படையினரின் பலப்பரீட்சைக் களமாக மாறியுள்ள புதுக்குடியிருப்புச் சமர்க்களம்

வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 45 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான படையினர் தமது பலத்தைப் பரீட்சிக்கின்ற களமாகி இருக்கிறது. விடுதலைப்புலிகளின் ஆட்பலம் 600 ஐ விடவும் குறைந்து போய் விட்டதாக படைத்தரப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

இந்தநிலையில் புலிகளிடம் இருந்து எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் தாக்குதல்களை இராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் படைத்தரப்பு புதுக்குடியிருப்புச் சந்திப்பகுதியை கைப்பற்றியது. பல வாரங்களாக புதுக்குடியிருப்புக்கான சமர் நீடித்து வந்த நிலையில் இரண்டு தரப்பிலும் கணிசமான இழப்புகள் ஏற்பட்டன. தற்போது புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் நேரடியாக 53 வது டிவிசன், 55 வது டிவிசன், 58 வது டிவிசன் மற்றும் 68 வது டிவிசன் ஆகியன ஈடுபட்டிருக்கின்றன.

அதேவேளை 57 வது டிவிசன், 59 வது டிவிசன், 62 வது டிவிசன், 63 வது டிவிசன், 64 வது டிவிசன் ஆகிய ஐந்து டிவிசன்கள் பின்புல நடவடிக்கைகளில் பங்குபற்றி வருகின்றன. புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்பை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் கடுமையாகப் போரிட்டு வருவதாகவும் தமது உச்சக்கட்ட சூட்டுவலுவைப் பிரயோகித்து படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது.

குறிப்பாக புலிகள் தமது சிறப்புத் தாக்குதல் அணிகளைக் களமிறக்கி இருப்பதாகவும் கனரகப் போராயுதங்களைப் பெருமளவில் பயன்படுத்துவதாகவும் படையதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். புதுக்குடியிருப்புச் சமரில் சாலை மற்றும் அம்பலவன்பொக்கணைக்கு மேற்கே உள்ள சமர் முனைகளில் புலிகள் 12.7 மில்லிமீற்றர், 23 மில்லிமீற்றர், 30 மில்லிமீற்றர், கனொன் பீரங்கிகள் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் கூற்றப்படுகின்றது. புலிகள் கனரகப் போராயுதங்களின் மூலம் படையினருக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்த முனைவதாக இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

புதுக்குடியிருப்பே புலிகளின் பிரதான கோட்டையாக இருந்தது. புதுக்குடியிருப்பின் வீழ்ச்சியோடு புலிகளிடம் இருந்த அனைத்துப் பிரதான நகரங்களும் படையினரால் கைப்பற்றப்பட்டுவிட்டன. இப்போது புலிகளிடம் இருப்பது இரணைப்பாலை என்ற புதுக்குடியிருப்புக்கு வடகிழக்காக உள்ள கிராமப்பகுதி மற்றும் கரையோரம் சார்ந்த பாதுகாப்பு வலையப்பகுதிகளிலுள்ள சில சிற்றூர்கள் மட்டுமே. புலிகள் தற்போது இரணைப்பாலையை மையப்படுத்தியே செயற்பட்டுவருவதால் படையினர் அடுத்த கட்டமாக அந்தப்பிரதேசத்தின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

புதுக்குடியிருப்புக்கான சண்டைகள் பல வாரங்களாக நீடித்து வந்தது தெரிந்ததே. தெற்குப் பகுதியால் புதுக்குடியிருப்பை கைப்பற்ற படைத்தரப்பு முன்னர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் வழக்கம் போலவே சுற்றிவளைத்துப் பிடிக்கின்ற தந்திரோபாயத்தின் மூலம் இராணுவம் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றியிருக்கின்றது. 48 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக நீடித்த மோதலின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணியளவில் புதுக்குடியிருப்புச் சந்தியைப் படையினர் கைப்பற்றினர்.

புதுக்குடியிருப்புச் சந்திக்கு மேற்குப் புறத்தால் ஏ35 வீதி வழியாக முன்னேறிய படையினர் தேவிபுரத்திற்கு அப்பால் நகர முடியாதிருந்தது. அதுபோன்றே, தெற்குப் புறத்தால் முன்னேறிய 53வது, 68வது டிவிசன்களாலும் அங்குலம் அங்குலமாகவே நகர முடிந்தது. புதுக்குடியிருப்புச் சந்தியில் இருந்து தெற்குப் புறத்தில் சுமார் 300 மீற்றர் தொலைவில் படையினர் சிலவாரங்களாகவே நிலைகொண்டிருந்த போதும் முன்னகர்வு சாத்தியமானதாக இருக்கவில்லை. அந்தளவுக்குப் புலிகளின் கடும் எதிர்ப்பு இருந்தது.

இந்தநிலையில் புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடமேற்குப் புறத்தால் தேவிபுரத்தின் பின்புறமாக 58வது டிவிசன் கோம்பாவில் ஊடாக முன்னேறியது. கோம்பாவிலில் இருபிரிவுகளாக படையினர் பிரிந்து முன்னகர்ந்தனர். முதலாவது பிரிவு துர்க்கை அம்மன் ஆலய வீதி வழியாக ஏ35 வீதியில் முன்னேறியது. அடுத்தது வடக்கே உள்ள சுப்பிரமணிய வித்தியாசாலை பகுதியில் முன்னேறியது. இதையடுத்து கடந்த செவ்வாய் அன்று காலையில் புலிகள் புதுக்குடியிருப்புச் சந்தியைக் கைவிட்டு பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்தே 53, 68வது டிவிசன்களால் தெற்குப் புறமாக முன்னேறி 58வது டிவிசனுடன் இணைப்பை ஏற்படுத்த முடிந்தது. புதுக்குடியிருப்புக்கு மேற்கே இருந்து 10வது மற்றும் 12வது கஜபா ரெஜிமென்ட்களும் வடமேற்கே கோம்பாவில் பகுதியில் 6வது, 9 வது மற்றும் 12வது கெமுனுவோச் பற்றாலியன்களும் களம் இறக்கப்பட்டன.

அதேவேளை 7வது சிங்க ரெஜிமென்ட் 10வது மற்றும் 11வது இலகு காலாட்படை ஆகியன துணைத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. 58வது டிவிசன் மொத்தம் 8 பற்றாலியன் துருப்புக்களை களமிறக்கிய அதேவேளை புதுக்குடியிருப்புக்குத் தெற்கே 68வது டிவிசன், 1வது கஜபா மற்றும் 4வது விஜயபா ஆகிய இரு ரெஜிமென்ட்களை களமிறக்கியது. மொத்தம் 10 பற்றாலியன் துருப்புக்களை படைத்தரப்பு புதுக்குடியிருப்புக்கான இறுதிச்சண்டையில் பயன்படுத்தியிருந்தது.

9வது மற்றும் 12வது கெமுனுவோச் துருப்புக்களே முதலில் புதுக்குடியிருப்புச் சந்தியை அடைந்தன, அதன்பின்னர் 1வது கஜபா மற்றும் 4வது விஜயபா ஆகிய படைப்பிரிவுகள் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டன. இதன்பின்னர் படையினர் இப்போது கிழக்கே முன்னேற முயற்சிக்கின்றனர், ஆனால் புலிகளின் எதிர்ப்பு கடுமையாக இருப்பதால் நகர்வுகள் மெதுவாகவே இடம்பெறுகின்றன. அதேவேளை புதுக்குடியிருப்பு நகரப்பகுதி சுடுகாட்டை விடவும் மோசமாகக் காணப்படுகின்றது. புதுக்குடியிருப்பு நகரம் அடர்த்தியாக தென்னை மற்றும் பழ மரங்கள் நிறைந்ததொன்று. ஆனால் அங்குள்ள பெருமாபாலான் மரங்கள் இப்போது அழிந்துபோய் இருப்பதாகவும் கட்டடங்கள் தரைமட்டமாக காட்சியளிப்பதாகவும் தெரியவருகின்றது.

இதற்கிடையே புலிகள் கரையோரப்பகுதியால் முன்னேற முனையும் 55வது டிவிசன் படையினரை தடுத்து நிறுத்துவதற்காக பல வலிந்த தாக்குதல்களை கடந்த வாரத்தில் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த தாக்குதல்களை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் புலிகளின் சிறப்பு அணியினர் 55வது மற்றும் 58வது டிவிசன்கள் இணையும் பகுதியில் ஒரு ஊடறுப்புத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதை முறியடித்து 33 புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அதேவேளை இப்போது படைத்தரப்புக்கு கைப்பற்றிய பிரதேசங்களுக்குள் ஊடுருவும் புலிகளின் அணிகள் பெரும் சவாலாக இருக்கின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நகரப்பகுதியில் புலிகளின் பெரியதொரு அணி ஊடுருவிய போது நடந்த 5 மணிநேர மோதல் படைத்தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.

கடந்த திங்கட்கிழமை காலையில் சுண்டிக்குளம் கடற்கரைக் காவலரணில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் இறந்துகிடந்தார். இதையடுத்து படையினர் தேடுதல் நடத்த முற்பட்ட போது இரு பெண்புலிகள் பற்றைக் காடுகளுக்குள் ஓடுவதை படையினர் கண்டனர், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அவர்களில் ஒருவர் காயமுற்றார், காயமடைந்த விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் சரணடைவதற்கான சைகைகளை காண்பித்தார். அவரை நோக்கி இராணுவத்தினர் சென்றபோது தனது உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கவைத்து உயிரை மாய்த்தார். இந்தச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் பலியானார்.

பின்னர் 55வது டிவிசனில் மேலதிக படையினரும் கொமோண்டோ ஸ்குவாட்ரன் ஒன்றும் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. 72 மணிநேர தேடுதலின் போது காடுகளுக்குள் மறைந்திருந்த 3 புலிகள் கடுமையாக சண்டையிட்டனர். முடிவில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் இராணுவக் கொமோண்டோக்கள் மூவரும் பலியாகினர்.

ஏற்கனவே புலிகள் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதிகளில் ஊடுருவி இருப்பது தொடர்பாக படையினருக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பிரிகேடியர் சாஜி கல்லகே முல்லைத்தீவுப் பகுதியில் பின்புலப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைச் சுருக்கி அவர்களை குறுகிய பிரதேசத்திற்குள் முடக்குவதில் படைத்தரப்பு வெற்றி கண்டிருக்கின்றது. ஆனால் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதில்தான் இந்த வெற்றிகளின் இருப்பு தங்கியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

Comments