தமிழீழப் போர் வெல்லப்படுதல் என்பதே நியதியாகிய ஒன்று

'போரே அரசியல் ஆகி விட்ட இன்றைய நிலையிலே போரின் அரசியல் என்றொரு கருத்தியல் இருக்க முடியுமா என்றொரு கேள்வி எழுதல் நியாயமானதுதான். ஆனால், இது கூட போரின் அரசியல் தான். மிக அபூர்வமான ஒற்றுமைத் தன்மை ஒன்றைக் கொண்டு அதேவேளை முற்றிலும் மாறுபட்ட முரண்பட்ட திசையில் பயணிக்க விரும்பும் இருதேசிய இனங்களில் போரின் அரசியல் இது" என்று மூத்த உறுப்பினர் பாலகுமாரன் குறிப்பிட்டது எவ்வளவு பொருத்தமானது என்பதை இன்றைய இந்தக் காலகட்டத்தில் உணர முடிகின்றது.

போர் வேண்டாம் என உலகம் முழுவதும் உரத்துக் கூறுகையில் போரையே முதன்மைப்படுத்தி அதை நம்பியே தனது எதிர்காலத்தைத் திட்டமிடும் சிங்கள தேசம் இன்று என்ன செய்கின்றது என்பதனை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகின்றது. மின்னியல் ஊடகங்களை உலகம் நவீன அறிவியலின் உச்சத்தை எட்டுவதற்கு பயன்படுத்துகையில் சிங்கள தேசம் இந்த நவகாலனித்துவத்தின் அறிவியலை எதற்குப் பயன்படுத்துகின்றது என்பதைப் புரிந்து கொள்ளுதல் சற்றுக் கடினமானது தான். இப்போது சிங்கள தேசத்தில் மின்னியல் ஊடகங்களில் முதன்மை வகிக்கும் அரசின் கொல்லைப்புற ஊடகங்கள் போரக்கோலம் பூண்டு இராணுவப் படையை விட மிகவும் மூர்க்கத்தனமான இனப்போரை எழுத்துக்களின் ஊடகவும், வாய்மொழி செவிநுகர் ஒலி அலைகள் ஊடாகவும் சரியாக வடிவமைத்து ஒவ்வொரு சிங்கள பொது மகனின் செவிக்குள்ளும் விழிக்குள்ளும் மிகவும் வெற்றிகரமாக போர் பற்றியதான ஒருவித மாயையினை அழகாக வெளிப்படுத்த முனைகின்றன. சிங்கள தேசம் வெற்றிகரமாக தமிழர் தாயகத்தினுள் படையெடுப்பை நிகழ்த்துகின்றது என்பது பற்றிய குறியீட்டு அடையாளமே இது.

புலிகள் இயக்கத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு அதனடிப்படையில் இராணுவ நிலைமைகளை ஆய்வு செய்து அபிப்பிராயம் கூறுவதும் பின்னர் அந்த ஆய்வு முடிவுகளுக்கு முரணாக ஆக்கிரமிப்புப் படையினர் மீது புலிகள் நடத்தும் பாரிய ஊடறுப்புத் தாக்குதல்களை ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்த்து அதற்காக தனது மேலாளனான அரசைக் கண்டித்து விட்டு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல் புலிகளைக் குறைத்து மதிப்பிடுவதும் சிங்கள தேசத்து ஊடக ஒழுங்கின் ஒரு பலவீனமாகும்.

வன்னிப் பெருநிலப்பரப்பை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பின்னர் இந்தப் பலவீனமான அம்சம் சிங்கள தேசத்தின் பொதுக்கருத்தாகவே மாறி விட்டது. இதனால் போர் மூலம் தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்ற மகிந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு சாத்தியமான ஒன்று என்றே சிங்கள மக்களும் சிங்கள அறிவுஜீவிகளும் சிங்களத் தேசியவாதமும் முழுமையாக நம்புகின்றது.

இந்தப் பொய்யான கருத்துப் பரப்புரையை எமது மக்களின் ஒரு பகுதியினர் உண்மை என நம்பி குழப்படைகின்றனர். இந்தக் குழப்பத்தைத் தீர்க்க போர் நிலமைகள் பற்றிய - குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்ட பின்னரான போர் நிலமைகள் பற்றிய - தகவல்கள், ஆய்வுகள் என்பனவற்றை உண்மையாகவே எமது மக்களுக்கும் தெரியப்படுத்துவதும் அவர்கள் தெரிந்திருப்பதுவும் அவசியம் ஆகின்றது.

இரண்டு நாட்டின் படைகள் மரபுவழிப் போர்முறையில் போரிடும் போது வெற்றி தோல்வி பற்றி மதிப்பீடு செய்வது சுலபம். எந்தப் படை மற்றைய நாட்டின் எல்லைக்குள் புகுந்து அதன் நிலைகளைக் கைப்பற்றுகின்றதோ அந்தப் படை போரில் வென்று கொண்டிருக்கும் படையாகக் கருதப்படும். இதில் பெருமளவுக்கு கருத்து பேதம் எதுவும் இருக்காது. அதற்காக ஈராக் அமெரிக்க போரை இதனுடன் ஒப்பிட்டு விடாதீர்கள். ஆனால் ஒரு விடுதலைச் சேனையும் ஒரு ஆக்கிரமிப்புப் படையும் போரிடும் போது ஆக்கிரமிப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் விடுதலைக்காகப் போரிடும் மக்களின் பெரும்பகுதி நிலம் அகப்பட வாய்ப்புகள் உண்டு. இந்த இராணுவ அம்சத்தை ஆக்கிரமிப்புப் படை பெற்றுள்ள வெற்றியின் சான்றாகக் கொள்ள முடியாது. ~இதோ வன்னிக் களமுனையில்; ஒரு புலிகளும் இல்லை. கடைசியாய் மிஞ்சிய மாத்தளனும் மகிந்த படையின் கட்டுப்பாட்டுக்குள் விழப் போகும் நிலையில் உள்ளதாக| சிங்களத் தேசத்து ஆய்வாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் எழுத முற்பட்டு இந்த இடத்தில் தான் பெரும் தவறு இழைக்கின்றனர். ஒரு விடுதலைச் சேனையின் போர் வியூகங்களை புரிந்து கொள்ளாமையே வன்னிப் பெருநிலப்பரப்பு யாவும் புலிகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது போலவே கருத்துரைக்கும் இவர்களது இந்தத் தவறுக்குக் காரணமாக அமைகின்றது.

ஒரு விடுதலைச் சேனையானது உச்சப் பலத்தை அடையும் வரை, அதாவது மரபுப்போர் ஆயுதங்களைப் பெற்று, மரபு வழிப் படையணியாக பலம் பெற்று, நிலத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் விடயத்தில் பிடிவாதமாக இருக்க மாட்டாது. மாறாக தனது படைபலத்தைப் பாதுகாப்பதிலேயே பிடிவாதமாக இருக்கும். அதேவேளை, எதிரியின் படைபலத்தை சிதைப்பதிலும் இந்த மக்கள் சேனை தீவிரம் காட்டும்.

அண்மைக் காலத்தில் சிங்களப் படை அடுத்தடுத்து நடத்திய போர் முன்னகர்வுகளின் ஊடாகவும் படையெடுப்புக்களின் பயனாகவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பெரும் பகுதி நிலத்தை படையினர் ஆக்கிரமித்துள்ளனர் என்பது வெளிப்படை. ஆயினும், இந்த ஆக்கிரமிப்பு முயற்சியின் எதிர்விளைவாக இப்போது படையினர் முன்னரை விட அதிகளவில் துருப்புக்களைப் பலிகொடுப்பதுடன் கனரக ஆயுதங்களை இழந்தும் வருகின்றனர் என்ற உண்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த முதலாம் ஈழப்போரில் ஏறக்குறைய 1000 படையினர் பலியாகியிருந்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில் 5000 படையினர் பலியாகி 12,000 பேர் அங்கவீனமாயினர். மூன்றாம் கட்ட ஈழப்போரில் குறைந்த பட்சம் 7500 க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 15,000 பேர் அளவில் அங்கவீனர்களாக்கப்பட்டும் 9,000 பேர் அளவில் காணாமற் போயுள்ளதாகவும் இராணுவத் தரப்பு தகவல்கள் வெளிப்படுத்தியுள்ள அதேவேளை தற்போதைய வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்புக்கு முற்பட்ட காலம் வரை ஆகக் குறைந்த பட்சம் 12,000 படையினராவது கொல்லப்பட்டு 15,000 அதிகமானவர்கள் இயங்கா நிலையிலுள்ள வலுவிழந்த இராணுவத்தினராகவும் 9000 பேர் சாதாரண அங்கவீனர்களாகவும் இருக்கின்றனர் என அண்மைய பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேவேளை 6 ஆண்டுகால போர் ஓய்வின் பின்னர் உருவான விரிந்த போரரங்கில் இராணுவ முன்னகர்வை ஒரு ஆய்வுக்காக எடுத்து மதிப்பீடு செய்தால் கடந்த கால இழப்புக்களை விட இந்த காலகட்டத்தில் படையினர் சந்தித்த ஆள் இழப்புக்களும் படையணி இழப்புக்களும் முன்னிலைத் தளபதிகளின் இழப்புக்களும் மிக மிக அதிகமாகும் என்பதைக் கண்டு கொள்ளலாம். படையினருக்கு ஆள் இழப்பு மட்டுமல்ல. வன்னிப் பெருநிலப்பரப்பில் புலிகள் பின்வாங்கிய பின் நடந்து கொண்டிருக்கும் பரந்து விரிந்த இந்தப் போரரங்கில் சிங்களப் படை சந்தித்து வரும் படைக்கல இழப்பு என்பது பிரமிப்பு ஊட்டக் கூடியது. இந்தக் குறுகிய கால ஆக்கிரமிப்பு போரரங்கில் கடல் தரை வான் என சிங்களப் படை சந்தித்தவையும் இழந்தவையும் ஏராளம்.

இதை மிகத் தெளிவாகச் சொல்வதானால் சிங்கள வான் படை 14 வான் கலங்களை இழந்துள்ளது. வான் கல இழப்புக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப் பட்டாலும் இன்றைய போரரங்கில் அவை அழிந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இதற்குச் சாட்சி அனுராதபுரம். அத்துடன் எட்டு கடற்கலன்களை சிங்களக் கடற்படை இந்தக் காலப்பகுதியில் இழந்துள்ளது. அதேவேளை 26 டிரக்குகளையும் (பரந்தனில் 4, கிளிநொச்சியில் 2, முல்லைத்தீவில் 10, ஏனையவை வௌ;வேறு களமுனைகளில்) என மிகவும் பலம் பொருந்திய இராணுவ அணிகலன்களையே இப்போது நடக்கும் இந்தப் போர் அரங்கில் சிங்களப்படை இழந்திருக்கிறது. இதில் முல்லைத்தீவில் விஸ்வமடு பகுதியில் சிறி லங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் இழந்த ஆட்டிலறிகள், அழிக்கப்பட்ட இராணுவக் குதங்கள் என்பவை மதிப்பிடப்பட முடியாதவை.

சிங்களப் படைக்கு ஆள் இழப்பு, படைக்கல இழப்பு என்பவற்றை உண்டு பண்ணிய விடயத்துடன் வன்னிப் போரரங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பின்னரான போர்ப் பரிமாணம் இன்னும் முற்றுப் பெறவில்லை. போர்த் திறனிலும் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ள போதிலும் புலிகளின் போர் விய+கமும் இராணுவத்தை எதிர்கொள்ளும் போரரங்கின் ஊடறுப்பு வளர்ச்சிகளும் சிங்கள இராணுவத்தை நிலைகுலையவே வைத்துள்ளது. சில வேளை இந்தச் செய்தி படிப்போருக்கு விசனத்தை ஏற்படுத்தினாலும் களமுனை யதார்த்தம் என்பது உண்மையில் இதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

முல்லைத்தள அழிப்பு, விஸ்வமடு ஆட்டிலறி அரங்கு பேரழிவு, பரந்தன் ஆணையிறவு தள ஊடறுப்புச் சமர், முல்லைத்தீவின் கிழக்குப் பகுதி நோக்கிய முன்னகர்வு, கனகராயன் குளம் நோக்கிய ஊடறுப்பு போன்றவை படையினருக்கு எதிரான புலிகளின் போர்த்திறன் வளர்ச்சியை வெளிப்படுத்தி நிற்கிறது. எல்லா முற்றுகைச் சமர்களையும் தவிர்த்து தந்திரோபாயமாக பின்வாங்கிய புலிகளின் படையணிகள் இழப்புக்களைத் தவிர்த்தும், சூழ்நிலைக்கேற்ப இழப்புக்களை எதிர்கொண்டும் நடத்திய போர் அரங்கின் வியூகங்கள் இன்று புதுக்குடியிருப்பின் எல்லையைத் தாண்டி எந்த முன்னகர்வையும் படையினரால் முன்னெடுக்க முடியாத அளவுக்கு நிறுத்தி வைத்து எதிர்கொள்ளும் போர்க்களமாக காட்சியளிக்கின்றது. குறுகிய நிலப்பரப்புக்குள் பெருமழை போன்ற மக்கள் சமுத்திரத்துக்குள் கிட்ட நின்று சுடும் துப்பாக்கிச் சன்னங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு போர்க்களம் இருக்கும் சூழ்நிலையிலும் தலைவர் பிரபாகரனின் நுட்பமான திட்டமிடலும் தாக்குதல் தந்திரோபாய ஆலோசனைகளும் சண்டைப் பயிற்சிக்கான அறிவுரைகளும் இன்று மாத்தளன் வரையான இந்தப் போரரங்கில் திறன்மிக்க முன்னகர்வை முறியடிக்கும் போர்க்களங்களாகவே விளங்குகின்றது. அத்தோடு வன்னிப் பெருநிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்ட பின் புலிகளின் மரபு வழிப் படையணிகளின் போர்ப்பலம் குறுகிய நிலப்பரப்புக்குள் விரிவடைந்த போரரங்கை உருவாக்கியுள்ள அதேவேளை எதிரியை உள்நகர விட்டு பின்வந்து தாக்கும் பெரும்சமர் போரரங்காகவே அது மாறுவதற்கான வாய்ப்பினை உருவாக்கி நிற்கின்றது.

எனவே தான் எதிரிப் படையின் படையெடுப்பு என்பது சிங்களவர்களுக்கு இன்று வெற்றியாகத் தெரிந்தாலும் வரும் நாட்களில் புலிகளின் பயணம் எதிரிக்கு உணர்த்தப் போகும் செய்திகள் என்பது பலரின் புருவத்தை உயர்த்தத் தான் போகின்றது. புலிகளினுடனான போரில் சிங்களவர் தோற்றால்? நினைத்துப் பார்க்கவே முடியாத விளைவு இதுவென இப்போதே சிங்களப் பேரினவாதம் ஊளையிடத் தொடங்கியுள்ளது. உண்மையில் தமிழ் மக்கள் தாம் கொடுத்த உயிரின் விளைவு இப்போது வன்னி மண்ணிலே போரோசையாக உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

எப்படிப்பட்டதொரு அவல வாழ்க்கை எம்மக்களின் மீது திணிக்கப் பட்டுள்ளது? வன்னி மண்ணிலே தொடரான பெரும் படைநகர்வுகளை மேற்கொண்டு எம்மண்ணின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து தமிழ் மக்களின் நெஞ்சக் கூண்டிலே அகல் விளக்காக கனலும் விடுதலைத் தீயைச் சுருக்கி விடலாம், நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழீழ மக்களின் மனப்பரப்பிலிருந்து புலிகளை அகற்றி விடலாம் என சிங்களமும் அதற்குத் துணைப் போகும் சக்திகளும் எண்ணுகின்றன. எப்படிப்பட்ட அறியாமை இது? எப்படியாகிலும் புலிகளை வென்று விட வேண்டுமென்கின்ற பேராசைத் தத்துவம் சிங்களத் தேசத்தை பேயாகப் பிடித்து ஆட்டிப் படைக்கின்றது.

ஆனால், வரலாற்றுத் தாயால் பிறப்பிக்கப்பட்டு இயற்கை அன்னையால் வளர்க்கப்பட்ட தலைவரின் போரின் அரசியலை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டும் தான் உண்மை. எல்லாச் சோதிடர்களையும் அழைத்து சுபயோகம் பார்த்து, பிக்குகள் பிரித் ஓதி நூல் கட்டி ஆசி வழங்க, ஐயப்பன் சன்னிதியில் யானை தானம் கொடுத்து சுபமுகூர்த்த சுபகர்ண வேளையில் காலை 5.30 மணிக்கு தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை வன்னிப் பெருநிலப்பரப்பை எல்லாம் பறிகொடுத்து தள்ளாடித் தள்ளாடி இன்று மாத்தளன் வரை வெற்றிச் சங்கொலியாய் வந்து நிற்பதை பார்த்து சிங்களம் பேருவகை கொள்கின்றது. ஆனால், தமிழீழ மக்களின் தமிழீழ தேசியத் தலைமையின் வேர்களைத் தேடி சிங்களம் இப்போது சன்சூ தொட்டு மாவோ கியாப் சே வரை தேடுதல் நடத்துகின்றது.

தேடிப்பிடித்து சன்சூ சொன்ன யுத்தி ஒன்றை மேற்கோள் காட்டுக்pன்றது. 'எல்லாப் போர்களும் ஏமாற்றுதல் என்பதையே அடிப்படையாகக் கொண்டவை. எதிரியைத் தாக்க முடியும் என்கின்ற போதும் தாக்க முடியாதவன் போலிரு. உனது பலத்தைக் காட்ட முடியும் என்கின்ற போது இல்லாதவன் போலிரு. நெருங்கும் போது தொலைவில் இருப்பவன் போல் தோற்றம் காட்டு பலவீனப்பட்டவன் போல் இரு. அப்போது எதிரி அகந்தையின் உச்சிக்கே செல்வான். அப்போது எதிரியை இரையைக் காட்டி ஈர்த்து இழு இறுதியில் நசுக்கி விடு. இவையே வெற்றிக்கான உறுதியான வழிகள். ஆனால் இப்போதும் எப்போதும் உச்ச ரகசியம் பேண்."

இதனை யார் சொன்னது? சன்சூவா? இல்லை பிரபாகரனா? சிங்களம் குழம்புகின்றது. பொருத்தமான இராணுவத் தலைமை இப்போதுதான் பொருந்தி வந்தது எனக் கூறிய அதே வாய்கள் குறுகிய சந்தரப்பவாத அரசியல் நோக்கத்திற்காக தளபதிகளின் எச்சரிக்கையை கேளாமல் கோத்தாபய நடத்தும் போர் இது என்றும் தனிப்பட்ட ஒருவர் பட்டங்கள் பெற போரை நடத்துவதா என்றும் பொருமுகின்றனர். மறுபுறம் சிங்கள தேசத்தின் எல்லைப் பரப்புக்கள் எல்லாமே தமிழன் இல்லாதவனாக்கப்பட்டு விட்டான் என்ற செய்தி மறுபுறமுமாய் பரிந்துரைப்புச் செய்யப்பட கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நிற்கின்றது சிங்களத்தின் பொருளாதாரம். இது தான் இன்றைய பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் உண்மை நிலை.

தமிழீழத்தின் போரின் அரசியல் சூழலை உற்று நோக்குவோமேயானால் விடுதலைப் போராட்ட வரலாற்றிலே தீர்க்கமான அதேவேளை விடுதலையின் ஒரு வரலாற்றை பிரசவிப்பதற்கான அறுவடையை அர்ப்பணிக்கும் உச்சக்கட்ட சமர்க்களம் ஒன்றைச் சந்திக்கும் பெரும் பொருது களமாக மாறி இருக்கும் வன்னிப் பெருநிலம் விரைவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய மண்ணாக விதந்து பாராட்டப்படப் போகின்றது. இவை வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல. பல்லாண்டு கால வரலாற்றில் விளைபொருள் தான் இவையும். இது தாழ்வுச் சிக்கலல்ல. தாழ்ந்த இனமொன்று தலைநிமிர வேண்டிய சீரின் சிக்கல். ஐதீகங்களோ கற்பனைக் கோட்பாடுகளோ கற்பிதங்களாக ஆக்கப்படவில்லை. மாறாக இது உண்மையான யதார்த்தம். உண்மையில் இது எவ்வாறானது என எல்லோரும் கேள்வி எழுப்பலாம். இதற்கு சில வரலாற்றுக் குறிப்புக்களை வேகமாகப் பார்க்கலாம்.

கிறிஸ்துவுக்கு முன்னர் வன்னியில் சிற்றரசுகள் இருந்தன. யாழ்ப்பாண அரசு எழுச்சி பெற முன்னரேயே வன்னியில் வன்னிமைகள் இருந்தன. இவை அநுராதபுர அரசின் எழுச்சியோடு தளர்வடைந்தன. இத்தகைய வன்னிமைகளில் தற்போதைய வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய அடங்காப்பற்று வன்னிமைகள் முக்கியம் பெறுகின்றன. அடங்காப்பற்று வன்னிமைகளில் பனங்காமம், முள்ளிவளை, வன்னிமைகள் வன்னி மக்களின் சுதந்திரத்தை காப்பாற்ற முக்கிய பங்களிப்புச் செய்தன.

கோட்டை இராச்சியமும் யாழ்ப்பாண இராச்சியமும் அந்நியரால் அடிமைப்படுத்தப்பட்ட பின்னரும் வன்னி இராச்சியங்கள் சுதந்திரமாக இயங்கின. வன்னி நாட்டின் இறுதி மன்னனான குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியன் ஆட்சி புரிந்த இடம் அநேகமாக மேற்குப்பற்று முள்ளியவளை வன்னிமைகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. 1803 ஆம் ஆண்டு கப்டன் வொன்றி பேக் கற்சிலைமடுவில் பண்டாரவன்னியனை தோற்கடித்தான். ஏறத்தாழ 200 ஆண்டுகளின் பின் இப்போது கற்சிலை மடுவில் எதிரியின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. விழுந்து பட்ட தமிழன் வரலாற்றினை எழுந்துபடச் செய்ய தலைவனதும் போராளிகளினதும் பாதங்கள் இங்கே பதிகின்றன. எப்படிப்பட்ட அபூர்வ வரலாற்றுப் பொருத்தம் இது?

எனவே தான் உறுதியாகச் சொல்லுகின்றோம் காலக்கணக்கு இருக்கிறது. தமிழரின் போரின் அரசியல் இது. பண்டாரவன்னியன் வீழ்த்தப்பட்டான் என்கின்ற நடுக்கல்லுக்கு அருகில் சிங்களப்படை வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கே சிங்களச் சேனை சிதறுண்டு சின்னாபின்னமாகும். இங்கே சிங்களச் சேனை வீழ்த்தப்பட்டது என்கின்ற நடுகல்லும் நாட்டப்படும்.

ஏனெனில், புயலென, காற்றாற்று வெள்ளமென சீறிப்பாயும் சிறப்பு கரந்தடிப் படையான கரும்புலிகள் சேனை திடீரெனத் தோற்றம் மாற்றி கனகட்சிதமாக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் மரபுவழிச் சேனையாக மாறி இருநிலைப் பரிமாண போர் வியூகங்களை அமைத்து நவீன அறிவியல் உலகையே பெரும் அதிசயத்திற்குள் தள்ளி தாய்மண்ணை மீட்டெடுக்கும். அதிசயத்திற்குள் ஆழ்ந்திருக்கும் சின்னஞ் சிறிய சிலந்தியின் வலைப்பின்னல் போல வன்னியிலே பிரபாகரனின் பெரும் விசுவாசப் படைகள் இன்று பின்னுவது காப்புவலைப் பின்னல். ஆப்பிழுத்த குரங்கின் கதை மிகப் பழைய நீதிக்கதை இப்போது மீண்டும் எங்கள் தாய் நிலத்தில் அந்தக் கதை புதுப்பிக்கப் படுகின்றது.

போரின் அரசியல் பற்றி சிங்களவர்களுக்கு புத்தர் கூறிச் சென்றது இது. தம்ம பதத்தின் பதினெட்டாவது அத்தியாயத்தில் உள்ளது. அதாவது 'போர் வெறி கொண்டவர்கள் தங்கள் வேரைத் தாங்களே அகழ்ந்தெடுக்கின்றார்கள்."

கொஞ்சம் பொறுங்கள்
கரி காலன்
கண்விழித் தவன்
அவன் விழிகளுக்குள்
பொங்குமா கடல்
புனிதம் பெற்றிட
பூமகள்
தமிழீழத் தாய் அவள்
மகுடம் ஏந்திட
மன்னவன் சேனை
மார்தட்டி களம் புகும்.

Comments