இந்தியாவிற்கு மிக அருகில் நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் சின்னஞ் சிறிய அளவேயுள்ள இலங்கைத் தீவு பன்னெடுங்காலமாக இனச் சிக்கல்களாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் நீடித்த போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவைப் போன்றே இலங்கையும் குறுநில மன்னர்கள், பேரரசுகள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட மண்ணாகும். இந்திய நாடு விடுதலை பெற்ற ஓராண்டிற்குப் பிறகு இலங்கைத் தீவை விட்டும் வெள்ளையர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் வெளியேறினர். சிங்களர்கள் பெரும்பான்மையினராகவும், அவர்களுக்கு அடுத்த நிலையில் தமிழர்களும் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். குமரிக்கண்டம் என்று நிலவியல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்ற மாபெரும் நிலப்பரப்பு இன்றைய இந்தியாவிலிருந்து தெற்கே அமைந்துள்ள குமரி முனையையும் தாண்டி பல மைல் தூரம் ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா வரையிலும் பரவி இருந்தாகக் கூறுகின்றனர். இதற்கான இலக்கியச் சான்றுகள் கூட தமிழிலும், வேறு பல மொழிகளிலும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று சிலப்பதிகாரம் குமரிக்கண்டம் இருந்ததைப் பற்றி சான்று காட்டுகிறது. அண்மையில் ஏற்பட்ட ஆழிப்பேரலை போன்று அப்போதும் மிகப்பெரும் கடற்கோள் நிகழ்ந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பல்வேறு நிலப்பகுதிகள் மூழ்கி, எஞ்சியிருந்த மேடான பகுதிகள் தீவாக மாறியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்தாகும். அது போன்று தப்பித்த நிலப்பகுதிகளுள் ஒன்றே தற்போதைய இலங்கைத் தீவு. அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்று இலங்கையின் வரலாற்றை இயம்பும் சிங்கள காவியமான 'மகாவம்சம்' என்ற நூல் கூறுகிறது. இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து இலங்கைத் தீவிற்கு கடத்தப்பட்ட விஜயன் என்ற மன்னனுக்குப் பிறகே, இலங்கையில் சிங்கள இனம் உருவானது என்பதும் வரலாறு.
இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெற்காசிய நாடுகளை தனது காலனியாதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்த பிரிட்டிஷ் அரசு, அந்தந்த நாடுகளிலுள்ள மலைப்பகுதிகளை தனது தேவைக்காகவும், வணிகத்திற்காகவும் தேயிலைத் தோட்டங்களாக மாற்ற முடிவு செய்தது. இங்கு வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து கடந்த நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கொத்தடிமைகளாகவும், கூலிகளாகவும் தமிழர்களை பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றது. அப்படி இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் மட்டும் சற்றேறக்குறைய பன்னிரெண்டு இலட்சம் பேர் இருப்பர். அவர்கள் தான் மலையகத் தமிழர்கள் அல்லது இந்திய மரபு வழித் (வம்சாவளி) தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு மதம் மாறிய தமிழர்களும் இலங்கையில் சிறுபான்மையினராக உள்ளனர். இஸலாமியராக இருந்தாலும் அவர்கள் தமிழ் மொழியைத் தங்களது அடையாளமாகவே பாவிக்கின்றனர். ஆக, பூர்வ குடித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸலாமியத் தமிழர்கள் என இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சற்றேறக்குறைய 23 விழுக்காடு வரை தமிழர்கள் அங்கு வாழ்கின்றனர்.
அறிவு முதிர்ச்சியிலும், உழைப்புத் திறனிலும் சிங்களர்களை விட மிகவும் மேம்பட்ட இனத்தவராகத் திகழ்ந்ததால், வெள்ளையர் ஆட்சியில் சிறப்பான பங்கு தமிழர்களுக்கு இருந்தது. இதனால் சிங்கள அடிப்படைவாதிகள் தமிழர்கள் மீது இயல்பாகவே பொறாமையும், பொச்சாப்பும் கொண்டு, பல்வேறு வகையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏவினர். இந்த நேரத்தில் இலங்கையை விட்டு வெளியேறிய வெள்ளையர்கள், பெரும்பான்மையினராய் இருந்த சிங்களரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்றனர். இலங்கைத் தீவிற்கு வெள்ளையர் வருவதற்கு முன்னர் தமிழர் பகுதி, சிங்களர் பகுதி எனத் தனித் தனி அரசுகள் இருந்ததை கருத்திற் கொள்ளாது, பிரிட்டிஷார் 1948ஆம் ஆண்டு செய்த மாபெரும் வரலாற்றுப் பிழையால் இன்று தமிழர்கள் நாடற்ற ஏதிலிகளாய் உலகம் முழுவதும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. கண் மண் தெரியாமல் தமிழர்களைக் கொன்று வெறியாட்டம் ஆடும் அளவிற்கு வெள்ளையரின் பிழை, சிங்களப் பேரினவாத அரசைத் தூண்டிவிட்டுள்ளது.
கல்வியில், வேலைவாய்ப்பில், ஆட்சியில், நிர்வாகத்தில், சமூகத்தில் சிங்களர்களுக்கு இருக்கின்ற உரிமையைப் போன்றே தமிழர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று கேட்டு மக்களாட்சி முறையில், அமைதி வழிப்பட்ட அறப்போராட்டங்களை கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் நடத்தி வந்தனர். ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர்களான பொன்னம்பலத்திலிருந்து ஈழத்து காந்தி தந்தை செல்வா வரை எண்ணற்ற மக்கள் போராட்டங்களை, அவர்களின் தலைமையில் நடத்திய போதும் கூட, இலங்கையை ஆண்ட சிங்கள இனவாத அரசுகள், தமிழர்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலையைத்தான் இதுவரை செய்தன, செய்தும் வருகின்றன. இலங்கை மண்ணில் தமிழர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டங்களை ஆயுதம் கொண்டு ஒடுக்குவதில்தான் சிங்கள அரசுகள் முனைந்து நின்றன. மலையகத்தில் வாழும் இந்திய மரபுரிமைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி தந்தை செல்வா தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்ற அறப்போராட்டத்திற்குள் நுழைந்து சிங்களக் காவல்துறையும், போர்ப்படையும் நடத்திய தாக்குதலிலிருந்து இனப் போராட்டம் கூர்மை பெற்றது.
விடுதலை பெற்ற இலங்கையின் முதல் குடியரசுத் தலைவர் டட்லி சேனநாயகா தமிழர்களையும் அவர்தம் உரிமைகளையும் பறித்தெடுப்பதில் முன்னுதாரணம் காட்டினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்கள ஆட்சியர்களும் தமிழர் மீதான இனவாத நடவடிக்கைகளை ஒருவருக்கொருவர் தீவிரமாகவே மேற்கொண்டனர். பல்வேறு அறவழிப் போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்துப் போராடிய போதும் சிங்கள அரசுகள் அவற்றை ஒப்புக்கேனும் கண்டு கொள்ளவேயில்லை. செல்வா-பண்டா ஒப்பந்தம், சாஸ்திரி-பண்டா ஒப்பந்தம், இராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பந்தங்களை வெற்றுத் தாள்களாய்த்தான் சிங்கள ஆட்சியாளர்கள் பார்த்தனர். இதனால் தமிழர்களுக்கு முடிவான தீர்வு கிட்டவில்லை. சிங்கள மேலாதிக்கம் வெவ்வேறு வடிவங்களில் பேருருக் கொண்டு எழுந்ததே தவிர, தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைய இந்திய அரசோ அல்லது பன்னாட்டு அவையோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.
எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் கூட, தங்களுக்கான தீர்வினை எட்ட இயலாத நிலையில், தந்தை செல்வா தலைமையிலான தமிழர் ஐக்கிய முன்னணி கடந்த 1976 மே மாதம், யாழ்ப்பாணத்திலுள்ள வட்டுக்கோட்டையில் தேசிய மாநாடு ஒன்றை நடத்தி 'தமிழீழத் தனிக் குடியரசே தீர்வு' என்பதை தீர்மானமாக அறிவித்தது. அதுமட்டுமல்ல, இதற்கு தமிழர்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய, 1977 சூலை மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்போது அந்தத் தேர்தலில் ஒட்டு மொத்த தமிழர்களும் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, 'தமிழீழத் தனிக் குடியரசு' என்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் வட கிழக்கு மாகாணங்களில் 17 இடங்களில் தமிழர்களின் பேராளர்கள் வெற்றி பெற்றனர். அப்போது தமிழர்களோடு கூட்டணி அமைத்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பெரும் வெற்றியை ஈட்டியதோடு, 85 விழுக்காடு மக்கள் ஆதரவையும் பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அப்போதுதான் இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்மை எதிர்க்கட்சியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இடம் பெற்றது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதற்குப் பிறகும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் விருப்பத்திற்கு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை. இந்த நிலையில் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை கைக் கொண்டு போராட வேண்டிய துரதிருஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல்வேறு தமிழினப் போராளிக்குழுக்கள் தோன்றி சிங்கள இனவாதத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தத் தலைப்பட்டனர்.
தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவாகவும், மரபு வழி உரிமையராகவும் திகழ்ந்த ஈழத் தமிழ் மக்கள் தாங்கொணாத இன்னலுக்கு ஆளாகும்போதெல்லாம், தமிழகம் கொந்தளித்தது. அங்கு தமிழர்கள் கொல்லப்பட்டு, தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இனவாதக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டபோதெல்லாம் தாய்த் தமிழகம் கண்ணீர் உகுத்தது. தனது நூறு கோடி மக்கள் தொகையில் ஆறு விழுக்காட்டளவில் தமிழர்களைக் கொண்ட இந்தியா, அவர்தம் கண்ணீர் துடைக்க என்ன செய்தது? இந்திராவின் காலத்திலிருந்து இப்போதைய மன்மோகன்சிங் காலம் வரை இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது, இலங்கையை இந்திய ஆதிக்கத்தின் கீழ் எப்போதுமே வைத்திருப்பது என்ற ஒற்றை அம்சத்தைத் தவிர வேறு எந்தவிதமான கூறுகளையும் கொண்டதில்லை என்பதை நாம் திட்டவட்டமாக உணர வேண்டும். ஆனால் இந்திரா அம்மையார் சற்றே வேறுபட்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராய் நடப்பது இனப்படுகொலைதான் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததோடு மட்டுமன்றி, அதனைப் பாராளுமன்றத்திலும் வெளிப்படையாக அறிவித்தார். இதுதான் மற்ற பிரதமர்களுக்கும் இந்திராவுக்கும் உள்ள வேறுபாடு.
உலகின் பல்வேறு நாடுகளில் ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பிற எல்லா தேசிய இனங்களைப் போலவே, தமிழர்களும் சிங்களர்களுக்கு எதிராய் ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு சிங்கள அடிப்படைவாதிகளும், அவர்களைத் தூண்டிவிட்டு ஆட்சி நடத்திய சிங்கள அரசியல்வாதிகளுமே முழு முதற் காரணகர்த்தாக்கள். இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராவும், தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் ஈழப் போராட்டத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஈழப் போராளிக்குழுக்களுக்கு பயிற்சிகள் இந்திய அரசால் வழங்கப்பட்டன. தற்போது இலங்கையில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களுக்கு இந்தியாவே முதல் தூண்டுகோலாய்த் திகழ்ந்தது என்பதை ஈழ வரலாற்றின் பக்கங்களிலிருந்து நாம் அறிய இயலும். இந்திரா அம்மையாருக்குப் பிறகு அரியணை ஏறிய இராஜிவ்காந்தி தனது தவறான வெளியுறவுக் கொள்கையின் காரணமாய் ஈழத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படத் தொடங்கினார். இதன் விளைவாக தமிழக மண்ணில் இராஜிவ்காந்தியை இழக்கும் துர்பாக்கியமான நிலை ஏற்பட்டது.
இராஜீவ்காந்தியின் மரணம் நிகழ்ந்தது மிக அண்மையில். இலங்கையில் நடைபெறுகின்ற விடுதலைப் போராட்டத்தையும், இந்திய மண்ணில் நிகழ்ந்த அத் துன்பியல் நிகழ்வையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டு, ஒரு சாரார் இன்றைக்கும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பது, ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் இழைக்கும் இரண்டகமாகும். ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்கும் பட்சத்தில், எல்லாவிதத்திலும் அணுக்கமாய், தோழமையாய், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாய் என்றென்றைக்கும் நிற்கும் ஒரு நாடு இந்தியாவிற்கு அருகில் உருவாகும். உலக வரலாற்றில் இதற்கு எவ்வளவோ முன்னுதாரணங்கள் உண்டு என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். மிக அண்மையில் உருவான கொசொவோவும், சோமாலிலாந்தும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
அய்ரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளில் ஒன்றுதான் செர்பியா. மத்திய மற்றும் தென் கிழக்கு அய்ரோப்பாவில் இந்நாடு அமைந்துள்ளது. வடக்கில் அங்கேரி, கிழக்கில் ருமேனியா மற்றும் பல்கேரியா, தெற்கில் அல்பேனியா மற்றும் மாசிடோனியா ஆகிய நாடுகள் செர்பியாவைச் சுற்றிலும் அமைந்துள்ளன. நிலங்களால் சூழப்பட்ட நாடாக செர்பியா திகழ்கிறது. சோவியத் ஒன்றியம் பேரரசாய்த் திகழ்ந்த காலத்தில் அதன் அணுக்க நாடுகளில் யூகோஸ்லாவியாவும் ஒன்றாகும். யூகோஸ்லாவியாவிடமிருந்து பிரிந்து பல நாடுகள் உருவான சூழலில் செர்பியக் குடியரசின் தெற்குப் பிரதேசமாக இருந்ததுதான் கோசொவோ. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் தன்னை தனி நாடாக கொசொவோ பிரகடனப்படுத்திக் கொண்டது. கொசொவோவில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவர் அல்பேனியர்களாவர். இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்ந்த இம் மக்களை செர்பிய இராணுவம் பல்வேறு வகையிலும் அடக்குமுறையால் ஒடுக்கியது. அல்பேனியர்களுக்கு தேசிய இன உரிமை மறுக்கப்பட்ட செர்பியாவிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டங்கள் பல நடைபெற்றன.
இந்நிலையில் கொசொவோ நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட கொசொவன் விடுதலை போர்ப்படை (ரிலிகி) செர்பிய இராணுவத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடியது. கொசொவோ விடுதலைக்காக அல்பேனியர்களின் போராட்டம் தீவிரமடைந்த வேளையில், பல கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அவையனைத்துமே தோல்வியடைந்தன. அல்பேனியர்களைக் கொன்று குவித்து வெறியாட்டம் ஆடிய செர்பிய இராணுவத்தை நேட்டோவும், அய்க்கிய நாடுகள் அவையும் தலையிட்டு கொசொவோவிலிருந்து வெளியேற்றின. அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவைத் தீர்மானம் பிரிவு 1244ன் படி, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து கொசொவோவின் நிர்வாகத்தை அய்க்கிய நாடுகள் அவை பொறுப்பேற்று நடத்தத் தொடங்கியது. இதற்குப் பிறகும் கூட பல்வேறு அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எவையும் வெற்றி பெறவில்லை. செர்பியாவிற்கும் அய்ரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தங்கள் கூட செர்பியாவால் தன்னிச்சையாக முறித்துக் கொள்ளப்பட்டன.
கடந்த 1989ஆம் ஆண்டு செர்பியாவுடன் இணைக்கப்பட்ட கொசொவோ, தனி நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட கடந்த பிப்ரவரி மாதம் வரை செர்பிய இராணுவ அடக்குமுறைகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இழந்துள்ளது. இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மொத்த மக்கள் தொகை இருபது இலட்சம் பேர் உள்ள கொசொவோ நாட்டில் 8 விழுக்காட்டினர் செர்பியர்களாவர். ஏறக்குறைய 61 ஆயிரம் அல்பேனியர்கள் செர்பிய இராணுவத்தால் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். கொசொவோவின் இந்தப் பிரகடனத்தை அய்ரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் அங்கீகரித்துள்ளன. பெரும்பாலான உலக நாடுகளின் ஆதரவும் கொசொவோவிற்குக் கிடைத்துள்ளது.
சுதந்திர கொசொவோ அமைதிக்காகவும், அந்தப் பகுதியின் உறுதித் தன்மைக்காகவும் உழைக்கும் என்றும், விடுதலை பெற்ற கொசொவோ, மக்களாட்சி மாண்பில் திளைப்பதோடு, அனைத்து இனங்களின் கலாச்சார சமூகமாகவும், மத உரிமைகளுக்கு உரிய மரியாதை அளிக்கும் என்றும் அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மாத்தியின் தலைமையில் அய்க்கிய நாடுகள் அவையால் கடந்த 2007ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் கொசொவோவின் இறையாண்மை பாதுகாக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய மேற்பார்வையின் கீழ் கொசொவோவின் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கொசோவோ நாடாளுமன்றத்தின் தலைமை அமைச்சர் ஹாசிம் தாச்சி அறிவித்த விடுதலைப் பிரகடனத்தை அல்பேனியர்கள் ஒட்டு மொத்தமாக வரவேற்றுள்ளனர். செர்பியக் குடியரசும், இரசியாவும் கொசொவோவின் தனி நாட்டுப் பிரகடனத்தை கடுமையாகக் கண்டித்துள்ளன.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கடும் வறட்சிப் பகுதியாகத் திகழும் சோமாலியா, உள்நாட்டுக் கலவரங்களாலும், போர்களாலும் அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த நாடாகும். கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் சோமாலியாவிலிருந்து பிரிந்து சோமாலிலாந்து என்ற தனி நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. மேற்கில் டிஜிபௌட்டியும், தெற்கில் எத்தியோப்பியாவும், கிழக்கில் சோமாலியாவும், வடக்கில் ஏடன் வளைகுடாவும் சோமாலிலாந்தின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மக்கள் தொகை 35 இலட்சமாகும். பல்வேறு படையெடுப்புகளுக்கு ஆளான சோமாலியாவின் ஒரு பகுதியாய்த் திகழும் சோமாலிலாந்து எகிப்து, இத்தாலி மற்றும் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழிருந்தது. கடந்த 1960ஆம் ஆண்டு சூன் 26ஆம் நாள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து சோமாலிலாந்தின் ஒரு பகுதி விடுதலையடைந்தது. இத்தாலியின் பிடியிலிருந்த மற்றொரு பகுதி சோமாலிலாந்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழிருந்த சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு தற்போதைய சோமாலியா நாடு உருவானது.
சோமாலியா ஒன்றுபட்ட நாடாக மலர்ந்த காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த சோமாலிலாந்தின் மக்கள் சோமாலியாவிற்கு எதிராகப் போராடினர். காரணம், தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், சோமாலிய தேசத்தால், பிரிட்டிஷ் சோமாலிலாந்து மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி போர்க்கொடி உயர்த்தினர். கடந்த 1980ஆம் ஆண்டு வாக்கில் உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமடைந்தது. இந்த நிலையில் தான் 1991ஆம் ஆண்டு சோமாலிலாந்து காங்கிரஸ், சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து தனது விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் தூதரகங்களை அமைத்துள்ளதோடு, பெல்ஜியம், கானா, தென்னாப்பிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நார்வே உள்ளிட்ட நாடுகளோடு அரசியல் உறவினைக் கொண்டுள்ளது. மிக அண்மையில் சோமாலிலாந்தின் தனி நாட்டு உரிமைக்கு மரியாதை அளித்து அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கத் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாய்த் திகழும் இலங்கையில் இன்று நிகழும் போராட்டம், பிற தேசிய இனங்களின் போராட்டத்திற்கு பல படி மேலே நிற்கின்ற ஒன்றாகும். சமத்துவமாய், சகோதரத்துவமாய், இறையாண்மை மிக்க இனமாய், பெரும்பான்மைச் சிங்களர்களோடு உறவு பாராட்டி வாழுகின்ற உரிமையைக் கோரி, ஈழத்து காந்தி செல்வா தலைமையில் அமைதி வழிப்பட்ட போராட்டத்தையே இலங்கை மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் நடாத்தி வந்தனர். ஆனால் சிங்களப் பேரினவாதம் அவற்றையெல்லாம் கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாது தமிழர் என்ற இனத்தை பூண்டோடு கருவறுப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தமையால் தான் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தம் உடலை இலங்கை மண்ணுக்கு உரமாய்த் தந்துள்ளனர். ஒவ்வொரு ஆட்சியும் மாறும்போது தங்களின் வாழ்வில் மாற்றம் வாராதா என்று ஏங்கி ஏங்கி பதுங்கு குழிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஈழத் தமிழினம்.
அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி வறுமைச் சூழலில் பெரும்பான்மைத் தமிழர்களை வாட வைத்துக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதம், தமிழ்ப் பெருங்குடியைக் கொன்று குவிக்க ஆயுதம் வேண்டி உலகமெல்லாம் கையேந்தி நிற்கிறது. உலக நாடுகள் எவையொன்றின் ஆதரவும் இன்றி தனித்த இனமாய் போர்க்களத்தில் தமிழினம் வீறு கொண்டு நிற்கிறது. குறைந்த பட்சம் நூறு அப்பாவித் தமிழர்களாவது சிங்களப் போர்ப்படையால் நாள்தோறும் கொல்லப்படுகிறார்கள். தமிழர் உரிமைக்கு ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுக்கும் இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்கள், சிங்கள இனவாதத்தால் கொன்றொழிக்கப்படுகிறார்கள். அதனைத் தட்டிக் கேட்கும் அறிவாணர்களும், பத்திரிகையாளர்களும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
பல்வேறு இன மக்கள் கலந்து வாழும் ஒரு நாட்டில் ஓரினத்தின் வாழ்வுரிமையை பறிக்க நினைக்கும் ஆதிக்க இனங்களின் அத்துமீறல் நாட்டுப் பிரிவினைக்கு வித்திடும் என்பதற்கு கொசொவோவும், சோமாலிலாந்தும் மிக அண்மைய எடுத்துக்காட்டுகளாகும். கடந்த 1945ஆம் ஆண்டு சட்ட வரையறைக்குட்பட்ட சுயநிர்ணய உரிமைக்கு அய்.நா.அவை ஏற்பளிப்பு வழங்கியிருக்கிறது. 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பார்சிலோனா நகரில் யுனெஸ்கோவால் நடத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை தொடர்பான மாநாட்டில் கூட, 'சுயநிர்ணய உரிமை என்பது தேசியங்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொள்ளாமல், அவற்றிற்கிடையே இருக்கும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய இனங்கள், அவைகளுக்கு உரிய மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் என்பதை அத் தேசிய இனம் சார்ந்த மக்கள் விரும்புவது எவ்வகையிலும் நிராகரிக்கக்கூடியது அல்ல.
மக்களாட்சியின் மாண்பு குறித்த புரிதலின்றி ஒன்றை மற்றொன்று அடக்கியாள்வதால் நேரக்கூடிய விளைவுகள் தேசிய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை ஆதிக்க சக்திகள் உணர மறுக்கின்றன என்பதற்கு பல நாடுகளை உதாரணமாகக் கொள்ள முடியும். சூரியன் மறையாத பேரரசைக் கொண்டு திகழ்ந்த பிரிட்டிஷ் பேரரசிலும் கூட இப்போதும் தனி நாடு கேட்டுப் போராடுகின்ற தேசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களும் விதிவிலக்கல்ல. மக்களும், நாடும் ஒன்றுபட்டு வாழ வேண்டுமானால் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ள ஆதிக்க எண்ணம் வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டும். தனி மனித எண்ணத்தில் விளையும் இந்த மாற்றமே நாளை தேசத்தின் மாற்றமாக முகிழ்க்கும். வங்கக்கடலில் மிதந்து கொண்டிருக்கும் தமிழினத்தின் கனவுகளும், உரிமைகளும், அடிப்படையான வாழ்வியலும் இந்தியப் பேரரசால் மட்டுமே நிஜமாவதற்கான சாத்தியங்கள் உண்டு. அதனையே இந்த உலகத்தில் வாழுகின்ற அனைத்துத் தமிழர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் இறையாண்மை என்பது அந்நாட்டில் பெரும்பான்மையாய் வாழுகின்ற சிங்களர்களின் இதயங்களிலும், இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் கைகளிலும்தான் இருக்கிறது.
- இரா.சிவக்குமார் (rrsiva@yahoo.com)

Comments