பாடையில் தொண்டர்கள், மேடையில் தலைவர்கள்



மரணவீட்டுக்கு வந்தவர்கள், ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பார்கள். என்றுமில்லா அக்கறையோடு அளவாவுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொள்ளாது போய்விடுவார்கள்.ஏறக்குறைய இதே நிலையில் தான் தமிழகத்தில் அரசியற் கட்சிகளின் ஈழத்து எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் இன்றிருக்கின்றன. கடந்த மாதங்களில் ' இன்று தமிழமெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக...' என்று ஏதாவது ஒரு போராட்டத்தைத் தினமும் ஒரு கட்சி நடத்திக்கொண்டிருந்தது.

தினமும் மற்றக்கட்சிகளிடமிருந்து மாறுபட்டுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே புதிய புதிய வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நடத்துவதற்குரிய வடிவத்தை உட்கார்ந்து யோசிப்பாங்களோ என எண்ணும் வகையில், புதுப் புது வடிவங்களில் போராட்டங்கள் நடந்தன.


இன்று எல்லாம் மறந்து போனது. இதற்காக ஈழத்தில் எல்லாம் சரியாகி விட்டதென்பதோ, அல்லது அப்பிரச்சனையை தமிழக மக்கள் மறந்துவிட்டார்களோ என்பது பொருளாகாது. ஈழத்தில் மக்கள் இறப்பதும், தமிழக்கத்தில் உறவுகள் தீக்குளிப்பதுவும் நடந்து கொண்டுதானிருக்கிறது.அனாலும் தமிழக மக்களின் அரசியற் தலைமைகளுக்கு அதற்குமப்பால் தமது இருப்புக்கான பிரச்சனை வந்துவிட்டது. துக்க வீட்டில் சொல்லிக்கொள்ளமல் செல்வது போல் எல்லோரும் சென்றுவிட்டார்கள். அவர்கள் பின் திரண்ட தொண்டர்கள் பாவம் திக்கித்துப் போனார்கள். சிலர் தீயில் போகிறார்கள். தலைவர்கள்தான் என்ன செய்வார்கள் பாவம். இலங்கையில் தினமும் துக்கவீடாயின் அவங்கதான் என்ன செய்ய முடியும். அவங்க பொழப்பை பார்க்க வேணாமா..?அதாருப்பா அங்க, 'நாயும் பொழைக்குமிந்தப் பொழைப்புன்னு...' மேடையில் பேசினாங்களேங்கிறது. அது ஒரு பேச்சுக்குச் சொன்னதப்பா. அப்படிக் கூடச் சொல்லேன்னா எப்புடி ஒங்கிட்ட கைதட்டு வாங்குறது..? அவுங்க மேடையில் சொன்னாங்க என்கிறதுக்கா நீ போயி பாடையில படுத்துக்குவியா...? இப்படித்தான் போகிறது தமிழகத்தின் இன்றைய நாட்கள்.

ஈழத்துத் தமிழர்களை சிங்கள அரசியற் தலைமைகள் அடித்துக் கொல்கின்றன என்றால் தமிழக மக்களை அரசியற் தலைகள் நடித்துக் கொல்கின்றன என்றுதான் சொல்ல வேண்டுபோலுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னால் அந்தக்கட்சியுடன் இனி எப்போதும் கூட்டு இல்லை எனக் கூறியவர்கள். கூடிக் குதுகலிக்க முனைவதும், நாட்டுக்குதவாத் தலைவரெனக் கூறியவரையே நண்பர் என கொண்டாடுவதும், எப்போது வந்தார் அவர் எனக் கேட்டவரையே, எப்போதும் வேண்டும் நம் உறவென உறவாடுவதும் வேடிக்கையாக இல்லை?. இதை வேறு என்னவென்று சொல்வது ?.

நன்றாகவே தெரியும். பாவிகளா! உங்களிடம் இதற்கு நியாயம் கேட்டால் 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..' எனக் கவுண்டமணி பாணியில் சிரித்துக் கொண் டே சொல்வீர்கள் என்பது நன்றாகவே தெரியும்.ஆனாலும் ஒன்று..'உசுப்பேத்தி உசுப்பெத்தி உடம்பு ரணகளமாப் போச்சுன்னு.. ' வடிவேல் பாணியில் உங்கள் தொண்டர்களை, தோழர்களை புலம்பவைக்காதீர்கள். ஏன் இந்த மாயாமாலப் பேச்செல்லாம். உங்களால் எது முடியுமோ அதை மட்டுமே பேசுங்கள், அதை மட்டுமே செய்யுங்கள். அதற்கப்பால் உங்கள் உண்மை நிலை என்னவென்பதை மறுத்து உணர்ச்சிவசப்படப் பேசாதீர்கள். ஏனென்றால் உங்களின் உணர்சிக்குமுறல் வேஷங்கட்டலை நம்பி வரும் வெள்ளந்தி மனசுக்காறத் தொண்டன் விட்டில் பூச்சியாய் செத்துப் போகின்றான். நீங்கள் மேடைகளில், வீரர்களென வேஷங்கட்டி முழங்க முழங்க, உங்கள் விசுவாசத் தொண்டர்கள், வீதியிலே விழுந்து, தீயினிலே கருகி, பாடையினிலே படுத்துறங்கிப் போகின்றார்கள்.

நாங்களுந்தான் வேண்டாமென்கிறோம் என்பீர்கள். நன்றாகவே தெரியும், நீங்கள் அப்படித்தான் சொல்வீர்கள். ஆனாலும்அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தொண்டர்கள் தீக்குளித்து மாண்டு போவது ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல, உங்கள் கையாலாகத்தனத்தைக் கண்டிக்க முடியாமலும், தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாமையிலும் கூடச் செத்துப் போகின்றார்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

தீக்குளித்து மாண்டு போக நினைக்கும் தோழனே! தொண்டனே! ஒரு கணம் நின்று நிதானித்துக்கொள். உன் சாவும், வீழ்வும், இந்தக் கட்சிஅரசியலில் கணபரிமாணம் காட்ட முடியாதவை.உன்னுடைய இழப்பு, உண்மையிலேயே உன் குடும்பத்துக்கானது. அவர்களைத் தவிர அது யாரையும் பாதிக்கப் போவதில்லை. மலர்வளையம் வைத்து மரியாதை செய்வதோடு உன் கட்சித் தலைமையின் கடமை கடந்துவிடும். யார் கண்டார் இனிவரும் காலம் தேர்தற்காலம்,உன் இறுதி அஞ்சலிக்குக் கூடத் தலைவர் வரமுடியாதவாறு போய்விடும். எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதென்பதிலோ ?, எந்தத் தொகுதியில் சீட்டுக் கேட்பதென்பதிலோ அக்கறைகொணடவர் அப்பால் போய்டவிடக் கூடும். அப்புறம் என்ன போ..

வாழ்தலை மறுப்பதை மற. உன் வாசல் தேடி வாக்குக்காக வரும்போது, வாய்விட்டுக் கேள் உன் நியாயத்தை. உன் தலைமையிடம் நம்பிக்கையிருந்தால், வார்த்தை மாறேன் என்ற வாக்கை, வாக்குக்காகப் பேரம் பேசு. வாழ்ந்து பார். உன் வாக்கைப் பெற்று தன் வாக்கை தலைமை காப்பாற்றாவிடின் மீண்டும் கேள். ஏனென்றால் மீண்டும் ஒரு தேர்தலுக்காகவோ அல்லது தேர்தல் முடிந்தபின் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர் பெயராலோ எழுந்து வருவார் உன்னிடத்தில். அப்போது கேள்... அதற்கு நீ உயிரோடிருக்க வேண்டும். வாய்விட்டுக்கேட்டவர்களையெல்லாம் வாளாதிருக்கும்படி சிறைக்கம்பிகளுக்குப் பின்னடைத்துவிட்டார்கள் உன் தலைவர்கள். வாய்விட்டுக் கேட்கக் கூடியவர்ளெல்லாம் வாய்க்கரிசி வாங்கிச் சென்று விட்டால் யார் கேட்க முடியும் நியாயம். ஆதலால் அதற்காகவேனும் நீ உயிரோடிருக்க வேண்டும். உன் கண்ணால் பிறருக்காய் அழத் தெரிந்தவனே, உண்மை உணர்வு வாழ, நீ உயிரோடிருக்க வேண்டும்.

- நாகன்

Comments