சுவிஸ்
இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நிலைமை சுவிற்ஸர்லாந்திற்கு கவலையளிக்கும் விடயமாக உள்ளது என அந்த நாட்டின் பிரதிநிதி முயூரியல் பேர்செட் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெயர்ந்தோரின் நிலை மோசமடைவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரையும் மனிதாபிமானச்சட்டங்களை மதிக்குமாறு சுவிற்ஸர்லாந்து கேட்டுக் கொள்கிறது எனவும் அவர் சொன்னார். படுகொலைகள் மற்றும் பலவந்தமா கக் காணாமற்போகச் செய்யப்படுதல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவது மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதில் இலங்கை அரசுக்கு உள்ள கடப்பாட்டையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
பிரான்ஸ்
இலங்கையின் நிலைவரம் குறித்து தாம் மிகுந்த அச்சம் அடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ள பிரான்ஸின் ஐ.நா. பிரதிநிதி, மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் மோசமான நிலைகுறித்து, தான் மிகுந்த வேதனை அடைகிறார் எனவும் குறிப்பிட்டார். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் செய்யவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் இன மோதலுக்குத் தீர்வு காண்பதற்கு அரசியல் நடைமுறைகளை முன்னெடுப்பது மிக முக்கியமானது. இலங்கையின் உள்நாட்டில் மோதல் தீவிரமடைந்துள்ளதையடுத்து மனித உரிமை நிலைவரம் மோசமடைந்துள்ளது எனப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஜப்பான்
இலங்கையின் வட பகுதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் கடும் சேதங்கள் குறித்து ஜப்பானின் பிரதிநிதி சினிச்சி கிடஜிமாவும் கவலை வெளியிட்டுள்ளார்.
கனடா
இடம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச கொள்கைகளைப் பின்பற்றி இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளை மதிக்குமாறு இலங்கைகையைக் கனடா கேட்டுக்கொண்டது.
பிரிட்டன்
பிரிட்டனும் இலங்கை நிலை குறித்து மனித உரிமை கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் கவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் பிரதிநிதி மெலெனி ஹொப்கின்ஸ் காணாமற் போதல், படுகொலைகள், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் பரந்துபட்ட அளவில் காணப்படுகின்றன என நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவும் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள 2 இலட்சம் பொதுமக்கள் குறித்துக் கவலை வெளியிட்டுள்ளது. சகலரதும் பிரச்சினைக்கும் தீர்வைக் காணும் வகையில், அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வைக் கொண்டுவரும் என்றும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி போன்ற நாடுகளும் மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் குறித்த தமது கடும் கவலையை வெளியிட்டுள்ளன.
Comments