"மன்மோகன் சிந்தனை'யும் ,மகிந்த சிந்தனையுமே யுத்த முன்னெடுப்புக்கு பிரதான காரணம்-கலாநிதி விக்கிரமபாகு

யுத்த முன்னெடுப்புகளுக்கு மகிந்த சிந்தனை மட்டுமல்ல மன்மோகன் சிங் சிந்தனையும் பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி முன்னணியின் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், அரசாங்கம் அதெல்லாவற்றையும் மூடிமறைத்து யுத்த சிந்தனையை திணித்துக்கொண்டிருக்கின்றது.

இன்றைய ஆட்சியாளர்களின் சகல நடவடிக்கைகளிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கமே உச்சத்தில் காணப்படுகின்றது.

மாகாணசபை முறை முதன்முதலில் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியவர்களே இன்று அதன் சுகபோகங்களை அனுபவிக்கும் யுத்த வெற்றியை காட்டி தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

ஆனால், மாகாணசபைக்கு பொலிஸ், காணி அதிகாரம் என்பன இதுவரை வழங்கப்படவில்லை. இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன்(பிள்ளையான்) வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் ஆதரவுடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகியுள்ள பிள்ளையான் இன்று அரசாங்கத்தின் ஒரு சிற்?ழியர் மாதிரியே செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே தனக்கு எந்தவொரு அதிகாரமுமில்லை. கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளேன் என்று பல தடவைகள் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை நிர்வாகத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் இந்த தேர்தலில் குறிப்பாக ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து இடதுசாரி முன்னணியை பலப்படுத்துவதன் மூலமே இன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறை அரசியலை கட்டுப்படுத்த முடியும்.

இலங்கையின் காலனித்துவ ஆட்சிமாற்றத்திற்கு பின்னரான ஆட்சியதிகாரத்தின் வரலாற்றில் என்றுமில்லாதளவுக்கு இன்று அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் உண்மை நிலைவரங்களை அறியமுடியாதவாறு கருத்து சுதந்திரம் முற்றாக அடக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு நிறைந்த பிரதேசங்களில் வைத்து ஆயுதபாணிகளால் கடத்தப்படுகின்றார்கள், கொல்லப்படுகின்றார்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

இதனைவிட கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தின் கிழக்கு பகுதியான சம்பூர் வடக்கில், யாழ்.குடாநாட்டின் பலாலி என்பன இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டு அந்த நாட்டின் காலனியாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

வன்னியில் யுத்த பேரழிவுக்குள் சிக்குண்டுள்ள பெரும்பாலான பொதுமக்கள் விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று அரச தரப்பு கூறுகின்றது. உண்மை நிலைவரம் அதுவல்ல. அச்சம் காரணமாகவே அவர்கள் வெளியேற தயங்குகின்றார்கள்.

ஏனெனில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பி வேலி திறந்த சிறைச்சாலைக்குள் முடக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வெளியுலக தெடர்புகளிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள முட்கம்பி வேலி சிறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் அவலநிலை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் பிரதிப் பொதுச்செயலாளர் ஜோன் ஹோம்ஸ் கூட தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசிடம் நாட்டின் பிரதான பிரச்சினையான இன நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்கான எந்தவொரு தீர்வுமில்லை யுத்தசிந்தனை மட்டுமே இருக்கின்றது.

இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கு எதிராக அயல் நாடான இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியடைந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் மலையகத் தமிழர்கள் உணர்வுகளை அரசுடன் ஒட்டி உறவாடுவோர் தடுத்து வருகின்றனர். தமது அரசியல் நலன்களுக்காக என்பதால் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே இன்றைய ஆட்சியாளர்களின், அனைத்து மக்களுக்கும் எதிரான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர இடதுசாரி முன்னணியை பலப்படுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீ.திருநாவுக்கரசு

இடதுசாரி முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வீ.திருநாவுக்கரசு விளக்கமளிக்கையில் கூறியதாவது;

இன்றைய ஆட்சியாளர்களின் மகிந்த சிந்தனையென்ற யுத்தசிந்தனையை பலப்படுத்த வழிவகுத்து கொடுத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியாளர் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யுத்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்துக்கொண்டேயிருக்கின்றது.

ஐக்கியதேசியக் கட்சியுடன் உறவாடும் தமிழ் கட்சித் தலைவர்களும் தமது அரசியல் சுயநலன்களையே முன்னிலைப்படுத்துகின்றனர். யுத்தத்திற்கு எதிராக குரலெழுப்புபவர்கள் இடதுசாரி முன்னணியினர் என்பதை தமிழ் பேசும் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகம் முற்றாக விழுங்கப்பட்டு அச்சமும் பயபீதியும் மேலோங்கிக் காணப்படுகின்ற இன்றைய சூழலில் யுத்தத்திற்கு எதிராக குரலெழுப்பும் இடதுசாரி முன்னணியை குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டாளர் பைசால், வேட்பாளர் மாணவஜீவன் முனியாண்டி, ஊடகத்துறை தொழிற்சங்க ஒன்றியத் தலைவர் லங்காபேலி, ஆசிரியர் குழு உறுப்பினர்களான நடராஜா ஜனகன், ஆர். மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments