ஊடறுக்கும் புலிகளின் அணிகள்; தடுமாறும் இராணுவ போருபாயம்

e0ae8ae0ae9fe0aeb1e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d-e0aeaae0af81e0aeb2e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d-e0ae85e0aea3e0aebfபுதுக்குடியிருப்பு புலிகளின் பிரதான கோட்டையாக விளங்கிய நகரம். புலிகளிடம் இருந்த அந்தக் கடைசி நகரத்தையும் படையினர் கடந்த 3 ஆம் திகதி கைப்பற்றி விட்டனர். புலிகளின் மிக முக்கியமான இந்த நகரத்தைக் கைப்பற்றிய படையினர், இதுவரையில் அங்கு சிங்கக் கொடியேற்றும் நிகழ்வை நடத்தவில்லை. மடு, மல்லாவி, பூநகரி, மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு போன்ற இடங்களைப் பிடித்ததும் அங்கு சிங்கக்கொடி ஏற்றும் நிகழ்வுகளை நடத்திய படைத்தரப்பு இதுவரையில் புதுக்குடியிருப்பில் அத்தகைய நிகழ்வை நடத்த முடியாதுள்ளது.

ஏன் இந்த நிலை என்ற கேள்வி இதன் மூலம் எழுகின்றது. படையினர் சொல்வது போன்று புதுக்குடியிருப்பு இன்னமும் படையினரிடம் முழுமையாக வீழ்;ச்சியடையவில்லை என்பது ஒரு காரணம், அங்கு தொடர்ந்து கடும் சண்டைகள் நடக்கின்றன என்பது இன்னொரு காரணம்.

புதுக்குடியிருப்பு நகரத்தின் வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகளில் இன்னமும் புலிகளின் கடும் முறியடிப்புச் சமர்களைப் படையினர் எதிர்கொண்டிருக்கின்றனர்.

ஈழப்போர் - 4 இல் இதுவரை நடந்துள்ள சமர்களை விட, மிக மோசமான சமர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

புலிகள் புதுக்குடியிருப்பை மீளக் கைப்பற்றும் தாக்குதல் மற்றும் படையினரின் முன்னேற்றங்களைத் தடுக்கின்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதோடு, அலை அலையாகத் தினமும் பாரிய ஊடறுப்புச் சமர்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி பிரிகேடியர் பிரசன்ன சில்வாவைத் தளபதியாகக் கொண்ட 55 ஆவது டிவிசன் படையினர் சாலையின் தென்புறத்தில் இருந்து, சிறிய கடலேரித் தொடுவாய் ஒன்றைக் கடந்து பழைய மாத்தளன் நோக்கி முன்னேறியிருந்தனர்.

புதுமாத்தளனுக்கு வடக்கே 4 கி.மீ. தூரம் வரை முன்னகர்ந்த படையினரை பின்தள்ளும், அவர்களுக்கான விநியோகங்களைத் துண்டித்து நெருக்கடியை உண்டாக்கும் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, தேவிபுரத்தின் பின்புறத்தில் சாலை நோக்கிச் செல்லும் வீதியை அண்டி, சாலைக்கு தென்மேற்கு மற்றும் பழைய மாத்தளனுக்கு வடமேற்குத் திசைகளில் முன்னகர்ந்து நிலை கொண்டிருக்கின்ற 58 ஆவது டிவிசன் படையினர் மீதும் புலிகளின் மிகத் தீவிரமாக ஊடறுப்புத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

அதேவேளை புதுக்குடியிருப்புக்குக் கிழக்கேயும் புலிகளின் அணிகள் ஊடறுப்புச் சண்டைகளை நடத்தியிருக்கின்றன.

கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் கடல் மற்றும் கடல்நீரேரி, தரை ஆகிய பகுதிகள் வழியாகப் புலிகளின் அணிகள் அணி அணியாக, அலை அலையாக இந்த அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இம்மாதம் 1 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட பெரும்பாலான நாட்களில், புலிகள் இந்த வலிந்த ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தினமும் பெருமளவிலான படையினர் கொல்லப் படுகின்றனர். பெருமளவில் காயமடைகின்றனர்.

புலிகள் இயக்கத்தில் 400 பேரே எஞ்சியிருப்பதாக அரசாங்கம் கூறியிருந்த நிலையில், அவர்கள் இப்போது நடத்தும் ஊடறுப்புத் தாக்குதல்கள் படைத்தரப்பைப் பெரும் திகைப்பில் ஆழ்த்தியிருப்பது உண்மை.

அதேவேளை, புலிகள் இயக்கம் தம்மிடம் இருந்த பெரும்பாலான பகுதிகள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையில், இனிமேலும் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற கட்டத்தில் இருக்கிறது.

எனவே, அவர்கள் தமது அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டி சண்டையில் மிக உக்கிரமான போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இறுதிப்போர் ஒன்றுக்காகத் தயார்படுத்திய தமது படையணிகள் அனைத்தையும், தளபதிகள் அனைவரையும் களமிறக்கி புலிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

போர்முனையில் இப்போது புலிகளின் முக்கிய தளபதிகளான பொட்டு அம்மான், கேணல் சூசை, கேணல் பானு, கேணல் சொர்ணம், கேணல் ஆதவன், கேணல் ஜெயம், கேணல் விதுசா, கேணல் தீபன், லெப். கேணல் லோறன்ஸ் மற்றும் கோபித், ஜெரி என்று அனைத்துக் கட்டளை, களமுனைத் தளபதிகளும் சண்டைகளை வழிநடத்துகின்றனர்.

அதேவேளை இரண்டாம் நிலைத் தளபதிகள் களத்தில் இறங்கி படையணிகளுக்குத் தலைமையேற்று சண்டையிட்டு வருகின்றனர்.

இது புலிகள் இயக்கம் வேறு வழியற்ற நிலையில் எடுத்திருக்கின்ற முடிவா அல்லது படையிரைப் பின்தள்ளப் போராளிகளை உற்சாகமாகச் சண்டையிட வைக்க எடுக்கப்பட்ட முடிவா என்பது தெரியவில்லை.

ஆனால், புலிகளின் இப்போதைய தாக்குதல் போருபாயங்கள் படையினரைப் பெரிதும் சிக்கலுக்குள் மாட்டியிருப்பது உண்மை.

தொடர்ச்சியாப் போரிட வைத்து புலிகளைக் களைப்படையச் செய்ய எத்தனித்த படைத்தரப்புக்கு, புலிகள் இப்போது அதே விதமான போருபாயத்தின் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

படையினரை நிம்மதியாக நித்திரை கொள்ள விடாமல், அவர்களைத் துரத்தித் துரத்தி தினமும் நடத்தும் ஊடறுப்புத் தாக்குதல்களால் படையினர் மத்தியில் உளவியல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன.

இதனால், புதிய படையணிகளை களமுனைக்குக் கொண்டு வந்து, சண்டையால் சலித்துப் போன படையினருக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் படைத்தலைமை இருப்பதாகவும் தெரிய வருகிறது.

ஒன்பது டிவிசன் படையினரையும், மேலதிகமாக இரண்டு பிரிகேட் படையினரையும் களமிறக்கிய போதும் புலிகளின் நடவடிக்கைகளைச் சமாளிக்க முடியாத கட்டம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு புதிதாக விசேட படைப் பிரிவின் ஒரு பற்றாலியன் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது.

கடந்த 8 ஆம் திகதி புலிகள் புதுக்குடியிருப்புக்கு வடக்கேயும், வடகிழக்கேயும் நடத்திய மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதல் படையினரைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தகவல்.

இந்தத் தாக்குதலின் போது புலிகளின் அணிகள் சில பலத்த சேதங்களைச் சந்தித்திருந்த போதும், பெரும்பாலான அணிகள் ஊடறுத்துக் கொண்டு படைநிலைகளுக்குள் நுழைந்து விட்டன.

சுமார் 200 இற்கும் அதிகமாக போராளிகளைக் கொண்ட பெரியதொரு படையணி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் 10 தொடக்கம் 12 கிலோ மீற்றர் வரை ஊடுருவி முன்னேறி இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

இந்த அணிகள் புளியம் பொக்கணை, பிரமந்தனாறு பகுதிகளுக்குள் ஊடுருவியிருக்கின்றன. விசுவமடு வரை முன்னகர்ந்த புலிகளுக்கும் படையினருக்கம் இடையில் பெரும் சண்டை நிகழ்ந்திருக்கிறது.

கடந்தவாரம் புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் புதுக்குடியிருப்பை புலிகள் மீளக் கைப்பற்றி விட்டதாகவும், விசுவமடுவில் கடும் சண்டைகள் நடப்பதாகவும் தகவல்கள் பரவின.

இது முற்றிலும் உண்மை எனச் சொல்ல முடியா விட்டாலும், ஊடறுப்பு அணிகள் விசுவமடு வரை முன்னகர்ந்து சண்டையிட்டதும், புதுக்குடியிருப்புக்கு வடக்கே படைநிலைகள் பின்தள்ளப்பட்டதும் உண்மையே.

பிரமந்தனாறு மகாவித்தியாலயத்துக்கு அருகேயிருந்த இராணுவத்தினரின் ஆட்டிலறி நிலையைக் கைப்பற்றிய புலிகளின் அணி ஒன்று கடந்த 10 ஆம் திகதி அதிகாலை தொடக்கம் அங்கிருந்து ஆனையிறவு, பளை, முகமாலை உள்ளிட்ட படைநிலைகளின் மீது பலத்த பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.

இங்கிருந்த 130 மி.மீ. ஆட்டிலறிகள் மூன்று புலிகளிடம் வீழ்ந்;ததாக படைத்தரப்புடன் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.

அந்தத் தளத்தில் இருந்த ஷெல்கள் தீர்ந்து போகும் வரை தாக்குதல் நடத்தி விட்டு புலிகள் அந்த ஆட்டிலறிகளை தகர்த்து விட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

இந்தத் தாக்குதலைக் கரும்புலிகள் அணியும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியும் இணைந்து மேற்கொண்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி இரவு தொடக்கம் 10 ஆம் திகதி அதிகாலை வரை அங்கிருந்து படைநிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் ஆயிரக் கணக்கான ஷெல்களையும், 6 ஆட்டிலறிகளையம் அழித்து விட்டு புலிகள் தளம் திரும்பியதாகவும், இதன்போதான சண்டைகளில் 50 படையினர் கொல்லப் பட்டதாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது போன்றே புலிகளின் அணிகள் புதுக்குடியிருப்புக்கான வீதிகள், ஏ-9 வீதி போன்றவற்றின் ஊடாக படையினருக்கு மேற்கொள்ளப்படும் விநியோகங்களை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தகவல்.

புலிகளின் இந்தப் பாரிய ஊடுருவலை 58 ஆவது டிவிசன் படையினரால் தடுக்க முடியாத நிலையில் தான், விசேட படைப்பிரிவை அனுப்பி வைத்திருந்தார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா.

அதேவேளை, இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், புதுக்குடியிருப்புக்கு வடக்கேயும், வடமேற்கேயும் கடந்த 8 ஆம் திகதி தாக்குதலின் போது, புலிகளால் மீளக் கைப்பற்றப்பட்ட இராணுவ முன்னரணை அவர்களால் மீளக் கைப்பற்ற முடியாது போனது.

அதேவேளை இந்தத் தாக்குதலின் போது புலிகளின் 105 சடலங்களைக் கைப்பற்றியதாகப் படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனால் 35 வரையிலான சடலங்களின் படங்களையே படைத்தரப்பு வெளியிட்டிருக்கிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவிய புலிகளின் அணியொன்று புதுக்குடியிருப்புக்கு வடக்கேயுள்ள காட்டுப் பகுதிக்குள் இராணுவத்தினரின் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், புலிகளின் இந்த ஊடறுப்புத் தாக்குதல் பற்றி படைதரப்பு சம்பவ தினத்தன்று மூச்சுக் கூட விடவில்லை. மறுநாளே மெல்ல மெல்ல கசிய விட்டது. இதிலிருந்து தொடக்கத்திலேயே படையினர் திணறத் தொடங்கி விட்டனர் என்பது தெளிவாகியிருக்கிறது.

அத்துடன் ஆரம்பத்தில் படைநிலைகளை அழித்த புலிகளின் கை சண்டையில் ஓங்கியிருந்ததும் உறுதியாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில், முல்லைத்தீவு நோக்கிய வீதியில் குழந்தை இயேசு கோவிலடி, மற்றும் மருத்துவமனைப் பகுதி, மந்துவில் தெற்குப் பகுதிகளில் படையினரை வழிமறித்துப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இங்கு புலிகள் அனைத்து விதமாக தந்திரோபாயங்களையும் கையாண்டு படையினருக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 ஆம் திகதியும் புலிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் 68 ஆவது டிவிசன் படையினர் மீது பாரியதொரு அதிரடித் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

ஆனால், இந்தத் தாக்குதல்கள் பற்றி புலிகள் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

அவர்கள் புதுக்குடியிருப்புக்குத் தெற்கே கடந்த மாதத் தொடக்கத்தில் நடத்திய பாரிய ஊடறுப்புத் தாக்குதல் பற்றியே முழுமையான தகவலை வெளியிடவில்லை.

இந்தநிலையில் தற்போதைய சமர் பற்றி எந்த தகவலையும் அவர்கள் வெளியிடாதிருப்பது ஆச்சரியத்துக்கு உரியதல்ல.

55 ஆவது டிவிசன், 58 ஆவது டிவிசன், 53 ஆவது டிவிசன், 68 ஆவது டிவிசன் ஆகியன புலிகளின் இப்போதைய ஊடறுப்புத் தாக்குதல்களால் பெரும் சேதங்களைச் சந்தித்து வருகின்ற போதும் அரசாங்கமும் இதுபற்றி வாயே திறக்கவில்லை.

படையிருக்கும் சேதம் ஏற்பட்டது, சிறியளவிலான சேதங்களைப் படையினரும் எதிர்கொண்டனர் என்பதோடு எல்லாம் சரி.

புலிகள் அலை அலையாகத் தொடர்ந்து நடத்தி வருகின்ற ஊடறுப்புத் தாக்குதல்களின் மூலம் படைத்தரப்பு களைப்படைந்து வருவது உண்மை. ஆனால், இது எந்தளவுக்கு புலிகளுக்கு சார்பானதாக இருக்கும், நிலங்களைத் தற்காக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

குறிப்பாகப் புலிகளின் ஆளணி வளம் என்பது மட்டுப்படுத்திய அளவைக் கொண்டது. தொடர்ச்சியாக இத்தகைய ஊடறுப்பை நிகழ்த்தும் அளவுக்கு அவர்கள் ஆளணி வளத்தையும், ஆயுத வளத்தையும் கொண்டிருப்பது ஆச்சரியத்துக்குரியது.

புலிகளிடம் இனிமேல் ஆயுதங்கள் இருக்காது என்றும் ஆட்கள் இல்லை என்றும் கூறிவந்த படைத்தரப்புக்கு அவர்கள் தொடர்ச்சியாக நடத்தும் ஊடறுப்புத் தாக்குதல்கள் மலைப்பை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தலைமையகத்தில் உள்ள நடவடிக்கைப் பணியகத்தில் எப்போதும் களமுனை அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்.

பல நாட்கள் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து கட்டளைப் பணியகத்துக்கு ஓடியிருக்கிறார். தொடர்ச்சியாகச் சில நாட்கள் அவர் இரவு பகலாக அங்கேயே தவம் கிடக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிந்தது.

இதற்கு முன்னர் எந்தவொரு இராணுவத் தளபதி யும் இவரைப் போன்று தூக்;கத்தைத் தொலைத்து விட்டு நிம்மதியற்ற நிலையில் இருந்ததில்லை.

இதற்குக் காரணம் இருக்கிறது.

இப்போது நடக்கின்ற சமரில் சிறியதொரு சறுக்கல் எற்பட்டாலே போதும், முல்லைத்தீவைச் சுற்றியிருக்கின்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான படையினரில் பெரும்பாலானோரின் நிலை கேள்விக்குள்ளாகி விடும்.

ஒரு கட்டத்தில் இராணுவத்தின் போர் வியூகத்தில் உடைப்பு நிகழ்ந்தால் ஒட்டுமொத்தப் போர் வியூகமுமே மணல்கோட்டை போன்று கல கலத்துப் போய்விடும்.

இராணுவத்தின் அனைத்துக் கட்டளை அமைப்புகளையும் புலிகளின் இப்போதைய முறியடிப்புத் தாக்குதல்கள் ஆட்டிப் படைக்கின்றன என்பது மிகையான கருத்தல்ல.

குறுகிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருக்கின்ற புலிகள் பெரியளவிலான ஊடறுப்புகளை நடத்துவதும், களமுனையில் அதிக நம்பிக்கையோடு படையணிகளையும் தளபதிகளையும் அனுப்பி வருவதும் இராணுவ ஆய்வாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் பொதுமக்கள் புலிகளோடு இருக்க மாட்டார்கள் என்று தான் அரசாங்கம் கருதியது. உலகம் எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை.

புதுக்குடியிருப்பும் வீழ்ந்து விட்டால், புலிகள் சண்டையிடாமலேயே மண்டியிடுவார்கள், போராளிகள் சரணடைவார்கள் என்று படைத்தரப்பு எதிர்பார்த்தது.

அதுவும் நடக்கவில்லை.

சர்வதேச ரீதியில் சில ஆய்வாளர்கள் வன்னிப் போர்க்கள நிலையை ஈராக்குடன் ஒப்பிட்டனர்.

சதாமின் படைகள் பெரியளவில் சண்டையிடாமல் தப்பிச் சென்றதை, சரணடைந்ததை நினைவூட்டிய ஆய்வாளர்கள் இப்போதைய வன்னிப் போரின் நிலை கண்டு வாய்திறக்க முடியாத நிலையில் இருக்கின்றனர்.

புலிகளின் தாக்குதல்களை முறியடித்து விட்டதாகக் கூறி படைத்தரப்பு சில படங்களை வெளியிடுகின்றது. ஆனால், அது உண்மையா என்பது மிகப் பெரிய கேள்வி.

அண்மைய தாக்குதல்களின் போது புலிகள் இராணுவச் சீருடையில் தான் உள்ளே நுழைந்ததாகவும் அவர்களை இனங்கண்டு தேடியழிப்பதில பெரும் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் இராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆனால், இப்போது படைத்தரப்பு புலிகள் சாரத்தோடு சண்டையிடுவதாக இன்னொரு கதையைக் கட்விழ்த்து விட்டிருக்கிறது.

படையினர் கைப்பற்றியதாகக் கூறப்பட்ட சடலங்கள் பல இராணுவச் சீருடையுடன் காணப்பட்டன. அவை புலிகளுடையவையா படையினருடையவையா என்பது ஒரு சந்தேகம்.

அதேவேளை சாரத்தோடு பல சடலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை புலிகளுடையவையா அல்லது மோதலில் இருந்து தப்ப முயன்ற பொதுமக்களின் சடலங்களா என்பது தெளிவாகவில்லை.

வன்னியில் இப்போது யார் கொல்லப்பட்டாலும் புலிகளே என்று கணக்குக் காட்டி வந்த படைத்தரப்பின் பிரசாரப் போருக்கு இப்போது ஆப்பு விழுந்திருக்கிறது.

400 புலிகளே எஞ்சியிருப்பதாக கூறிய படைத்தரப்பு இனிமேல் நடக்கப் போகின்ற முக்கிய சமர்களை நடத்துவது யார் என்று கூறிச் சிங்கள மக்களை முட்டாளாக்கப் போகிறது?

Comments