ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வரும உதவிதான். இதை உதவி என்பதை விட போரை வழிநடத்துவதே இந்தியாதான் என்றால் கூட மிகையில்லை. நவீன ஆயுதங்கள், வீரர்கள், வழிகாட்டும் தளபதிகள் என்று இந்தியா செய்து வரும் உதவியை சிங்களப்பத்திரிகைகளும், சிங்கள அரசியல்வாதிகளும் ஒத்துக் கொள்வதை 29.03.09 தேதியிட்ட ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது.
சமீபத்தில் இந்திய அரசால் அனுப்பப்பட்ட இராணுவ மருத்துவக் குழு கூட போரில் காயமுற்ற இந்திய வீரர்களுக்கு சிகிச்சை அளிப்தற்குத்தான் என்ற செய்தியும் இப்போது வெளிவந்திருக்கிறது. போரில் காயமுறும் இந்த வீரர்களை தமிழ் மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுத்தால் விசயம் அம்பலமாகிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. மேலும் இந்தியாவில் தேர்தல் முடித்து விடுவதற்குள் புலிகளை முடித்து விடவேண்டுமென இந்தியா விரும்புவதாகவும், அதனால் இன்னும் பல நூறு வீர ர்களையும், போபார்ஸ் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் உடனடியாக அனுப்பப் போவதாகவும் தெரிகிறது. இது நடைபெறும் பட்சத்தில் முல்லைத்தீவில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் கொல்லப்படுவது உறுதி.
இந்தியாவின் உதவியை வைத்துத்தான் சிங்கள ராணுவம் பலரைப் பலிகொடுத்தும் களத்தில் நிற்க முடிகிறது. இதுநாள் வரை தமிழ்நாட்டின் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் நொடிக்கொரு தடவை ஈழத்தின் துயரை பேசி நாடகமாடி வந்தார்கள். தற்போது அனைவரும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, என பொறுக்கித்தின்ன போய்விட்டதால் எல்லாக் கூட்டணிகளிலும் ஈழத்திற்கு எதிரான துரோகிகளும், எதிரிகளும், சந்தர்ப்பவாதிகளும் நிறைந்திருக்கின்றனர். இதனால் எந்த கூட்டணியும் எதிரிக் கூட்டணியைப் பற்றி ஈழப்பிரச்சினைக்காக புகார் தெரிவிக்க இயலாது.
ஈழத்திற்காக போராடிய வழக்குரைஞர்களை தடியடியாலும், மாணவர்களுக்கு பலநாட்கள் விடுமுறை விட்டும் ஒடுக்கியிருக்கிறது அரசு.
இந்நிலையில் ஈழத்திற்காக இன்றும் குரல் கொடுப்பதும், மக்களிடம் பிரச்சாரம் செய்வதுமான வேலைகள் ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள்தான் செய்து வருகின்றன. அதனுடைய அங்கமாக 25.03.09 அன்று சென்னையில் நடந்த ம.க.இ.க பொதுக்கூட்டத்தில் தோழர் முகிலன் வரைந்த கருத்தப்பட கண்காட்சி பலநூறு மக்களை ஈர்த்தது. அந்தக் கருத்துப்படங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்த ஒவியங்கள் புகைப்படங்களாக எடுத்து எமக்குதவிய நண்பர் முத்துக்குமாருக்கு எங்கள் நன்றி.
இந்த ஒவியங்களை முடிந்த அளவு எல்லோரிடத்திலும் சேர்ப்பதற்கு முயலுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் கூச்சலின் நடுவில் ஈழத்திற்கான தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்கு நமது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.
(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)
by வினவு
Comments