வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீமான் போட்டியிடுவார் - இயக்குநர் தங்கர்பச்சான்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீமான் போட்டியிடுவார் - இயக்குநர் தங்கர்பச்சான்!

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரைப்பட இயக்குநர் சீமான் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காகச் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் 2.3.2009 திங்கள்கிழமை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச் சாலைக்கு வந்தார்.

காலை 11 மணி முதல் இயக்குநர் சீமானைப் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக் கொண்ட சிறைத்துறையினர் எந்தவித பதிலையும் கூறவில்லை.

இதனால் சுமார் ஒரு மணிநேரம் பொறுத்துப் பார்த்த தங்கர்பச்சான், புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச் செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் நண்பகல் 12 மணிக்கு சிறையின் வாயிலில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த காலாப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. கே.வரதராஜன் சிறைத் துறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 'அனுமதி உண்டா இல்லையா என்று சொல்லாமல் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்' என்று கேட்டார். பின்னர் அவர் அனைவரையும் சிறைக்குள் அழைத்துச் சென்றார்.

பின்னர் இயக்குநர் தங்கர்பச்சன் உட்பட அனைவரும் சீமானை சந்தித்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சீமானைச் சந்தித்து விட்டு வந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் பத்திரிகையாளர்களிடம் கூறியது:

தமிழர்களின் உரிமைகள், உணர்வுகளைக் காணாமல் போகச்செய்தவர்கள் அரசியல்வாதிகள். காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே ஏற்க மறுக்கின்றனர். இது தொடர்பாக 27 முறை பேசியும் முறையான தண்ணீர் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. கச்சத்தீவைப் பறி கொடுத்ததால் தமிழக மீனவர்கள் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.

தமிழனுக்காகவும், தமிழினத்திற்காகவும் அரசியல்வாதிகள் குரல் எழுப்பவில்லை. குரல் கொடுத்திருந்தால் மத்திய அரசு செவிமடுத்திருக்கும். தமிழன்தான் குரல் எழுப்புகிறான். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழக தலைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் ஒன்று கூடி பேசியிருந்தால் போதும். மத்திய அரசு பணிந்திருக்கும். ஆனால், அதை யாரும் செய்யவில்லை.
தற்போது தமிழர்களுக்காகவும், தமிழினத்திற்காகவும் குரல் கொடுக்கும்காலம் வந்துவிட்டது.

மற்றவர்கள் போல் திரைப்படம் உண்டு தன் சம்பாத்தியம் உண்டு என்று இல்லாமல் சீமான் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். சீமான் மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் நாயாளுமன்றத் தேர்தலில் சீமான் போட்டியிட உள்ளார். சீமானிடம் ஓட்டு வங்கி உள்ளதால் அவரை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். தமிழக இளாஞர்கள், மாணவர்கள் அவரை வெற்றிப் பெற செய்வார்கள். தமிழ் மக்கள் சீமானுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவரை நான் உட்பட பலரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
சிறையில் இருந்தபடி தமிழ் இனம், மொழிக்காக சீமான் குரல் கொடுத்து வருகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச்செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- இரா.சுகுமாரன் - 2009-03-03

Comments