இந்திய மத்திய அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகும் கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிகள் எங்கள் வீடுகளில் தேவையா ?
அண்மைக் காலங்களில் எமது தேசம் சுமக்கும் துயரங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் கண்களில் கண்ணீரையும் மனங்களில் நிரந்தர வலியையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் எமது சொந்தங்கள் சுமக்கும் இந்தத் துயரங்களை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை என்பதும், எத்தகைய வெளிநாட்டு ஊடகங்களும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவில்லையே என்ற ஏக்கமுமாகவே நாட்கள் நகர்கின்றது.
இதில் ஊடகம் தொடர்பான விடையத்தை நாம் எடுத்து கொள்வோம். தன் சொந்த மொழிக்கு இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தமது சொந்த அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு வெளிக்கொணராத தழிழ் ஊடகங்களே இருக்கும் போது எவ்வாறு வேறு தேசியம் சார்ந்த, வேற்றுமொழி சார்ந்த ஊடகங்கள் எமது செய்திகளை வெளிக் கொண்டு வரவில்லை என்று கவலைப்படலாம்?.
ALJAZEERA இந்த தொலைக்காட்சியை நீங்கள் அறிவீர்கள். ஈராக்கின் மீது அமெரிக்கா நடத்திய மிகமேசமான தாக்குதல்களை, அமெரிக்க ஆதரவு ஊதுகுழால்களாக செயற்பட்ட பல ஊடகங்கள் குறிப்பாக, தொலைக்காட்சிகள் மறைக்க முயன்ற மனிதஉரிமை மீறல்களை உலகின் முன் துணிச்சலுடன் வெளிச்சமாக்கியது. அத்துடன் அண்மையில் GAZA வில் இஸ்ரேலிய அரசு நடாத்திய கொடிய தாக்குதல்களை உடனுக்குடன் உலகின் கண்களுக்கு காண்பித்து மானிடத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்பியது. அல்ஜசீரா தொலைகாட்சியின் இத்தகைய நடவடிக்கைகளால் குறித்த செய்திகள் உடனுக்குடன் வெளிவந்தது மட்டுமன்றி உலகமெல்லாம் வாழும் இஸ்லாமிய மக்களை ஒன்றாக்கி தமது இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான ஒட்டு மொத்த அரபு மக்களின் குரலையும், இஸ்ரேலுக்கு எதிரான அனைத்துலகத்தின் கண்டனங்களையும் ஒலிக்கச் செய்தது. அத்துடன் பலஸ்தீன மக்களிற்கான ஆதரவு அலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.மொத்தத்தில் அல்ஜசீரா அரபுகளின் ஊடகமாக செயல்பட்டு வருகின்றமை வெளி வெளி உண்மை.
இனி எங்கள் விடையத்துக்கு வருவோம். இன்று தமிழ் மீடியா உலகில் அதிக ஆதிக்கத்தைச் செலுத்திவரும் சன் குழுமத்தைச் சேர்ந்த தொலைக்காட்சிகள் குறிப்பாக சன் TV KTV கலைஞர் TV போன்ற தொலைக்காட்சிகள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் பெரும் ஆக்கிரமிப்பை செய்துள்ளது. அதாவது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் சந்தையை இலக்கு வைத்து செய்யப்படுகின்றது இந்த வியாபாரம்.
உலகத் தமிழினமே ஈழத்தில் துயருறும் தன் இனத்துக்காக கண்ணீர் வடிக்கும் இன்நேரம் அதாவது உலகத்தின் மௌனத்தை ஆதாரமாக கொண்டு சிங்கள இனவெறி அரசு நடத்திவரும் கொடிய இன அழிப்புப் போரை போரின் பதிவுகளை வெளிக்கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய வாய்ப்புக்கள் இருந்தும் இந்தத் தொலைக்காட்சிகள் ஏன் எமது மக்களின் கண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஈழத்து உறவுகளின் துன்பங்களைக் கண்டு துடிக்கிற பொழுது தழிழீழ மக்களின் அழிவுகள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மூடிமறைத்து தங்கள் குடும்பத்தின் தில்லுமுல்லு அரசியலை காப்பாற்றும் கபடநோக்கத்தோடு மத்திய அரசின் தமிழின அழிப்பு அரசியலுக்கு துணைபோகின்றது.
கருணாநிதி நினைத்திருந்தால் பெருமளவு தமிழர்களை உயிரழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். என்ற உண்மை ஒருபுறம் இருக்க தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்தும் இனஅழிப்புத் தாக்குதல்களை தமிழக மக்களுக்கு காண்பித்து தமிழக மக்கள் மத்தியில் இன்றுள்ள எழுச்சியை பேரெழுச்சியாக்கி அதன் மூலம் மத்திய அரசிற்கு பெரும் அழுத்தங்களை கொடுத்து ஈழதமிழர்களின் கண்ணீரைத் நிரந்தரமாக துடைப்பதற்கான அரிய வாய்ப்புக்களை உருவாக்கவும் வல்ல பலமான ஊடகக் குழுமமாக விளங்கும் கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் (கலைஞர் TV SUN TV KTV தொலைக்காட்சிகள் உட்பட அனைத்தும்) இதனைச் செய்யாதது ஏன் ?
(தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமிழகத்தின் எழுச்சியின் முக்கியத்தும் பற்றி மேலும் அறிய மு.திருநாவுகரசு எழுதிய தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் கட்டுரைத் தொகுப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதனைத் தோற்கடிக்க முடியாத சுழ்நிலையும் எனும் கட்டுரையில் காண்க.) இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் விடையாக உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூட்டிக் கொள்ளவும் தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன்குடும்பத்துக்கே உரித்ததாக்க விரும்புகின்ற தேர்தல் காலத் தமிழர் கலைஞர்" என்று கருணாநிதியையும் அவர் ஆட்சிபற்றியும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரன் தன் மரணசாசனத்தில் குறிப்பிட்டுள்ள வரிகளை கவனத்தில் கொள்ளலாம். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்காமல் உடன்பிறப்பே என்று பிதற்றும் இந்த வாய்ச் சொல்வீரர்களை எரிந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்(டில்)டை தொடர்ந்து பிடுங்க அனுமதிக்கப் போகின்றோமா?
-இனியவன்-
டென்மார்க் .
01.03.09
Comments