பதுங்குவது பாய்வதற்காகவே
பலமிழந்து போகவில்லை புலி இன்னும்
புல்மோட்டையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருப்பது சிறிலங்காவின் இறை மையை கேள்விக்கிடமாக்கியுள்ளது. 2009. 03.17 அன்று ஜே.வி.பி உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் ஆற்றிய உரை.
''இந்தியப்படை வருகையால் எமது இறைமைக்கு எதுவித ஆபத்துமில்லை. சிறி லங்காவுக்கு நெருக்கடி ஏற்படும் வேளை களில் இந்தியா உதவிக்குவருவது வழக் கமே. கடந்த சுனாமி நெருக்கடிக் காலத்தில் இந்தியப் படையினர் வந்து உதவிசெய்த ததை மறந்துவிட்டீர்களா?''
நிமால் சிறிபால டி சில்வா அரச தரப்பில் அளித்த பதில்.
500 புலிகள் மட்டுமே இருக்கின்றனர். அதுவும் 39 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதி யில் முடக்கப்பட்டுள்ளனர் என்ற அறிக்கை கடந்த 2009.03.01 அன்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்புச் செய்தது. அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு அமைய 17ஆம் நாள் அன்று 118 புலிகள் மட்டுமே இருந்தனர். அப்படியானதொரு நிலையில் சிறிலங்கா அரசு சுனாமி நெருக் கடிபோன்ற நெருக்கடியில் சிக்கியிருப்தாகக் கூறுவதன்மூலம் அரசின் உண்மை நிலையை உணரமுடிகிறது.
நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்படி பார்த்தால் சிறிலங்கா அரசாங்கமானது சுயமாக மீண்டெழமுடியாத நெருக்கடியில் சிக்கிவிட்டது. அதனால்தான் அவர்கள் கூறிவரும் இறைமையையே மறந்து திருக்கோணமலையைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்திய மருத்துவ உதவியென்பது வெறும் மோசடியே. அவ்வாறு மருத்துவ உதவி வழங்குவதாயின் குடிசார் மருத்துவர்களை அனுப்பியிருக்க முடியும். மாறாக இந்திய இராணுவத்தினரை திருக்கோணமலையின் வடக்கு எல்லையில் நிலைப்படுத்தியிருப்பதானது சிறிலங்காவின் நெருக்கடியின் உச்சத்தைக் காட்டிநிற்கிறது.
விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்தால், சிங்கள அரசு மீண்டெழ முடியாத நெருக்கடியில் சிக்க வாய்ப்பில்லையே. ஆக விடுதலைப் புலிகள் முன்பிருந்த பலத்து டனேயே இப்போதும் இருக்கின்றார்கள் என்ற செய்தியை அரசாங்கமே மறைமுகமாகக் கூறிவருகிறது. சிங்களத்திற்கு மீண்டெழ முடியாத நெருக்கடி ஏற்பட்டது எப்படி? விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.
கடந்த வருடத்தில் மன்னாரில் நிலை கொண்டிருந்த 58ஆவது டிவிசன் மிகப் பலமாக இருந்தது. அப்படையணியானது அடிமேல் அடிவாங்கி நொந்து, மெலிந்து இப்போது நிற்பது புதுக்குடியிருப்பில். வவுனியாவின் எல்லையில் பலமாக நிலை கொண்டிருந்த 57ஆவது டிவிசன் பலம் பெரும் தாக்குதல்களுக்கு இலக்காகி பலவீனப்பட்ட நிலையில் இப்போது நிற்பது விசுவமடுவில்.
நாகர்கோவிலில் மிகப் பலமாக நிலை கொண்டிருந்த 55ஆவது டிவிசன் மோதிச் சிதறிய நிலையில் இப்போது சாலைவரை பரவி நிற்கிறது. பரவிநிற்பதால் பலமிழந்தே நிற்கிறது.
முகமாலையில் நிலைகொண்டிருந்த 53 ஆவது டிவிசன் மாங்குளத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய நகர்வில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த நகர்வில் புதுக்குடியிருப்பினுள் நுழையும்போது பெரும் தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து சிதைந்துபோன படையணியாகப் புதுக்குடி யிருப்பில் நிற்கும் 53ஆவது டிவிசன் முல்லைத்தீவு நோக்கிய நகர்வில் பாரிய இழப் புக்களைச் சந்தித்துள்ளது.
மணலாறில் பலமாக இருந்த 54ஆவது டிவிசன் வட்டுவாகல் வரும்வரை பல தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து சிதைந்துபோன நிலையில் பரவிநிற்கிறது.
அதேபோன்றே 63,64,65,66,67,68 என் றெல்லாம் பெயரிடப்பட்ட இடுபணிப் படையணிகள் கூட பெயரளவில் பேசப்படுகின்ற நிலையே காணப்படுகிறது. சிங்கள இராணுவக் கட்டமைப்பில் 53,55,57,58,59 ஆகிய டிவிசன்கள் மட்டுமே தாக்குதல் படையணிகளாகும். 11,21,22,51,52,56,61,62 போன்ற படையணிகள் பாதுகாப்புப் படையணிகளாகும். அப்படையணிகள் தாக்குதல் பலமற்றவையாகும். தாம் இருக்கும் பகுதியில் பாதுகாப்புக்குப் பொறுப்பான படையணிகளே அவையாகும்.
மேற்படி தகவல்களுக்கமைய பலம்மிக்க தாக்குதல் படையணிகளான 53,55,57,58,59 ஆகிய டிவிசன் படையினர் அனைவருமே ஓர் குறுகிய நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ளனர். அவர்கள்கூட அவ்வளவு பெரும் ஆளணி வலுவுடன் இல்லையென்ப தனையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
கடந்த செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் நடைபெற்ற வான்குண்டுத் தாக்குதல்கள் மூலம் நாம் அவர்களது ஆளணிப் பற்றாக்குறையைத் தெளிவாக உணரலாம். அவ்வாறான தெளிவான பார்வை ஏற்பட்டால் கலக்கம் ஏற்படாது.
ஆக, சிங்களம் கூறும் மீழமுடியாத நெருக்கடியின் காரணிகளில் இராணுவ நெருக்கடி ஒன்று மட்டுமே.
இராணுவ நெருக்கடிக்குப் புறம்பாக பொருண்மிய பன்னாட்டு நெருக்கடி களுக்கும் முகம் கொடுக்கமுடியாத நிலை யிலேயே சிங்களம் இருக்கிறது. இராணுவ வீரர்கள் அதிலும் குறிப்பாகப் போரிடும் படை யினர் மிக வேகமாக களமுனையிலிருந்து அகற்றப்படுவதன் காரணமாக சிறிலங்காப் படையினர் பெருமளவிலான வெடிபொருட் களைப் பயன்படுத்தவேண்டிய நிலையுள்ளது.
அதுபோன்றே வான்கல, கடற்கல எரிபொருளையும், எமக்கு ஒலியூட்ட பலநூறு பரா வெளிச்சக் குண்டுகளையும் நாளாந்தம் விரையமாக்கி வருகிறது. அவை அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையே. அந்த இறக்குமதியின் பொருட்டு சிறிலங்காவின் அந்நிய செலவாணி கையிருப்பு தீர்ந்துவிட்டது.
டிசம்பர்-31 வரை பேணப்பட வேண்டிய செலவாணி கையிருப்பானது மார்ச்-31 ஆம் நாளுடன் முடி வடைகிறது என்றால் போர் காரணமாக சிறி லங்கா அரசு முகம் கொடுத்துள்ள பொருண் மிய நெருக்கடியை உணர்ந்துகொள்ளலாம்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்கமுடியாது என்று கூறி அவர்களுடனான உறவை 2007 இல் முறித்துக் கொண்டது சிறிலங்கா. கொழும்பில் அமைந் திருந்த அலுவலகத்தைக் கூட அந்த நிறு வனம் மூடியது. இன்றோ நிலைமை வேறு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப் பினர் ரவி கருணாநாயக்க ''அடுத்த மாதத் திற்கான அந்நிய செலவாணிகூட அரசிடம் இல்லை. தாமே எதிர்த்த பன்னாட்டு நிறுவனத் தின் காலில் விழுந்து, அழுது, கெஞ்சி உதவி பெறும் நிலையில் அரசாங்கம் உள்ளது'' என்று கூறுகிறார்.
பன்னாட்டு நாணய நிதியமானது சிறிலங்கா போன்றதொரு தோல்வியடைந்த நாட்டிற்கு கடன் வழங்குவதாயின் வெற்று வார்த்தைகளை நம்பி வழங்கமாட்டார்கள். அவர்களால் முன்வைக்கப்படும் வரைமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கடன் வழங்குவார்கள். அவ்வாறு அவர்களது நிபந் தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் போரைத் தொடர்ந்து நடத்தமுடியுமா என்ற பெரும் கேள்வியும் உள்ளது.
ஏனெனில் தம்மால் வழங்கப்படும் பணமானது வீணடிக் கப்படுவதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். பன்னாட்டு நாணய நிதியை நிபந்தனைகளாக கட்டாயப் போர்நிறுத்தம் சிறிலங்காவின் நாணயப் பெறுமதி இறக்கம், அரச நிறுவனங் களைத் தனியார் மயப்படுத்தல். மக்களுக்கான இலவச அரச பணிகளை மட்டுப்படுத்தல் போன்றவை முன்வைக்கப்படலாம்.
நிபந்தனைகளின் சிலவற்றை விட்டுக் கொடுத்தால்கூட நாணய மதிப்பிறக்கம் தனியார்மயப்படுத்தல் போன்ற விடயங்களை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலையில் சிங்கள அரசு உள்ளது. அவ்வாறான நிலையில் தற்போது அரசில் அங்கம்வகிக்கும் பிற்போக்குவாதிகள் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள்.
போர்நிறுத்தம் செய்யா விட்டால்கூட போருக்காகப் பெருமளவு நிதியை வாரியிறைப்பதனை நாணய நிதியம் அனுமதிக்காது. இறைமையுள்ள சிறிலங் காவின் திறைசேரி மேற்கொள்ளும் நிதி ஒதுக் கீடுகளில் கூட ஆதிக்கம் செலுத்தும் அதி காரம் நாணய நிதியத்திற்கு கிட்டும். அடுத்த விடயம் பன்னாட்டு நெருக்கடி. கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பில் வாதிடவேண்டும் என்ற கோரிக்கையை மெச்சிக்கோ முன்வைத்தபோது ரஷ்யா அதனைத் தடுத்துநிறுத்தியது.
அப்படி இருந்தும் இம்மாதம் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள ஐ.நா.பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சிறிலங்காப் பிரச்சினையை வாதிடவேண்டும் என்ற கோரிக்கை மூன்று நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கை சீனாவின் எதிர்ப்புக் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசிற்கு எதிரான நகர்வில் மெச்சிக்கோவுடன் சேர்ந்து ஒஸ்ரியா, குரொஸ்டோரிக்கா ஆகிய நாடுகளும் ஈடுபட்டிருப்பது எமக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் சிங்கள அரசிற்கு அச்சத்தை யூட்டுவதாகவுமே இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்களின் அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி யுள்ளது. அவரது அறிக்கை ஓர் அதிகாரம் மிக்க ஆவணமாகும். அந்த ஆவணத்தின் அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமாயின் விசாரணைக்கு முகம்கொடுக்கவேண்டிய குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவேண்டிய நிலை சிறிலங்காவில் அதி உத்தமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.
''நடவடிக்கை வணங்காமண்'' சிறிலங்காவுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ள பன்னாட்டு நகர்வாகும். வணங்காமண் கப்பல் வருகிறதோ இல்லையோ சிறிலங்கா அரசாங்கம் அக்கப்பல் தொடர்பில் அச்சமடைந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவே எமக்காக உலக உணவுத் திட்டத்தால் அனுப்பப்படும் உணவுப் பொருட்களை ஓரளவுக்காவது அனுமதிப்பதற்குக் காரணம். ''வணங்காமண்'' கப்பல் தொடர்பிலான அச்சமே அன்றி எம்மீதான அக்கறை காரணமாகவல்ல என்பதனை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த வாரம் எமக்குக் கிடைத்த உணவுப் பொருட்களுக்காக நாம் ''வணங்காமண்'' நடவடிக்கைக் குழுவினருக்கு நன்றி கூற வேண்டும். அவர்களது நடவடிக்கை வேகப் படுத்தப்படுவதன்மூலம் சிறிலங்கா எமக்கான உணவு, மருந்துகளை அனுப்புவது மட்டுமன்றி மிகப்பெரும் பன்னாட்டு நெருக்கடிக்கும் முகம் கொடுக்கவேண்டியிருக்கும்.
படையினரின் ஆளணி இழப்பினை ஈடுகட்டுவதற்காக அரசாங்கம் பல முனைகளில் ஈடுபட்டும் அவை வெற்றிபெறு வதாகத் தெரியவில்லை. இராணுவ தொண்டர் படையினருக்கான ஓய்வூதிய சட்டம் மூலம் மிக அவசரமாக நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றப்பட்டமை.
கோத்தபாய அநுராதபுரம், சாலியபுர பகுதிகளுக்கு நேரில் சென்று பரப்புரை மேற்கொள்வது போன்ற விடயங்கள் மூலமாக நாம் சிங்களத்தின் நெருக்கடியைக் கண்டு கொள்ளலாம்.
எனவே சிங்களத்தின் இராணுவப் பொருண்மிய அரசியல் நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது நாம் இன்றும் பலமாக இருக்கின்றோம் என்பது தெளிவு.
எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் காணப்படாத அர்ப்பணிப்புமிக்க எம்முடனே நின்று அல்லல்களுக்கு முகம் கொடுக்கும் தலைமை, அஞ்சா நெஞ்சுடன் வெடியாக மாறி எமைக்காக்கும் கரும் புலிகள், எந்த நெருக்கடிக்கும் முகம் கொடுத்து சிங்களப் படையைச் சிதறடிக்கும் களப்போராளிகள் எமது உயிர்வாழ்வின் நாளமான கடற்புலிகள் சொல்லொணாத் துயருடன் பணிபுரியும் மருத்துவப் போராளிகள் இன்னும் பல ஈகை வீரர்கள். இங்கு வாழும் வீரமக்கள் அனைவரும் எம்முடனே இருப்பது எமது வெற்றிக்கான வாய்ப்புக்களே.
எனவே காலம் மாறும் மாவீரர் கனவுகள் பலிக்கும். எம் கனவுகள் தீரும். ஈகைத் தாய் அன்னைபூபதி அம்மாவின் ஆன்மா ஈடேறும். காலம் வெகுவிரைவில் கிட்டும் இது உண்மை.
- தமிழ்நேசன்-
நன்றி
ஈழநாதம்
23-03-2009
Comments