பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: புதுவையில் வைகோ ஆவேசம்

பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப்புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள். இவ்வாறு புதுவையில் நடைபெற்ற இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் ராமதாஸ் எம்.பி., நாரா.கலைநாதன் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில ம.தி.மு.க. அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வரவேற்றார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவர் பேசியதாவது:-

இலங்கை தமிழ் மக்களின் தலைவராக பிரபாகரன் போன்று யாரும் தோன்ற முடியாது. விடுதலைப்புலிகளுக்கு நிகர் உலகத்தில் யாரும் கிடையாது. பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைபுலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு ஏன் கூறவில்லை? தமிழக சட்டசபை தீர்மானம் என்ன ஆனது? தமிழன் என்ற முகவரியை உலகத்திற்கு தந்தவர் பிரபாகரன்தான். தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது. இவ்வாறு வைகோ பேசினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசும்போது,

தமிழ் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. வட இந்தியர்களுக்கு பாதிப்பு என்றால், மத்திய அரசு சும்மா இருக்குமா? இலங்கையில் போர் நிறுத்தம் வரவில்லை என்றால் தமிழ் இளைஞர்கள் தாங்கி கொள்ளமாட்டார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக யாரும் தீக்குளிக்க வேண்டாம். உங்களது உணர்வுகளை போராட்டம் மூலம் தெரிவியுங்கள் என்று கூறினார்.

பழ.நெடுமாறன் பேசும்போது, காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தமிழ் மக்களின் நெஞ்சை புண்ணாக்குவதாக உள்ளது. தேர்தலை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. உயிர் தியாகத்தை மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாடம் புகட்ட தவறக்கூடாது என்று கூறினார்.

கூட்டத்தில் தீக்குளித்து இறந்த கடலூரை சேர்ந்த வாலிபர் தமிழ்வேந்தன் குடும்பத்திற்கு ரூ. 3 இலட்சம் நிதி அளிக்கப்பட்டது. இதனை பழ.நெடுமாறன் முன்னிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார்.

கூட்டத்தில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., புதுவை எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம், அருள்முருகன், இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் மகேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், பாரதிய ஜனதா கட்சி தலைவர் விஸ்வேஸ்வரன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க. கலைமாறன், தேசியவாத காங்கிரஸ் சுந்தரமூர்த்தி, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பாவணன் நன்றி கூறினார்.

Comments