வன்னி மக்களின் அவலம், சர்வதேச விசுவாமித்திரர்களின் மௌனத்தைக் கலைக்குமா?

முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மூன்று இலட்சத்து முப்பதினாயிரம் வன்னி மக்களின் வாழ்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அண்மையில் வீசிய சூறாவளியும் பெரு மழையும் பதுங்கு வாழ்வினையும் பறித்து விட்டது.

எறிகணை வீச்சுக்களால், உடல் அவயவங்களை இழக்கும்

ஆயிரக்கணக்கான மக்களோடு தினமும் பலர் கொல்லப்படுகின்றனர்.

இதனை நிறுத்த வக்கற்ற ஐ.நா. வின் மனிதாபிமானச் சங்கங்கள், விசுக்கோத்துக் கதைகளையும் மனிதக் கேடயப் பிரசாரங்களையும் முன்னெடுக்கின்றன.

சூடானில் எண்ணெய் வளம் இருப்பதால் ஐ.நா.வின் கரிசனை அதிகமாகிறது. டார்பூரிலுள்ள ஐ.நா. தொண்டு நிறுவனங்களை வெளியேறச் சொல்லி கட்டளையிடுகிறார் சூடான் அதிபர் ஒமர் அல் பசீர்.


சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றில் தண்டனை வழங்கப்பட்ட ஓமர் அல் பசீர் மீது பலத்த கண்டனங்களை மேற்குலகம் தொடுக்கும் அதேவேளை மக்கள் சீனக் குடியரசு சூடானை ஆதரித்து அறிக்கை விடுகிறது.

ஆனாலும் எந்த வல்லரசை இலங்கை கண்டித்தாலும் அவை அரசாங்கதிற்கு எதிராக எதிர்க் கருத்துக்கூற முன்வருவதில்லை. சில வேளைகளில் கண்டிப்பானது, கவலை தெரிவிப்பாகவும் மாறுதலடையும்.

அது அவரவர் பிராந்திய நலனின் அளவினைப் பொறுத்து அமையும். உதாரணமாக யுத்த நிறுத்தம் குறித்தோ அல்லது வன்னி மக்களின் அவல நிலை பற்றியோ இந்தியா வாய் திறப்பதில்லை. ஆனாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் அரசியல் தீர்வினை வழங்க வேண்டுமென இந்தியா கூறும்.

சீனாவைப் பொறுத்தவரை இவற்றில் எது குறித்தும் அந்நாடு வாய் திறக்காது.

புல்மோட்டையில் தள வைத்தியசாலையை அமைக்க வருகை தந்த இந்தியக் குழுவினரை வரவேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இந்தியா இலங்கையின் நிரந்தர நண்பனென்று மனதாரப் பாராட்டியுள் ளார்.

இராணுவ முகாமொன்றை இந்தியா அமைத்திருப்பதாக ஜே.வி.பி. கேள்விக்கணை தொடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாகவுள்ள விமல் வீரவன்ஸ மௌனமாகிவிட்டார். சர்வதேச நாடுகள் மீது கண்டனங்களை அவ்வப்போது தெரிவிக்கும் உத்தியோகப்பற்றற்ற அரசின் குரலான அவர் புல்மோட்டை விவகாரத்தில் கருத்து வெளியிட முன்வரவில்லை.

இவ்விரு சக்திகளின் போக்குகள் யாவும் இலங்கையின் இராஜதந்திர உத்திகளையும் வல்லரசுகளைக் கையாளும் முறைமைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

புல்மோட்டையில் அமைக்கப்படும் இவ் வைத்தியசாலை, கடல் பாதையூடான இந்தியத் தலையீட்டினையும் உருவாக்கும். இந்த வைத்தியசாலையை திருகோணமலையில் இருந்தும் இயக்கலாம். ஆனாலும் ஒதுக்குப் புறமான இடத்தில் நிர்மாணிக்கப்படும் இக் கட்டிடத்திற்கு காயப்படும் வன்னி மக்களைக் கொண்டு செல்வதில் வேறு சில காரணிகளும் புதைந்துள்ளன.


இந்தியப் பொதுத் தேர்தல் அண்மிப்பதால் இலங்கை விவகாரத்தை மிக அவதானமாகக் கையாள வேண்டிய அரசியல் தேவையும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

ஓரடி சறுக்கினாலே, பாரதீய ஜனதா கட்சியின் நிலை காங்கிரஸிற்கும் தமிழகத்தில் வந்து விடுமென்பதால் அரசியல்த்தீர்வு பற்றி அதிகம் பேச விளைகிறது ஆளும் காங்கிரஸ் கூட்டணி.

வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனை அமெரிக்காவிற்கு அனுப்பி இலங்கைப் பிரச்சினை குறித்துப் பேச வைக்கிறது. அங்கு சென்ற மேனன், வழமைபோன்று அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வென்று உலக ஜனநாயகம் பேசியுள்ளார்.

இவரின் அமெரிக்க விஜயத்தில் பல விடயங்கள் வெளியே தெரியாதவாறு உருமறைப் புச் செய்யப்பட்டிருந்ததை உணரக் கூடியதாகவிருக்கிறது. இலங்கைப் பிரச்சினையே முதன்மைப் பிரச்சினை போன்றும் அதற்காகவே மேனன் ஹிலாரியை சந்திக்கச் சென்றார் என்பது போன்று உலகிற்குக் காட்ட இந்தியா முயற்சிக்கிறது.

இது மட்டுமல்ல சிவ்சங்கர் மேனனின் விஜயத்திற்கான முதன்மைக் காரணிகள். ஆட்சி பீடமேறியவுடன் மேற்கொண்ட முதல் பயணத்தை ஆசியாவிலிருந்து ஆரம்பித்திருந்தார் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின் டன் அம்மையார். ஆனாலும் அவர் இந்தியாவிற்குச் செல்லவில்லை. ஆசிய நாணயச்சபையை உருவாக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் நான்கு மூர்த்திகளையும் சந்திப்பதற்கே அவர் சென்றிருந்தார். சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா நாடுகளே இந்த நால்வருமாவர்.

புதிதாக உருவாகப் போகும் இந்த ஆசிய நாணய சபை, மேற்குலகு வழிநடத்தும் சர்வதேச நாணயச் சபையின் (ஐMஊ) முக்கியத்துவத்தை கீழ் நிலைக்கு இட்டுச் சென்றால், அமெரிக்க டொலரின் சர்வதேசஅங்கீகாரம் கேள்விக்குள்ளாகும் நிலையேற்படுமென்று அமெரிக் கா அச்சமுறுகிறது.

இச் சபையின் உருவாக்கத்தை சிதைப்பதற் கும் ஆசியப் பிராந்தியத்தில் மேற்குலகிற் கெதிரான புதிய தலைமையொன்று ஏற்படா மல் தடுப்பதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரினால் இவ் விஜயம் மேற்கொள்ளப் பட்டதாகக் கருத இடமுண்டு.

இந்த இரு பிராந்தியக் கூட்டுகளுக்கிடையே சிக்கியுள்ள, இந்தியாவின் எதிர்கால வகிபாகம் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய தேவையினால் உருவான நிர்ப்பந்தமே சிவ்சங்கர் மேனனை அமெரிக்காவிற்கு இழுத்துச் சென்றுள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட ஆசியச் சந் தையை அமெரிக்காவால் புறக்கணிக்க முடியாது. அதேவேளை வெளிநாட்டு இறக்குமதி களைக் குறைத்து தற்காப்புக் கோட்பாட்டை இறுகப் பற்றிப் பிடித்தால் நிரந்தர ஆதரவுச் சக் தியான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் முரண்படும் நிலை அமெரிக்காவிற்கு ஏற்ப டும்.

அச்சிக்கல் ஏற்கனவே ஐரோப்பாவில் ஆரம் பமாகிவிட்டது. பிரான்ஸின் பொருளாதார தற் காப்புக் கோட்பாட்டினால் அண்மையில் இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருப்புக் குறித்த முரண்பாட்டுக் கருத்துக்கள் மேலோங்கி வருகிறது.

தமது மத்திய வங்கியின் வெளிநாட்டு நாண யக் கையிருப்பைப் பாதுகாக்க இறக்குமதியை மட்டுப்படுத்தும் தற்காப்பு நிலையினை பல மேற்குலக நாடுகள் தொடங்கியுள்ளன.

நாட்டின் உள்கட்டுமான விரிவாக்கத்தில் அதிக முதலீடு செய்யப் போவதாக அமெரிக்காவும் சீனாவும் கூறுவதிலிருந்து இத்தகைய தற்காப்புக் கோட்பாட்டை புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் மேற்கூறிய விவகாரங்கள் எது வுமே இலங்கை அரசிற்குப் பொருந்தாது. சர்வதேச பொருளாதாரத்தின் முதுகில் விழுந்த பிரம்படி இலங்கையின் சிறிய பொருளாதார கட்டமைப்பினை சிதைத்து விட்டது.

பெரும் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள அரசு, சர்வதேச நாணயச் சபையிடமிருந்து 1.9 பில்லியன் டொலர்களைக் அவசரக் கடனாக பெறும் முயற்சியினை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.

நாட்டின் வளங்களையும் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதி உதவிகளையும் போரில் முதலீடு செய்வதால் நிதி நிலைமை மோசமடைகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய யூனியனால் விடுக்கப்பட்ட உடனடி போர் நிறுத்தம், நாட்டின் இன்றைய நிலையை புரிய வைக்கிறது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித அவலம் குறித்த அவசர வேண்டுகோள் ஒன்றினை 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பி னர்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனிற்கும் அமெரீக்காவின் ஐ.நா. பிரதிநிதி சுசான் றைஸ் அம்மையாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

அவ்வறிக்கையில் அரசியல் தீர்வின் அவ சியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அத் தோடு தடுப்பு முகாம்களில் உள்ள இடம் பெயர்ந்த மக்களின் அவலம், ஐ.நா. பாதுகாப் புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டுமெனவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நகர்வுகள் இவ்வாறு மாற்றமடை கையில் வன்னிக் களத்திலும் மாறுதல்கள் உரு வாகத் தொடங்கியுள்ளதை அவதானித்தல் வேண்டும்.

விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி கள், இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளான ஒட்டுசுட்டான் மற்றும் கு?ள?னையில் தாக்குதல்களை மேற் கொள்வதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திகள் கூறுகின்றன.

ஆனாலும் வன்னி மக்களின் தினசரி வாழ்வு, மிக மோசமான நிலை நோக்கிச் செல்வதாக அங்கு பணிபுரியும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். முற்றுகைச் சமரில், படடினிச் சாவுகளும் மனிதப் பேரவலமும் விரிவடைந்து இன அழிப்பு நிகழ்த்தப்படுவதாக அங்கிருந்து வரும் துயரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்திகள் யாவும் தடையேதுமற்ற ஊடகச் சூழலில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் விரைவாக வந்தடைகிறது.

கொதிநிலையிலுள்ள தமிழக, புலம்பெயர்ந்த தமிழர்கள், சர்வதேசத்தின் மனச் சாட்சியை பிடித்து உலுப்ப பல போராட்டங்களைச் சலிப்பின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்த வண்ணமுள்ளனர்.

நிவாரணப் பொருட்கள் நிரம்பிய கப்பலொன்று, பிரித்தானிய தேம்ஸ் நதிக் கரையிலிருந்து முல்லைத்தீவை நோக்கிப் பயணிக்கப் போகிறது.

நாளை திங்கட்கிழமை பெல்ஜியத்திலும் ஜெனிவாவிலும் "உரிமைப் போர்' என்கிற விடுதலை முழக்க ஆர்ப்பாட்டப் பேரணி ஒரே நாளில் நிகழப் போகிறது.

நிஷ்டையில் இருக்கும் சர்வதேச விசுவாமித்திரர்களின் கண்களைத் திறக்க புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள், காத்திரமான மாறுதல்களை உருவாக்குமென்று புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

- சி.இதயச்சந்திரன்-

Comments