நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை - ஈழம் கட்டவே விரும்புகிறோம்

ஈழ விடுதலைக்கு தொப்பூள் கொடி உறவுகளுக்காகத் தாய்த் தமிழகம் கிளர்ந்து எழும் வேளையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை ஆனந்த விகடன் சஞ்சிகையினர் சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கியுள்ள விறுவிறுப்பானபேட்டி வருமாறு:-

பத்துத் தடவை பாடை வராது
பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!
செத்து மடிவது ஒருமுறைதானடா
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!'
என்று



கேள்வி:
கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி. 1983-க்கும் 2009-க்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

1983 என்பது தமிழீழ விடுதலைப் போராளிகள் இயக்கம் வீச்சோடு வளர்ந்து நிமிர்ந்த காலம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழீழக் கைதிகள் துடிதுடிக்க அடித்து, வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குட்டிமணியின் கண்களைப் பிடுங்கிச் செருப்புக் கால்களின் கீழிட்டுச் சிங்கள சிறைக் காவலர்கள் வெறியாடிய காலம். அன்று தமிழகத்தில் எழுந்த பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வுகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருப்பதை நன்றியுடன், நெகிழ்வுடன் பார்க்கிறோம். 83-ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாடு அன்று நடைபெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தாயகத் தமிழர்கள் ஈழச் சொந்தங்களுக்காகத் தங்கள் உடலைத் தீயின் பசிக்குத் தின்னக் கொடுத்த தியாகங்கள் அன்று இல்லை. இத்தனை காலமும் மறைத்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. 'இன உணர்வைப் புதைப்பது என்பது விதையைப் புதைப்பது போலத்தான்' என்பதைத்தான் உங்கள் விடுதலைப் புலிகள் பற்றிய விகடன் கருத்துக் கணிப்பு ஏற்கெனவே நிரூபித்ததே.

கேள்வி:அன்று பிரதமர் இந்திராகாந்தி ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், இன்றைய மத்திய அரசு புலிகளுக்கு எதிராக உள்ளது பின்னடைவுதானே?

உண்மைதான். மத்திய அரசு புலிகளை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம், பயிற்சிகள், போர் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதை காங்கிரஸ் தவிர்த்த தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட 'விரும்பத்தகாத விளைவு' காரணமாக இந்த இடைவெளி ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருதரப்புகளிலும் சில விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்று கருதுகிறேன்.

நல்ல நோக்கத்தோடு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையினரைப் புலிகள் சுட்டுக் கொன்றது நியாயமா?' என்று இந்திய அரசின் சார்பாகக் கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். புலிகளோ, 'எங்கள் போராளி திலீபனை இழந்தோமே, பெருமதியான தளபதிகள் குமரப்பாவையும் ஜானியையும் இன்னும் பல தளபதிகளையும் அமைதிப் படை சுட்டு வீழ்த்தியதே. போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் மக்கள் 12 ஆயிரம் பேர் அமைதிப் படையால் கொலை செய்யப்பட்டார்களே, 300-க்கும் அதிகமான ஈழச் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்களே, இவையெல்லாம் சரிதானா?' என்று கேட்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளை இருதரப்பும் முற்றிலுமாக மறக்க ஏலாதுதான். ஆனால், சில விட்டுக்கொடுப்புகள் இந்தியாவுக்கும் தமிழீழ மக்களுக்கும் இன்றியமையாதது. அண்டை நாடான இந்தியா அறம் தழுவிய ஈழப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற அனைத் திந்தியக் கட்சிகளே எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, மத்திய அரசு மட்டும் எங்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

கேள்வி: சமீபத்திய போரின் தொடர் வீழ்ச்சிகள் புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

ஒரு மாதப் போரை வைத்து புலிகளின் பலம், பலவீனத்தைக் கணிக்க முடியாது. 32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர். ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல், 'புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால், உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!' என்பதுதான் நிதர்சனம்.

இதுவரை 52 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் இலங்கை ராணுவத்தைவிட்டுத் தப்பி ஓடியதாகத் தகவல்கள் சொல்கின்றன. விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர, ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. நிச்சயம் தற்காலிகப் பின்னடைவிலிருந்து புலிகள் மீண்டு எழுவார்கள். ஒரு பாரியத் தாக்குதலை சிங்கள ராணுவத்தின் மீது நிகழ்த்தி வெற்றியடைவார்கள்.

கேள்வி: போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சி, ஈழப் பிரச்னைக்குத் தீர்வாக ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை முன்வைக்கிறதே?

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஈழ மக்கள் என்றைக்குமே ஆதரித்தது இல்லை. அந்த ஒப்பந்தம் சிறிய உரிமைகளைக்கூட ஈழ மக்களுக்கு வழங்காது. இலங்கை என்பது இரு தேசங்களின் நாடு என்பதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. அதிகாரம் சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு என்னும் பிச்சை தமிழர்களுக்கும் என்பதுதான் அந்த உடன்படிக்கையின் பின் உள்ள உண்மை.

அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசும்போதுகூட 7 சிங்கள மாகாணம், 2 தமிழ் மாகாணம், ஆக மொத்தம் 9 மாகாணங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்கிறார்கள். இப்போது நடக்கும் போராட்டம் மாகாணங்களுக்கு இடையேயான போராட்டமா, தேசங்களுக்கு இடையேயான போராட்டமா? ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் சுருக்கிச் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டாலோ, அல்லது இடைக்கால மாகாண சபைகள் அமைக்கப்பட்டாலோ, சாலை போடலாம், பாலம் போடலாம். ஆனால், நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை, ஈழம் கட்டவே விரும்புகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்து அனுப்புமாறு தங்கள் கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதே?

நன்றி. ஆனால், உணவு என்பது இன்றைய தேவையே தவிர, லட்சியம் அல்ல. உணவுதான் லட்சியம் என்றால், திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்க மாட்டான். களத்தில் புலி நஞ்சைச் சாப்பிட்டுச் சாக மாட்டான்.

கேள்வி: போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது. புலிகளும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பற்றி?

புலிகளின் ஆயுதம் என்பது புலிகளைக் காக்க அல்ல, ஈழ மக்களைக் காப்பதற்காகவே' என்று நடேசன் கூறியுள்ளார். ஆயுதங்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததால்தானே இந்திய அரசு புலிகளை அழைத்து ஆயுதம் வழங்கியது? தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது என்ன நியாயம்? இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டியது இலங்கை அரசிடம்தானே தவிர, புலிகளிடம் அல்ல.

- கவிஞர் காசி ஆனந்தன் விகடனுக்கு வழங்கிய பேட்டி -

www.tamilkathir.com

Comments