பிரான்சில் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம்.

புறக்கணி சிறிலங்கா பிரான்சில் பாரீசின் முக்கிய பகுதிகளில் பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரால் முக்கிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் புதன் வியாழக்கிழமைகளில் பாரீசின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகம் செறிந்துள்ள பகுதிகளில் இப்பரப்புரைச் செயற்பாடுகள் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழின அழிப்பை இடைவிடாது தொடரும் சிறிலங்கா அரசாங்கத்தின் விமானசேவையினூடாக பயணம் மேற்கொள்வதை தமிழ்மக்கள் உட்பட பிரஞ்சு மக்களும் புறக்கணிக்கவேண்டுமென்பதை வலியுறுத்திய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். அத்தோடு தமிழின அழிப்பிற்குத்துணைபோகும் சிறிலங்காவின் உற்பத்திப்பொருட்களைப் புறக்கணிக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்திய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.
இனப்படுகொலையின் உச்சத்தை வெளிப்படுத்திய துண்டுப்பிரசுரங்கள் தமிழ்ப்பெண்களால் மிகச்செறிவாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வநியோகிக்கப்பட்டிருந்த இச்செயற்பாடு பிறநாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் சிறிலங்காப் பொருட்களை பாவிப்பது தொடர்பாக,
பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ள கருத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் பியரையோ, சாராயத்தையோ குடிக்காதீர்கள், அரிசி மாவைச் சாப்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை.

அவற்றை சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடாதீர்கள் என்றே கூறுகின்றேன். எமது மக்கள் சோறு, கோழி, சொதி எனப் பழகி விட்டார்கள்.

அதனைச் செய்யுங்கள்.

ஆனால், சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடாதீர்கள்.

ஏனெனில் இவ்வாறான பொருட்கள் மற்ற நாடுகளிலும் உள்ளதென தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments