தனி தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. கூட்டணி: விஜய டி.ராஜேந்தர் அறிக்கை

தனித் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது குறித்து இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர்களை யார் கை கழுவினாலும், தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் இவர்களை கை கழுவுவார்கள். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாக, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நேற்று வரை கை கட்டி வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள் வெற்றியைத் தட்டி பறிக்க பார்க்கிறார்கள்.

காங்கிரசுக்கும், கருணாநிதிக்கும் ஒரு கோரிக்கை. காலம் கடந்தாவது தேடுங்கள் பிராயச்சித்தம். இனிமேலாவது செய்யுங்கள் இலங்கையில் போர் நிறுத்தம். பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதிக்கு கடிதம் எழுதினால் போதாது, இலங்கை மண்ணில் இருக்கும் எம் தமிழர்கள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும்.

இவ்வாறு விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ``இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை, இந்திய அரசு உடனடியாக செய்யவேண்டும். தமிழீழ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தனித் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த கருத்துகளோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்களிடம் மட்டுமே இலட்சிய தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ளும்.

இந்த தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், நம் நிலைப்பாடு குறித்தும் விவேகத்தோடு முடிவெடுக்கும் பொறுப்பை தலைவர் விஜய டி.ராஜேந்தருக்கு இந்த பொதுக்குழு முழு மனதோடு வழங்குகிறது'' என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments