மக்களை மனிதக் கேடயங்களாக சிறிலங்கா படை பயன்படுத்துகின்றது: நா.உ. கனகரத்தினம் குற்றச்சாட்டு

சிறிலங்கா படையினரின் பகுதிக்குச் செல்லும் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ச.கனகரத்தினம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மாத்தளன் பகுதியில் உள்ள சிறிலங்கா படையினரின் பகுதிக்கு செல்லும் மக்கள், படையினரின் முன்னரண் பகுதியிலேயே பல நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர்.

அத்துடன் மக்கள் செல்கின்ற வேளைகளில் துப்பாக்கிச் சூடும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களும் படையினரால் நடத்தப்படுகின்றன.

இப்படியான வலயத்தில் மக்களை படையினர் கொல்கின்றனர். செல்லும் மக்கள் முன்னரண் பகுதிகளில் பல நாட்கள் வரை தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.


[சிறிலங்கா படையினரின் பகுதிக்குள் முன்னரண் பகுதியில் நிற்கும் மக்கள். படம்: புதினம்]

படையினரின் முன்னரண் வேலைகளுக்கு அவர்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர்தான் வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இதில் படையினரின் துன்புறுத்தல் தாங்காமல் தப்பிவந்த 3 பேரை நான் நேரடியாக சந்தித்தேன்.

இளம் ஆண்கள், பெண்கள் என பிரிக்கப்பட்டு அவர்கள் தனியே கொண்டு செல்லப்படுவதையும் அவர்கள் கொண்டு செல்லப்பட்ட பகுதிகளில் அலறல்கள், கதறல்கள் கேட்டதையும் அடுத்தும் மக்கள் படை அரண் அமைத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதையும் இதனை அடுத்து, தாம் அச்சத்தால் மக்களின் பின்னால் நின்று தப்பிவந்து விட்டதாக அவர்கள் தனக்கு தெரிவித்ததாக ச.கனகரத்தினம் மேலும் தெரிவித்தார்.

Comments