பற்றும் பாசமும்

"அம்மா.......அம்மா............" அவசரமான தொனியில் அழைத்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.

இரண்டு மாடி வீட்டின் நிலக்கீழ்த்தளத்திலிருந்த உலர்த்தியுள் இருந்து ஆடைகளை எடுத்து மடித்துக்கொண்டிருந்த வதனாவுக்கு மகளின் குரல் கேட்கவில்லை.மாடியில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்த தாத்தா திருநாவுக்கரசுவுக்குத்தான் தன் செல்லப்பேத்தியின் அவசரம் புரிந்திருக்க வேண்டும். மெதுவாக எழுந்து வந்தவர் "என்னடா............பிள்ளைக்கு என்ன வேணும்" என்றவாறு கீழே எட்டிப் பார்த்தார்.

"கதவைப் பூட்டுங்கோ தாத்தா" என்றவள் ஏதோ நினைத்தவளாய் "நாலு மணிக்கு முதல் வந்திடுவன்.........வெளிக்கிட்டு நில்லுங்கோ......." என்று விட்டு வாசல் கதவைச் சாத்தியபடி வேகமாக வெளியேறினாள். வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றவர் மருமகள் மேலே வந்ததும் விபரம் கூறி விட்டுத் தனது அறைக்குள் இருந்த சாளரத்தூடே வெளியே எட்டிப் பார்த்தார். அதற்குள் அமிர்தாவின் சிவப்பு நிற வாகனம் மணிக்கு ஐம்பது மைல் வேகத்தை எட்டி முச்சந்தியினைக் கடந்து முதன்மைச்சாலைப் போக்குவரத்தில் கலந்து மறைந்திருந்தது.

"இப்பத்தையப் பிள்ளைகள்..........." என்று மனதுக்குள் கூறி கொடுப்புக்குள் சிரித்தபடி நடுத்தளத்துக்கு வந்த மாமனாரைப் பார்த்து " வாங்கோ மாமா சாப்பிட......." என்றழைத்து அவருக்குப் பரிமாறி விட்டுத் தானும் அமர்ந்து உணவருந்தத் தொடங்கினாள் வதனா.

"பிள்ளை உவளுடைய போக்கு கொஞ்ச நாளாச் சரி இல்லை. கதையளும் ஒரு மாதிரித்தான் போகுது......" என்றது தான் தாமதம் அவளும் தன் பங்கிற்க ஓம் மாமா நானும் கவனிச்சுக் கொண்டுதான் இருக்கிறன். ஊருலகத்தில நடக்கிறதுகளைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்த எங்களுக்கு வீட்டுக்குள்ள பிரச்சினை வரேக்க தான் மண்டை விறைக்குது........" என்று கூறி ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.அதே நேரம் அவள் கணவன் தவமும் மகனும் தாம் கொள்வனவு செய்த மளிகைப் பொருட்களுடன் ஆரவாரமாக வீட்டுக்குள் நுழைந்தனர்.

"சொல்லி விட்ட எல்லாச் சாமானும் வாங்கினனீங்களோ......." என்றபடிபைகளை வாங்கியவளிடம் அப்பாவும் பிள்ளையும் சொன்ன ஒரு செய்தி வதனாவையும் தாத்தாவையும் ஆச்சரியத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது."ஓம் அம்மா எல்லாம் வங்கினனாங்கள். வழமையாக நாங்கள் போற அந்தத் தமிழ்க் கடையில இந்தமுறை எந்த விதமான சிறிலங்காச் சாமானும் இல்லை!!""உண்மையாகவே? நம்பவே முடியேல்ல.......சவர்க்காரத்தில் இருந்து ஊறுகாய் வரை இறக்குமதி செய்தெல்லே வைத்திருந்தவை...??" என்று வியப்பு மேலிடக்கேட்டார் தாத்தா."இருந்த எல்லாத்தையும் சந்தியில போட்டுக் கொளுத்தி இங்கே இருக்கிற மற்றைய இன மக்களுக்கும் எங்களுடைய புறக்கணிப்புக்கான காரணத்தையும் சொல்லி எங்களுடைய மாணவர்கள் விளக்கம் கொடுத்திருக்கினம்" என்று விரிவாகக் கூறினான் தவா.

"உது பெரிய விசயம். அதோட நிற்காமல் அவங்களுடைய பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய வகையில 'சிறிலங்கன் எயர்லைன்ஸ்' விமான சேவையையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லியும் நாங்கள் பரப்புரை செய்ய வேணும். அப்பத்தான் யுத்தவெறி பிடிச்சு அலையிற அவங்களுக்குச் சரியான பாடம் படிப்பிக்கலாம்". "இப்ப இருக்கிற நிலைமையில சிறிலங்காவுக்கு உதவி செய்கிற நாடுகளின் பொருட்களையும் எல்லோ நாங்கள் வாங்காமல் விடவேணும் போல இருக்கு?"

"ஓம் உண்மைதானே ? எங்களுடைய தமிழ் ஆட்கள் உந்த இணைத் தலைமை நாடுகள் குழுவில இருக்கிற ஜப்பானுடைய வாகனங்களையும் கணினிகளையும் வாங்காமல் விட்டாலே நிறைய தாக்கம் வரும்..........அப்பத்தான் எல்லாருக்கும் விளங்கும் எங்களுடைய நோக்கம் என்ன என்று........."தொடர்ந்த உரையாடலை இடை மறித்த வதனா "அமுதன் முகத்தைக் கழுவி விட்டு வாங்கோ.

பின்னேரம் சாதாச்சித்தப்பாவும் பிள்ளைகளும் தாத்தாவைப் பார்க்க வருவினம் எண்டு யாழினிச் சித்தி காலையில சொன்னவ....." "அப்ப அம்மா நாங்கள் அந்த நிகழ்ச்சிக்குப் போகேல்லையே...?""எந்த நிகழ்ச்சி.......ஆ............அந்தக் கவனயீர்ப்புக்கோ............""ஓம் அம்மா கட்டாயம் போக வேணும். பக்கத்து வீட்டு வினோதினி அக்கா நிலவன் எல்லாரையும் கூட்டிக் கொண்டு போவம் என்ன?""சித்திக்கு இரவு வேலை. அவ வரமாட்டா. சித்தப்பாவும் இரண்டு நாளாய் பல்லுக் கொதி என்றவராம். சிலவேளை பிள்ளைகளை எங்களோட விட்டுட்டுப் பல்லுப் பிடுங்கப் போவார்.....எண்டு நினைக்கிறேன்"."இல்லை அம்மா சித்தப்பா நாளைக்குத் தான் போவாரெண்டு எனக்குச் சொன்னவர்." "சரி சரி இப்ப அப்பாவும் பிள்ளையும் கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடுங்கோ. எனக்கு நிறைய வேலை இருக்கு.......இப்பவே ஒன்றரை மணியாச்சு........" என்றபடி அடுக்களையுள் நுழைந்தாள் வதனா.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு உணவருந்தி முடித்த தாத்தா "அமுதன் அக்கா உங்களை தன்னுடைய செல்பேசியில மூன்று மணிக்குத் தொடர்பு கொள்ளச் சொன்னவ........நாலு மணிக்கு வருவாவாம் வெளிக்கிட்டு நிற்கட்டாம்"என மறக்காது பேத்தியின் தகவலைப் பேரனிடம் கூறி விட்டு மீண்டும் தன் தனியறைக்குள் நுழைந்து கொண்டார். வதனா தன் வீட்டு வேலையில் மும்முரமாக அமுதனும் தவாவும் சாப்பிட்டு முடித்து விட்டு சற்று ஓய்வெடுக்கும் விதமாக தினசரியில் மூழ்கினர். மதியவுணவுக்குப் பின்னான தனது மருந்துக் குளிகைகளை உட்கொண்டுவிட்டுஇ தன் கட்டிலில் படுத்திருந்தவாறு வானொலி நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தார் நாவுக்கரசர்.

அப்பொழுது நேயர் ஒருவரின் விருப்பமாகக் காற்றலைகளில் தவழ்ந்து வந்து காதில் வீழ்ந்த "அந்த ஆலமரம்......நெஞ்சினில்.........நிறைஞ்சிருக்கு........." என்ற தாயகப்பாடல் அவரின் நினைவலைகளைத் தன் ஊர்ப்பக்கம் கூட்டிச் சென்றது. யாழ் குடாநாட்டின் வலிகாமப் பிரதேசத்தில் பசுமை நிறைந்த கோப்பாய் மண்ணில் மூன்று சகோதரியருக்கும் இரண்டு சகோதரருக்கும் மூத்தவராய்ப் பிறந்து வளர்ந்தவர் தான் நாவுக்கரசர்.பிரபல்யமான நகர்ப்புறப் பாடசாலையில் கல்வி பயின்ற அவர் அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்போது கொடிபிடித்துப் பங்கெடுத்தவர்.

எண்பத்து மூன்றின் ஆடி மாத இனப்படுகொலை வரை இலங்கைத்தீவின் தென்பகுதியில் உள்ள மாவட்டம் ஒன்றில் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் ஒரு எழுதுவினைஞராகக் கடமை புரிந்திருந்தார். பின்னர் நாட்டு நிலைமை காரணமாக தானாகவே விரும்பி ஓய்வு பெற்றுக் கொண்டு தன் மனைவி விசாலாட்சியுடனும் இரு மகன்களான தவா சதாவுடனும் அந்த வளம் கொழித்த மண்ணில் குடியேறினார். இரவு பகலாக வயலிலும் தோட்டத்திலும் நின்று விவசாயம் செய்து தன் குடும்பத்தைக் காத்து வந்தவருக்கு மூத்தவன் தன் படிப்பை விட்டுவிட்டு சிரமதானம்இ இரத்த தானம் என்று திரிந்ததும் பலரையும் போல பயம் பற்றிக் கொண்டது.

அவனின் வயதும் துடிப்பும் அவன் செல்லும் பாதையைக் கோடி காட்டிய வேளை 'அமைதி காப்பதாகக் கூறி அநியாயம் செய்த படை' வந்திறங்கிய காலப்பகுதியில் ஒருநாள் மெதுவாகக் கூப்பிட்டு அவனுடன் கதைத்து அவன் மனதை மாற்றி ஏலவே வெளிநாடொன்றில் அகதியாகக் குடியேறியிருந்த தன் மைத்துனரின் உதவியுடன் கனடா மண்ணுக்கு அனுப்பினார்.

தவாவும் இங்கு வந்து திரும்பவும் பத்தாம் வகுப்பில் இணைந்து கெட்டித்தனமாகப்படித்து முன்னேறிப் பல்கலைக்கழகம் புகுந்து பட்டதாரியும் ஆனான். பின்பு தன்னுடன் படித்த வதனாவை இரு வீட்டார் சம்மதத்துடன் கைப்பிடித்து அமிர்தாவுக்கும் அமுதனுக்கும் நல்லதொரு தந்தையுமாகி தன்னால் முடிந்தளவு நாட்டுக்கும் உதவியபடி தானுண்டு தன் குடும்பமுண்டு என வாழ்ந்து வந்தான்.குடாநாட்டு இடப்பெயர்வுவரை இளையவன் சதா பற்றிய பிரச்சினை எதுவுமின்றி இருந்த நாவுக்கரசருக்கும் மனைவிக்கும் வன்னி மண்ணில் குடியேறிச் சில காலத்தில் மீண்டும் ஒரே விதமான அதே பிரச்சினை உருவாகியது.

தான் தன் அண்ணன் போல வெளிநாடு போக முடியாது என்று பிடிவாதமாக மறுத்துத் தன் படிப்புடன் கூடவே தேசத்துக்கான பணிகளையும் தொடர்ந்தான் சதா. அப்படி இருக்கையில் ஒருநாள் அவனின் நடவடிக்கையால் நொந்து நூலாகியிருந்த நாவுக்கரசரின் மனைவி விசாலம் மார்பு வலி கண்டு கிளிநொச்சியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். முதலாவது தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விசாலம் ஒரே வாரத்தில் வீடு வந்து சேர்ந்து முழு நேர வேலையாக ஒருவாறு வற்புறுத்தியும் கெஞ்சிக் கூத்தாடியும் சதாவின் மனதை மாற வைத்தாள்.அதன் பின் சரியாக இரண்டே வருடத்தில் மூத்தவனின் உதவியால் மூவருமாக கனடா மண்ணில் வந்திறங்கினார்கள்.

சில காலம் மகிழ்ச்சியுடன் கழித்தவர்கள் வாழ்வில் ஆழிப்பேரலைச் செய்தி இடியாய் விழுந்தது. முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் வாழ்ந்திருந்த மிக நெருங்கிய பல உறவுகளைச் சமுத்திரத்துக்குக் காவு கொடுத்த விசாலாட்சி அதன் பின் இரண்டாவது மார்புவலி வந்ததும் எல்லோரையும் ஆளாத் துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்டாள். இதன் பின் தனிக்கட்டையாகிவிட்ட திருநாவுக்கரசருக்குத் தன் பேரப்பிள்ளைகளே பெருந்துணை ஆனார்கள்.அவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதும் தனது இளமைக்கால அரசியல் வாழ்வு பற்றியும் நாட்டுப் பிரச்சினை பற்றியும் கதைகளாய்ச் சொல்லுவதும்தான் பொழுதுபோக்காயிற்று.

கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் தனது அனுபவங்களையும் உணர்வுகளையும் தாத்தா தன் பேரப்பிள்ளைகளுக்கு கூறி வந்ததன் விளைவாக அமிர்தாவுக்கும் அமுதனுக்கும் தமது மூதாதையர் வாழ்ந்த மண்ணில் பற்றும் அங்கு வாழும் மக்களின் மீது பாசமும் உருவாகிற்று. இங்கிருக்கும் தாங்கள் படித்து நல்ல முறையில் தங்களுடைய நாட்டுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அண்மைக்கால தாயக நிகழ்வுகள் பெருந்துயரத்தைத் தந்தன. இப்போது அமிர்தா கனேடியப் பல்கலைக்கழகமொன்றில் முதலாம் ஆண்டு மாணவி. இருந்தாலும் தன் படிப்பு வீட்டுப்பாட வேலைகள் எல்லாவற்றுக்கும் மத்தியில் கூடப் படிப்பவர்களுடன் சேர்ந்து கூட்டங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்கள் என சகல நிகழ்வுகளுக்கும் சென்று தன்னாலான ஒத்துழைப்பை நல்கி வந்தாள்.

அமுதனும் அக்காவுக்குச் சளைத்தவனல்ல. தன் அக்காவைப் போன்ற இளையவர்கள் நடாத்தும் நிகழ்வுகளில் தானும் ஆர்வத்தோடு கலந்து கொள்வான். அத்துடன் நின்று விடாது தன்னுடன் படிக்கும் வேற்றின மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் தனது பாடசாலைஆசிரியர்களிடமும் எமது நாட்டு நடப்புக்களையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வான். இலங்கைத்தீவில் சிங்கள் அரசால் பயங்கரவாதத்தை அழிப்பதாகக் கூறியபடி பன்னாட்டு உதவிகளுடனும் ஒத்துழைப்புடனும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பது தமிழின அழிப்பு நடவடிக்கையே என்று புரிய வைப்பதில் தன் நண்பர்களுடன் சேர்ந்து முன்னின்று உழைத்தான் அமுதன்.இன்றும் அப்படித்தான்.

தாத்தா கூறியபடி தன் அக்காவிடம் தொடர்பு கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் இணைந்து நடாத்தும் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் அடையாள உண்ணாவிரதத்திலும் பங்கெடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தான். பேத்தியின் வாகனச்சத்தம் கேட்டதும் புறப்படத் தயாராகி தனது அறையை விட்டு வெளியே வந்த தாத்தா கீழ் வீட்டில் குழுமியிருந்தவர்களைக் கண்டதும் மலைத்துப் போனார்.

உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்களது வீடுள்ள பிரதேசத்தில் வசித்த பலர் தமது பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள். தனது குடும்பத்தின் அழைப்பை ஏற்று இனப்படுகொலைக்கு எதிரான எமது போராட்டத்தில் இணைந்து பங்களிக்க வருகை தந்த எல்லோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்த அமிர்தா இன்றைய நிகழ்வு பற்றிச் சிறு விளக்கத்தைக் கொடுத்த பின் துண்டுப்பிரசுரங்கள் சிலவற்றையும் கொடுத்து விட்டு அவர்களை அந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ள இடத்தில் மீண்டும் சந்திப்பதாகக் கூறவும் எல்லோரும் விடைபெற்று தத்தமது வாகனங்களை நோக்கிச் சென்றார்கள்.

அதே நேரம் சதாவும் யாழினியுடனும் தன்னிரு இரட்டைக் கைக்குழந்தைகளுடனும் வந்து சேர்ந்தான். அமுதன் தான் ஏலவே செய்து வைத்திருந்த பதாகைகளை எடுத்து எண்ணி ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அடுக்கினான். அவற்றில் "எங்கள் தலைவன் பிரபாகரன்" " எங்களுக்கு வேண்டும் தமிழீழம்""விடுதலைப் புலிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்" "விடுதலைப் புலிகளே எங்கள் ஏகப்பிரதிநிதிகள்" "தடையை நீக்கி விடுதலைப் புலிகளை அங்கீகரியுங்கள்" போன்ற இன்னும் பல முழக்கங்கள் எழுதப்பட்டிருந்ததைப் படித்த தாத்தா மகிழ்ச்சி மேலீட்டால் கண்கள் கலங்கினார்.அதைக் கண்ணுற்ற அமுதன் "ஏன் தாதா அழுகிறீங்கள்?" என்று கவலையோடு வினவினான்.

"ஒன்றுமில்லை என்ட குஞ்சு! நாங்கள் அந்தக் காலத்தில பிடிக்காத கொடியுமில்லை....போடாத கோசமுமில்லை......போகாத ஊர்வலமுமில்லை.அகிம்சை வழியில போராடிப் பார்த்தோம் - ஆயுதங்களால அடக்கினாங்கள்......" "ஓம் தாத்தா நீங்கள் அந்தக் கதையெல்லாம் சொன்னனீங்கள் தானே? அதுக்கு இப்ப என்ன?"

"ஆனால் தவிர்க்கேலாமல் - வேறு வழியே இல்லாமல் எங்களுடைய தலைவர் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டுஇ எல்லாரையும் வாங்கோ ஒன்று சேருங்கோ எண்டு அழைக்கேக்குள்ள இரத்த பாசத்தில எங்களுடைய பிள்ளைகளை நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பிப் போட்டம்"."சரி தாத்தா அதையெல்லாம் இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம்? என்னென்னவோ காரணங்களுக்காக எல்லாம் வந்த நாங்கள் இப்ப அங்கே இருக்கிற நிலைமையை மாற்ற என்ன செய்யவேணுமோ அதைச் செய்யவேணுமே தவிர வீணாகக் கவலைப்பட்டு ஆகப் போறது ஒன்றுமில்லை..... நேரம் தான் வீணாகும்"

-ஆதவி-

நன்றி சங்கதி

Comments