கனடா - ரொறன்ரோவில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு வரலாறு படைத்த மனிதச்சங்கிலி – ‘உரிமைப்போர்’
உலகின் பல பகுதிகளிலும் ஆரம்பித்த இவ் உரிமைப்போர் கனடாவில் மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றது.
ரொறன்ரோ மாநகரின் மையப்பகுதியில் மனிதச் சங்கிலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் உரிமைப்போரிற்கு மதியம் 12 மணியளவிலேயே மக்கள் வந்து குவியத் தொடங்கியிருந்தனர்.
ரொறன்ரோவின் வர்த்தகச் சுற்றுவட்டாரம் எனப்படும் மத்திய பகுதி வீதிகள் தமிழ்க் கனடியர்களினால் நிரம்பி வாகனங்கள் நகரமுடியாத நிலை காணப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி, கனடியத் தேசியக்கொடி மற்றும் தமிழீழத் தேசியத் தலைவரின் படங்கள் என்பவற்றை தங்கள் கைகளிலே தாங்கி நின்ற மக்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை வெளிப்படுத்தும் பதாதைகளையும் கைகளிலே வைத்திருந்தனர்.
அப் பதாதைகளில்,
‘தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலைப் போராளிகள்’
‘தமிழர்களின் காவலர்கள் விடுதலைப்புலிகள்’
‘எமக்கு வேண்டும் தமிழீழம்’
‘தமிழீழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன்’
‘தமிழீழத்தை அங்கீகரி’
‘இலங்கைத் தீவில் இரு தேசங்கள்’ என்ற வாசகங்கள் காணப்பட்டன.
ரொறன்ரோவின் யங் மற்றும் புளோர் சந்தியிலிருந்து கனடாவின் மிக முக்கிய தொடரூந்து நிலையமும் பல முக்கிய வர்த்தக மற்றும் அரச நிறுவனங்கள் அமைந்துள்ளதுமான யூனியன் தொடரூந்து நிலையம் வரை மனிதச் சங்கிலி நீண்டிருந்தது.
மனிதச் சங்கிலியாகக் கைகோர்த்திருந்த வேளையில அதில் கலந்து கொண்டவர்கள்,
‘எங்கள் தலைவர் பிரபாகரன்’
‘எங்களுக்கு வேண்டும் தமிழீழம்’
‘எங்கள் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்’
‘எங்கள் போராட்டத்தை அங்கீகரி’
‘தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரி’
‘தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலைப்போராளிகள்’ என்ற கோசங்கள் எழுப்பியவாறு நின்றனர்.
ரொறன்ரோ நகரின் மத்தியின் 15 கிலோ மீற்றர் சுற்றளவு கொண்ட பிரதேசத்தில் நடைபெற்றதாயினும் இப்பிரதேசத்தில் உள்ள சந்திகள் அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிநின்றதானது, நகரம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக காணப்பட்டது.
தொடர்ந்து, கனடிய மண்ணில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் தமிழீழத் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். கனடியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடியினை மறைந்த மாமனிதன் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் துணைவியார் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ தேசத்தின் சமாதான பேச்சுக் குழுவைத் தலைமை தாங்கியவரான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.
நிகழ்வில் கனேடியப்பிரதமர் மற்றும் ஜ.நா தலைவருக்கும் அனுப்புவதற்கான மகஜருக்கு 2 இலட்சத்துக்கும் அதிகமான கையொப்பங்கள் பெறப்பட்டது. இதில் வேற்றின மக்களும் கையொப்பமிட்டனர்.
நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த Royal York Hotel இல் ஊடகவியலாளர் மாநாடும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெருமளவிலான கனேடிய தேசிய ஊடகங்கள் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளை உள்வாங்கிச் சென்றன.
காலையில் இருந்து கனடியத் தேசிய ஊடகங்களின் பிரதான செய்தியாக ரொறன்ரோ வீதியில் பாரியளவில் நடைபெறவுள்ள தமிழர்களின் மனிதச் சங்கிலி தொடர்பானதாகவே அமைந்திருந்தது.
மனிதச் சங்கிலி ஆரம்பித்ததிலிருந்து அது பற்றிய செய்திகளை தங்கள் ஊடகங்களில் வெளியிட்ட தேசிய வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் சிறீலங்கா அரசின் இனப்படுகொலை தொடர்பான விவாதங்களையும் தங்கள் ஊடகங்களில் மேற்கொண்டிருந்தன.
இதேவேளை இம் மனிதச் சங்கிலி உரிமைப்போர் நிகழ்வு தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்த ரொறன்ரோ காவற்றுறையினர், ‘இதுவரை காலமும் தமிழர்களால் நடாத்தப்பட்ட நிகழ்வுகள் எதிலும் எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெற்றதில்லை. இந் நிகழ்வும் அவ்வாறே தொடர்ந்தது’ என்றனர்.
Comments