ஈழத் தமிழருக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கருணாநிதி கூறினால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்:ராமதாஸ்

ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறுவதில் உண்மையில்லை எனவும் அதை யாரும் ஏற்கமாட்டார்கள் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. செயற்கு ழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கோபமடைந்தார் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தின்போது, இந்தியாவின் கட்டுப்பாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாக அறிவிக்கும் அளவுக்கு தி.மு.க. ஆட்சி உள்ளது என இந்திரா காந்தி குற்றஞ்சாட்டினார். அதற்கு மறுநாள் 1977, ஜனவரி 31-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது

1972-ல் தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தி.மு.க. அமைச்சரவை மீது 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை அளித்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டது.

அப்போது இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

ஆனால் அதற்குப் பிறகு நெருக்கடி நிலையை கொண்டு வந்த அதே காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது. அக்கூட்டணி தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது

கருணாநிதி அளித்த நிர்பந்தம் காரணமாக 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. அரசை, மத்திய அரசு கலைத்தது

1983-ம் ஆண்டில்தான் இலங்கை இனப் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார்.

ஈழத் தமி ழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆருக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியால்தான் கருணாநிதி இராஜிநாமா செய்தார்

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. வி.பி. சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. வி.பி. சிங் பதவி இழந்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமரானார்

வி.பி. சிங்கோடு நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, ராஜீவ்காந்தி ஆசியோடு தி.மு.க. அரசு அப்போது கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் விடுதலைப் புலிகளை அடக்க கருணாநிதி தவறிவிட்டார் என்பதும் ஒன்றாகும்

ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமல்ல. எனவே ஆட்சி கலைப்புக்கு மத்திய அரசு கூறியது உண்மையான காரணமல்ல.

1980-ம் ஆண்டில் இந்திரா காந்தி உதவியோடு எம்.ஜி.ஆர். ஆட்சியை கருணாநிதி கலைத்தார். அதே காரணத்தால்தான் 1991-ல் ராஜீவ்காந்தியின் உதவியோடு தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்பட்டது எனவே இரண்டு முறை தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் உள்ளூர் அரசியல், தில்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள் மற்றும் அப்போது ஏற்பட்ட கூட்டணி மாற்றங்கள் உள்ளிட்டவையே காரணம்

ஆகவே ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனி மேலும் கருணாநிதி கூறினால், அதை யாரும் ஏற்கமாட்டார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Comments