என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும். அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும் அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும். ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான் ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை வளர்த்திருக்கிறது.
ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009-ல் ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கில் பிற்பகலில் கலந்து கொண்டேன். ஈழத்திலிருந்து வந்திருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) எம்.கே.சிவாஜிலிங்கம் ஈழத்தில் நடக்கும் செய்திகளைப் பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் ஓவென அழுது அருகிலிருந்த நண்பனின் மடியில் படுத்துக் கொண்டான. அவன் கண்களிலிருந்து கண்ணீர்த் தாரைத்தாரையாக வழிகிறது. அவன் கால்களும் கைகளும் நடுங்குகின்றன. அவன் உடல்மொழி என்னை அச்சுறுத்தியது. இதே மனநிலையில் இந்த இளைஞன் இருந்தால் அல்லது அவனுடைய இந்த மனநிலை வளர்க்கப்பட்டால் இவனும் வீரவணக்கம் பட்டியலில் வந்துவிடுவானோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஒரு தாயாக சகோதரியாக அவனைப் பார்த்த எனக்கு அவன் கண்களும் அந்தக் கண்களில் கண்ட சோகமும் இயலாமையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் உடல் நடுங்குவதையும் கண்டு அச்சம் ஏற்பட்டது.
"ஒரு பெரிய ஆலமரம் வேரோடு சாயும்போது அதில் தங்கியிருந்த பறவைகளும் முட்டைகளும் அழியத்தான் செய்யும்"
அப்படியே அவனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுவதும் நன்றாக ஓய்வு கொடுப்பதும் தேவை என்று என் உள்ளம் சொன்னது. அருகிலிருந்த நண்பரிடம் "அவனுக்கு குடிக்கத் தண்ணீர்க்கொடுங்கள் டேக் கேர் ஆஃப் கிம்" என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தப் பார்வை அந்த இடத்திலிருந்து என்னை நகர்த்தியது. அதன் பின் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவந்த உயிர்த்தியாகங்கள் என்னை இதை எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின. அதிலும் கட்சி வாரியாக தமிழ்நாட்டில் தீக்குளிப்புகள் நடக்கிறதோ என்று ஐயப்படும் அளவுக்கும் பத்திரிகை செய்திகள் பயமுறுத்தின.கொழுந்துவிட்டெரியும் ஈழத்துப் பிரச்சனைகளுக்கு நடுவில் அதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒரு கணத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மன அழுத்தம். அதுவும், தான், தன் மனைவி, மக்கள், சாதி, சமயம், ஊர், உறவுகள் என்ற வட்டங்களை உடைத்துக்கொண்டு தன் சகமனிதனின் துன்பம் கண்டு சகிக்கமால் தங்கள் இயலாமையின் காரணமாக சினம் கொண்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள்.
அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது அரசாங்கமும் அரசியல் தலைவர்களும்தான். இன்னும் சொல்லப்போனால் அரசாங்கத்தை ஓட்டுப்போட்டு உருவாக்கிய நாமும் அரசியல் தலைவர்களை ஏற்றுக்கொண்டிருக்கும் நம் சமூகமும்தான் குற்றவாளிகள். வீரவணக்க வசனங்களை, கவிதைகளை மறந்து அறிவுப்பூர்வமாக இதை அணுகும்போது தமிழினத்தின் இயலாமையோ என்ற எண்ணம் வருகிறது! வீரவணக்கம் என்ற வழிபாடு நம் இனக்குழு பண்பாட்டின் எச்சமாகவே நம்மிடம் தொடர்கிறது என்று நினைக்கிறேன். சங்க இலக்கியத்தில் புறநானூறு 335-ல் "பகைவர் முன்நின்று தடுத்து யானையைக் கொன்று மரணம் அடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர வேறு வழிபாடில்லை" என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டின் தாக்கத்தை அப்படியே இந்தி எதிர்ப்பின்போது உயிர் நீத்த தாளமுத்து, நடராசன் விசயத்தில் திராவிட இயக்கங்கள் பயன்படுத்திக்கொண்டன. போர்க்களத்தில் வீரமரணம் அடைவதும் தன் எதிர்ப்பைக் காட்டும் வகையில் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை நாம் அறிந்திருந்தாலும் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசவோ எழுதவோ அச்சப்படுகிறொம். அந்தளவுக்கு நம்மை நம் தலைவர்களும் சமூகமும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது உண்மை.
இன்னொரு செய்தியும் எனக்கு நினைவுக்கு வருகிறது 2008, 26/11 மும்பை மாநகர தாக்குதலின்போது எதிரியின் குண்டுக்குப் பலியான மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள் (Hemant Karkare, Ashok Kamte and Vijay Salaskar) ஹேமந் கர்க்கரே, அசோக் காம்டே, விஜய் சாலஸ்கர் மூவருக்கு இந்திய அரசு அசோகச்சக்ர விருது வழங்கியது. ஆனால் இம்மாதிரி தாக்குதல்களில் எதிரியின் குண்டுக்குப் பலியாவதும் போர்க்களத்தில் எதிரியை எதிர்க்கொண்டு போரிட்டு உயிரிழப்பதும் ஒன்றல்ல. மும்பைத் தாக்குதலில் பலியான அவர்களை மதிக்கிறோம் எனினும் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது சரியல்ல என்று இந்திய இராணுவ படைத்தளபதிகள் தம் கருத்தை மிகவும் தெளிவாக முன்வைத்தார்கள். நம்மில் பலர் நினைக்க கூடும். இம்மாதிரியான உயிர்த்தியாகங்கள் மக்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தவல்லன
இந்திப் போராட்ட காலத்திலிருந்து இன்றுவரை நம் தமிழ்ச்சாதி கண்ட உயிர்த்தியாகங்களின் எழுச்சிகள் மூலம் நாம் சாதித்துக் கிழித்தது என்ன? இன்றுவரை நடுவண் அரசின் இந்தி மொழிக்கொள்கை புறவாசல் வழியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறதே! செம்மொழி நாடகத்தில் தமிழன் இந்திய அரசால் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டான்? நாம் செய்தது என்ன? 1983-லிருந்து ஈழத்து நம் உறவுகளுக்காக நாம் எழுதி எழுதிக் குவித்திருக்கும் கவிதைகளும், கவியரங்கங்களும் இலட்சங்களைத் தாண்டும். ஒரு கவிதை ஒரு தமிழன் உயிரைக் காப்பாற்றி இருந்தால் கூட இன்றைக்கு நம் ஈழத்தமிழ் மண் இடுகாடாகியிருக்காதே!
எதையும் உணர்வுப்பூர்வமாக பார்ப்பது தவறல்ல. ஆனால் அப்படி மட்டுமே பார்ப்பது மாபெரும் தவறு. பிரச்சனைகளைத் தீர்க்க அறிவாயுதம் ஏந்த வேண்டும். ராஜீவ்காந்தி மரணத்தில் தமிழினம் எவ்வளவு பாதிக்கப்பட்டதோ அதைவிட அதிகமாக அவர் அன்னையார் இந்திராகாந்தி அம்மையார் மரணத்தில் சீக்கியர்கள் பாதிக்கப்பட்டார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் கண்டனக் கவியரங்கங்கள் நடத்தவில்லை. உயிர்த்தியாகங்கள் செய்யவில்லை. ஆனால் செயலில் காட்டினார்கள். "ஒரு பெரிய ஆலமரம் வேரோடு சாயும்போது அதில் தங்கியிருந்த பறவைகளும் முட்டைகளும் அழியத்தான் செய்யும்" என்று 3000 சீக்கியர்களை டில்லியில் கொன்று குவித்ததை அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்தி பேசினார். கொதித்துப்போன சீக்கியர்கள் விடவில்லை. கொஞ்சநாள் கடந்து ராஜீவ்காந்தியை மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம்.
வீரவணக்கம் சொல்ல
அச்சமாக இருக்கிறது.
மன்னித்துவிடுங்கள்.
கட்சிவாரியாக தீக்குளிப்புகள்
வீரவணக்கங்கள்
கூட்டங்கள்
தலைவர்கள்
வீரவசனங்கள்
அறிக்கைகள்
அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள்
கதவடைப்புகள்
கண்டனக்கூட்டங்கள்
கவிதையின் இடிமின்னல்
போதும் போதும்….
முத்துக்குமரன்களை ஈன்ற
அன்னையின் கருவறை சத்தியமாய்
எமக்கு வேண்டும்
எம் மண்ணில்
ஒரே ஒரு மண்டேலோவின்
மனித சரித்திரம்.
- புதியமாதவி, மும்பை-
Comments
ராஜீவின் சாத்தான் படையால் படுகொலை அரங்கேற்றப்பட்டது
ஆனால்
ராஜீவ் கொலையில் பெரிய தவறு செய்து விட்டார்கள்
குடும்பத்தோடு கொன்றிருக்க வேண்டும்
அதனால் அதன் எச்சங்கள் இப்போது பழி தீர்த்துக்கொண்டிருக்கின்றன
சரி தாய்ப்பாசம் என்று சொல்வோம்
எதற்காக ஒன்றும் செய்யாத 10,000 ஈழத்தமிழர்களைக் கொன்றான்
யாராவது பதில் சொல்வார்களா ?