உலகச் சமூகத்துக்குத் தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்!

உலகச் சமூகத்துக்குத் தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்!

Murugadasan என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்.

எனது பெயர் முருகதாசன்
பிறந்த தேதி 02.12.1982

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் நாட்டின் முகவரியில் வசிக்கும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவன். இலங்கையில் வாழும் தமிழ் இனம் பெரும்பான்மைச் சிங்கள இனத்தின் அரசால் நசுக்கப்பட்டு வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனை நீங்கள் எவரும் தடுத்து நிறுத்தவில்லை. பார்த்துக் கொண்டும் ஊக்கம் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றீர்கள்.

போர் தொடர்பான நடைமுறைகள், ஜெனீவா பிரகடனம், அடிப்படை மனித உரிமைகள், இன அழிப்பு, அதற்கான சட்டங்கள், நடைமுறைகள் எல்லாவற்றையும் ஐநா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வைத்திருக்கின்றன. தனது உறுப்பு நாடுகள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் சட்டம் வைத்துள்ளீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி எனது தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்துகொண்டிருக்கின்றது.

இன்று வன்னியில் எனது நான்கரை லட்சம் தமிழ் உறவுகள் எப்படி கொடூரமாக வதைக்கப்படுகின்றார்கள் என்பதை உலகின் பிரதிநிதிகளான ஐ.நா. அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் அங்கிருந்து வெளியிடும் அறிக்கைகளில் இருந்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

வன்னியில் என் இனத்தின் நான்கரை லட்சம் பேர் ஒரு குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரச படைகளால் நாள்தோறும் எறிகணைத் தாக்குதல்கள் மூலமும் வான்குண்டுத் தாக்குதல்கள் மூலமும் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான என் உறவுகளின் பிணங்கள் வீதிகள் எங்கும் கிடப்பதை அறிந்த போது எனக்கு தாங்க முடியாத துயரமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. நாள்தோறும் எமக்குக் கிடைக்கும் செய்திகளில் வீதி வீதியாக கொல்லப்பட்டுக் கிடக்கும் என் இனத்துப் பாலகர்கள், பால்குடிக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள் பற்றித்தான் தகவல்கள் வருகின்றன.

மருத்துவமனைகள் அங்கு பாதுகாப்பானவையாக இல்லை. மருத்துவமனைகள் கூட குறி வைத்துத் தாக்கப்படுகின்றன. மருத்துவமனைகளைத் தாக்குவதை ஸ்ரீலங்கா அரசே நியாயப்படுத்துகின்றது. அவர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொல்கின்றார்கள். வன்னியில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அதனால் தாக்குவோம் என்கிறார்கள்.

உங்களின் மொழியில் கேட்கிறேன். பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகின்றார்கள். சிறார்கள் கொல்லப்படுகின்றார்கள். வயிற்றில் இருக்கும் சிசுக்கள் கூடக் கொல்லப்படுகின்றனர். அவர்களும் பயங்கரவாதிகளா?

மக்களைக் கொல்வது பயங்கரவாதம் என்கிறீர்கள். அங்கு தமிழ் மக்கள் அரசால் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் இடம் பெயர்கின்ற போதும், இடம்பெயர்ந்து ஒரு இடத்தில் தரித்து நிற்கின்றபோதும் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றபோதும் வீதிகளில் நடமாடுகின்றபோதும் என்று எங்கும் அவர்கள் கொல்லப்படுகின்றனர். கொத்துக் கொத்தாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.

முல்லைத்தீவு சுதந்திரபுரச்சந்தி திடலில் ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் கொடியை ஏற்றி நிலை கொண்டு நிவாரணத்தை வழங்கிக் கொண்டிருந்த போதும் அந்தத் திடல் மீது 26.01.2009 அன்று பகல் இரவாக எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செஞ்சிலுவைக் குழு அலுவலகமும் தாக்கப்பட்டது. அன்று மட்டும் 302 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1199 பேர் படுகாயமடைந்தனர். அன்று அதிகளவில் உடையார்கட்டு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளெங்கும் பிணக் காடாக இருந்ததை எனது உறவினர் நேரில் பார்த்து தொலைபேசியில் சொல்லியபோது நான் அதிர்ந்து விட்டேன். யார் இருக்கிறார்கள், யார் மடிந்தார்கள் என்பதை அறியாமல் உயிருடன் இருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினர். அவலங்களின் சாட்சியாக நின்ற ஐநா அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைக் குழு அதிகாரிகளும் சிறிய பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்பு தேடி இருந்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினர்.

அன்றைய நாளை மறக்க முடியாதளவுக்கு எனக்கு பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. இது பற்றி ஐ.நா பிரதிநிதிகள் செஞ்சிலுவைக்குழுப் பிரதிநிதிகள் அறிக்கை வெளியிட்டனர். அப்பகுதி பாதுகாப்பு வலயம் என்று ஸ்ரீலங்காவால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியாகும். இவ்வாறு தானே பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் சாட்சியாக இருக்க, ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களைப் படுகொலை செய்து வருகிறது. நாள்தோறும் இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. இது அரச பயங்கரவாதம் இல்லையா? அரசே நடாத்தும் இனப் படுகொலை இல்லையா?

இவ்வாறே, போரின் போது மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்படக் கூடாது என்ற மரபையும் புறந்தள்ளி, ஐநா அதிகாரியும் பன்னாட்டு செஞ்சிலுவைக் குழுப் பிரதிநிதியும் நின்றவேளையில் ஸ்ரீலங்கா அரசுப் படைகள் காயமடைந்த மக்களுக்குச் சிகிச்சை வழங்கி வந்த புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 2009.02.02 தொடக்கம் 2009.02.04 திகதி வரை குண்டுகளை வீசி நோயாளர்களைக் கொன்றதற்கு உங்களவர்களே சாட்சி. 4ஆம் திகதி ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டம். அன்றுதான் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக அழித்துச் செயலிழக்கச் செய்யப்பட்ட நாளாகவும் அமைந்தது.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை தொடர் விமானக் குண்டு வீச்சுகளாலும் ஆட்லறி கொத்துக் குண்டுகளாலும் தாக்கப்பட்டபோது அங்கு அப்பாவி மக்கள் 500 பேர் சிகிச்சை பெறுகின்றார்கள் என்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டிருந்தார். இதேவேளை, இதற்கு ஒரு கிழமைக்கு முன் 26.01.2009ல் உடையார்கட்டு மருத்துவமனை தாக்கப்பட்டு மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும்போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்கு போக வேண்டும்? எனக் கேட்டு உடையார்கட்டு மருத்துவமனை மீதான தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார். உடையார்கட்டு பகுதியை சில தினங்களுக்கு முன்னர்தான் பாதுகாப்பு வலயமென குறிப்பிட்டு அங்கு மக்களை ஒன்றுகூடுமாறு சிறிலங்கா அரசு அறிவித்திருந்த நிலையிலும் கூட அந்த மருத்துவமனை தாக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவப் பேச்சாளர் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்தியுமிருந்தார்.

சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரா கூறிய அதே புதுக்குடியிருப்பு மருத்துவமனையே சில தினங்கள் கழித்துத் தாக்கப்பட்டது. 02.02.2009 தொடக்கம் 04.02.2009 வரை குண்டுவீசி நோயாளர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஐ.நா மற்றும் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குறித்த மருத்துவமனை வளாகத்தில் தங்கி நின்ற நிலையிலேயே சிறிலங்கா அரச படைகள் மேற்படி மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டன.

பிரித்தானிய ஸ்கை ஒளிரப்பு நிறுவனத்திற்கு 03.02.2009 அன்று வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே எந்த வைத்தியசாலைகளும் இல்லை. அதனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயப்பூர்வமான இலக்கு என்று வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்தி சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் தாக்கப்படுவதை நியாயப்படுத்தியும் இனியும் மருத்துவமனைகள் தாக்கப்படும் என்பதை வலியுறுத்தியும் மேற்படி சிறிலங்கா அரசின் இராணுவப் பேச்சாளரும் மற்றும் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் உத்தியோகபூர்வமாகவே உலக செய்தி நிறுவனங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு இவ்வாறான ஒரு கருத்தை அவர்களால் கூறமுடிகின்றது என்றால், மருத்துவமனைகள் தாக்கப்படுவது உலகநாடுகள் கொடுத்துள்ள அங்கீகாரம் என்று தானே பொருள்படும்.

முள்ளியவளையில் இயங்கிய முல்லைத்தீவு பொது மருத்துவமனை, வள்ளிபுனத்தில் இயங்கிய முல்லைத்தீவு பொதுமருத்துவமனை, விசுவமடுவில் இயங்கிய கிளிநொச்சி பொது மருத்துவமனை உடையார் கட்டில் இயங்கிய கிளிநொச்சி பொது மருத்துவமனை, மூங்கிலாறில் இயங்கிய மல்லாவி மருத்துவமனை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை என்பன மருத்துவமனைகள் என்பதற்காகவே தாக்கப்பட்டுள்ளன.

இரு தரப்புகளையும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்கும்படி கோரும் இந்நாடுகளுக்கு, வைத்தியசாலைகளைத் தாக்குவதன் மூலம் வேண்டுமென்றே தமிழர்களை இலக்கு வைக்கும் சிறிலங்கா அரசு அதன் காரணமாக அந்தச் சட்டங்களை முழுவதுமாக மீறுகின்றது என்று நன்கு தெரியும். சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் இந்தக் கொள்கை நிலைப்பாடு மனித இனத்திற்கு எதிரான தீங்கியல் குற்றமாகும். இந்தக் கொள்கையை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசின் போக்கால் சென்றமாதம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படவும், காயமடையவும் நேர்ந்துள்ளது.

எனது தமிழ்மக்கள் இலங்கைத் தீவில் படும் துயரத்தின்பால் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது உயிரைக் கொடுக்கின்றேன். இந்த முடிவை எடுத்து நடைமுறைப் படுத்தும் இடைக்காலத்தில் கூட தினம் தினம் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இலங்கைத் தீவெங்கும் வீதி வீதியாக கொல்லப்படுகின்றார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளது. இந்த மனிதத் துன்பியல் கொடூரம் மனிதாபிமான உதவிகள் தமிழ் மக்களுக்குக் கிட்டுவதைத் தடை செய்துள்ள இலங்கை அரசின் நடவடிக்கையால் மேலும் தாமதமாகியுள்ளது. அனைத்துலகச் சமூகம் இந்த உண்மைகளை முழுமையாக அறிந்துள்ள போதிலும் பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களைப் பின்பற்றுமாறு சிறிலங்கா அரசிற்கு கடும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்து சிறிலங்கா அரசிற்கு படை மற்றும் பொருண்மிய உதவிகளை வழங்கி வருகின்றமை பெரும் துர்பாக்கியமாகும்.

தமிழ்த் தேசம், சிங்களத் தேசம் ஆகியவற்றின் வாழிடமே இலங்கைத் தீவு என்பது, தமிழ் மக்களின் உறுதியான மாற்றமுறாத கருத்து நிலைப்பாடாகும். இந்த யதார்த்தத்தை அங்கீகரிக்கும் அடிப்படையில்தான் இரு தேசங்களினதும் உண்மையான பிரதிநிதிகள் அதாவது இரண்டு தேசங்களினதும் எதிர்கால பாதுகாப்பு பரஸ்பர நலன் போன்றவற்றிற்காக எவ்வாறு இரண்டு தேசங்களும் கூடிச் செயற்பட்டு தமிழரின் தேசிய பிரச்சனைக்கு நீதியான நீடித்து நிற்கக் கூடிய தீர்வைக் காணலாம் என்பது குறித்துப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்.

இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள இனத்தவருக்கு உரித்தானது என்ற கொள்கை நிலைப்பாட்டினால்தான், சிங்களவர்களோடு சமத்துவமாக வாழும் ஓர் அரசியல் ஏற்பாட்டை பேச்சு மூலம் காண்பதற்குத் தமிழினம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போயின. சமத்துவமான தமிழ்த் தேசம் உள்ளது என்ற இந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிப்பதற்கு மறுத்த இந்த பௌத்த சிங்கள இன ரீதியிலான தேசியவாதமே இனஅழிப்பு நோக்கிலான போர் வழித் தீர்விற்குச் சிறிலங்கா அரசைத் தள்ளியுள்ளது.

நான்கு நூற்றாண்டுகளாக அந்தத் தீவில் தமிழ் இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். பிரிட்டன் அந்தத் தீவின் பெரும்பான்மை இனமான சிங்களத்திடம் ஆட்சியை விட்டுச் சென்ற வரலாறும் தெரியும். இந்த உரிமைகளுக்காக அறவழியில் தமிழினம் போராடியபோது அதை சிங்கள அரசு வன்முறைகொண்டு அடக்கியதனாலேயே தமிழினம் அடிக்கு அடி கொடுக்க வேண்டிய ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது. அதாவது, தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் படை மற்றும் பௌதீக ரீதியிலான அடக்குமுறையை எதிர்த்து நிற்பது அவசியம் என்பதும், அதுவே ஆயுதம் தாங்கிய தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டியது என்பதையும் உலகம் கவனிக்க வேண்டும்.

தமிழ்த் தேசம் என்ற உண்மை இருப்பு நிலையைத் தனது இனஅழிப்புச் செயற்பாடு மூலம் சிதைத்து அழிப்பதுதான். சிறிலங்கா அரசு தொடுத்துள்ள போரின் நோக்கமாகும். இதை அங்கீகரிப்பது போல 03.02.2009இல் நோர்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (அல்லது இணைத் தலைமை நாடுகள்) விடுத்த கூட்டறிக்கை அனைத்துத் தமிழர்களின் மனதையும் ஆழக் காயப்படுத்தியுள்ளது.

அதாவது தமிழ் மக்களது உரிமைப் போரினதும் சிங்கள இனவாதத்தினதும் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டுமே இணைத் தலைமை நாடுகள் சிறிலங்கா அரசிற்குச் சார்பாகவும் தமிழ்மக்கள் தமது உரிமைப்போரைக் கைவிட வேண்டும் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டமையும் கூட எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஓர் இனம் தனது உரிமைகளைக் கேட்பது தவறு என்று உலகம் கருதுகின்றதா? குறிப்பாக ஐநா அவ்வாறு தான் கருதுகின்றதா? உலகத்தில் ஏன் தமிழ் இனத்துக்கு மட்டும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அல்லது உரிமை மறுப்புக்கு உலகம் ஆதரவு கொடுக்கின்றது. அந்த மறுப்புக்கு ஏன் உலகம் துணை போகின்றது? நாம் ஏன் அடிமைகளாக இருக்க வேண்டும் என உலகம் நினைக்கின்றது.

இன்று ஓர் அரசு பிரகடனப்படுத்தி ஓர் இனத்தை அழித்துக் கொண்டிருப்பது தெரிந்தும் உலகமே அதனைத் தடுக்கவில்லை. அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு விட்டு அமைதியாகி விடுகின்றன. ஆனால் அந்த அமைதியை நீங்கள் அந்த அரசின் இன அழிப்பிற்கு கொடுத்த அனுமதியாக கருதியே சிறிலங்கா அரசு இன அழிப்பை தீவிரப் படுத்தியுள்ளது. ஒரு இனத்தின் அழிவைத்தான் நீங்கள் வரலாற்றில் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். இன அழிப்பைச் செய்யும் அந்த நாட்டுக்கு நீங்கள் ஏன் அழுத்தம் கொடுக்கிறீர்கள் இல்லை? இதுதான் உங்கள் நடுநிலையா?

1958 முதல் இன்று வரை தமிழினத்துக்கு உரிமைகள் வழங்கப்படுவதாக கைச்சாத்திடப்பட்ட உடன்பாடு கள் எல்லாம் சிறிலங்கா அரசால் பல தடவைகள் குறிப்பாக கடைசி நோர்வே போர்நிறுத்த உடன்பாடு வரை கிழித்தெறியப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். கடைசியாக நடந்த பேச்சுக்களின்போது இணைத் தலைமை நாடுகள் ஸ்ரீலங்காவுக்குச் சார்பாகவே செயற்பட்டன. இந்தப் பேச்சுக் காலத்தில் சிறீலங்கா படைத்தரப்பு தன் படையைப் பலப்படுத்தவே பயன்படுத்தியது என்பதும் தெளிவாகத் தெரிந்தது. பேச்சுக்களின் காலங்களைத் தமிழரை ஏமாற்றும் காலங்களாகவே ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்தியது.

மக்களைச் சுதந்திரமாக நடமாட விடவேண்டும் என்று சொல்கின்றீர்கள். சிங்கள சிறிலங்கா அரசு எமது தமிழ்மக்களை ஆட்சிபுரிய அனுமதிக்க வேண்டுமென மறைமுகமாகச் சொல்கிறீர்கள்.

ஒருபுறம் சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எனது இன மக்கள் கடத்தப்பட்டு கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் அநாதரவாகப் போடப்படுகிறார்கள். இவற்றைச் செய்வது யார் என்று புள்ளி விவரங்கள் எல்லாவற்றையும் மனித உரிமை நிறுவனங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டும் நீங்கள் எவருமே அவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக அப்பகுதிகளில் மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்கின்றீர்கள்.

ஈராக்கிற்கு அடுத்தபடியாக உலகளவில் சிறீலங்காவிலேயே அதிகளவில் மக்கள் காணாமல் போகின்றனர் என்பதை உலக மனித உரிமைகள் அமைப்புக்கள் அடையாளப்படுத்தியும் நீங்கள் எவரும் அவற்றிற்கு பரிகாரம் காணாது அப்பகுதிகளினுள் மக்களை போகும்படி கூறுகிறீர்கள்.

சிங்கள சிறீலங்கா அரசின் ஆளுகையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எமது தமிழ்மக்கள் கடத்தப்பட்டும், காணாமற்போயும் உள்ளமை உங்களுக்குத் தெரியாதா? நூற்றுக்கணக்கில் அல்லாமல் ஆயிரக்கணக்கில் நடைபெற்று முடிந்த இவ்வாறு காணாமல் போனதற்கு எதிராக உலகநாடுகள் என்ன செய்தன. இணைத் தலைமை நாடுகளின் பின்புலத்தில் நோர்வேயின் அனுசரணையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் காலத்திற்கூட நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கைத் தீவெங்கும் சிங்கள சிறீலங்கா அரச படைகளால் இரகசியமான முறையில் காணாமல் போகச் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக உலக நாடுகள் எதனைச் செய்தன.

இறையாண்மை என்ற பேரில் நடக்கும் இந்த இன அழிப்பை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். தமிழினத்தின் மீது இன அழிப்பைச் செய்வது சிறீலங்கா அரசு என்றவுடன் நீங்கள் இறையாண்மை பற்றி பேசத் தொடங்குகின்றீர்கள். இறையாண்மை கொண்ட அரசின் உறவைப் பேணுவதற்காக அல்லது பாதுகாப்பதற்காக நீங்கள் சிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதாகவே நாங்கள் எல்லோரும் கருதுகின்றோம். ஓர் இனத்தை நசுக்க அல்லது இனத்தை அழிக்க நீங்கள் எல்லோருமே ஆதரவளிக்கின்றீர்கள். தமிழர் உரிமைக்காக போராட்டம் செய்தால் வன்முறை அல்லது பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லுகிறீர்கள். தமிழரை 1958ல் இருந்து ஒரு அரசு அழித்துக் கொண்டிருப்பதை வன்முறையாக நீங்கள் பார்க்கவில்லையா? தமிழினம் இந்த பூமியில் வாழும் இனமில்லையா? அவர்கள் உரிமைகளுடன் வாழ உரித்துடையவர்கள் இல்லையா? நீங்கள் ஏன் எம்மை மட்டும் நசுக்க ஒத்துழைக்கின்றீர்கள்?

Prabakaran and Anton புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து எமது தமிழ் மக்கள் உங்களுக்கு உங்கள் மொழியில் அறவழியில் எனது இனத்தைக் காப்பாற்றுமாறு குரல்களை எழுப்பினார்கள். ஆனால் எதையும் நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லை. மிகக் கொடூரமாக வதைக்கப்படும் என் இனத்துக்கு என்னால் இங்கிருந்து எதையும் செய்ய முடியவில்லை. குறைந்தது ஆறுதல் சொல்லக் கூட என்னால் முடியாத கையறு நிலையில் இருப்பது குறித்து நான் வெட்கப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன்.

இந்தச் சூழலில் புலம்பெயர் நிலையில் இருக்கும் எனக்கு அங்கு அவலப்படும் என் மக்களுக்குச் செய்யக்கூடியதாக எதுவும் இல்லை. உங்களுக்கு அழுத்தமாக என் இனத்தின் சார்பில் எனது வேண்டுகோளைத் தெரிவித்து என் இனத்தைக் காக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக உனது உயிரை தீயிற்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளேன்.

உலக நாடுகளே, குறிப்பாக, இலங்கை அரசுடன் கைகோத்துள்ள இணைத்தலைமை நாடுகளே ஐ.நா. நிறுவனமே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். சிங்கள அரசு எமது தமிழ்மக்களுக்குச் செய்துவந்த கொடுமைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது. அந்த நீண்ட துன்பியல் வரலாற்றின் நிகழ்காலப் பரிமாணமாகவே, தமிழ்மக்களின் பிரச்சனையில் உலக நாடுகளின் தலையீடும் ஏற்பட்டது. உலகநாடுகள் தலையிட்ட போது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமென தமிழ்மக்கள் நம்பினார்கள். ஏன் நானும் கூட நம்பினேன். ஆனால் நிகழ்காலத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கின்றோம்.

சிங்கள அரசின் கபட நாடகத்திற்கு உலக நாடுகளும் துணை போவதைக் கண்டதனாலேயே இந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனது தமிழ்மக்கள் தங்களது தாய்நாட்டில் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டும் உலகம் பாராமுகத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் சிறீலங்கா அரசை ஊக்குவித்து வருவது கண்டும் மனம் வெதும்பியே உலகப் பொதுமன்றமாம் ஐ.நா. முன்றலில் தீயின் சாட்சியாக என்னை அர்ப்பணிக்க முடிவெடுத்தேன்.

எனது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்குச் சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துணை போனதற்கும் சாட்சியாக ஐ.நா. மன்றத்தின் முன் இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீதி கிடைக்கச் செய்வதில் ஐ.நா.வின் பங்கு எவ்வாறானது என ஆய்வு செய்யப்படும் போது ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் சார்பாக இலங்கைத் தமிழ் இளைஞன் முருகதாசன் தீக்குளித்து உயிர் கொடுத்தான் என்ற வரலாறும் சேரட்டும்.

சிங்கள அரசின் இன அழிப்பிற்குத் துணை போகும் நாடுகளே ஐ.நா.வே இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். நேற்றைய வரலாற்றின் ஏமாற்றத்தின் சோக வெளிப்பாடாக இந்த முருகதாசன் தீக்குளிக்கின்றான். ஆனால் இன்றைய வரலாறு கடந்த காலமாகும். எதிர்காலத்தில் கோபம் கொள்ளும். தமிழரை அழித்தொழிக்க ஊக்குவித்து உதவி புரிவோர் மீது எமது வருங்காலச் சந்ததி கோபம் கொள்ளும்.

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைக் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மன சாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபட வேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே. எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கின்றேன். எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுறவைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்து விடலாம் என சிங்கள அரசு நினைக்கின்றது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம். தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காகத் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக் கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

உண்மைக்காய் உயிர் தரும் தமிழன்
முருகதாசன்

Comments