தமிழர்களுக்கு ஆதரவான எங்கள் நிலைப்பாடு தொடரும்'' குமுறலோடு இயக்குநர் மணிவண்ணன்.



லங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வருகிறார், இயக்குநர் மணிவண்ணன்.

இதற்கிடையே தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குநர் சீமான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால் கொந்தளித்துப் போயிருக்கிறார் அவர். அவரை நாம் சந்தித்தபோது, சீமான் கைது உள்ளிட்ட இலங்கைப் பிரச்னைகள் குறித்துப் பேசினார் அவர்.


``நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்கிற விழிப்புணர்வு இங்கே சூடுபிடித்துள்ள நிலையில், நான்காவது முறையாக சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக இப்படி சீமான், கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இந்தக் கைதுகள், தமிழக மக்களை இந்த அரசுகளுக்கு எதிராகவே திருப்பியிருக்கிறது. சீமானின் பேச்சு தங்களுடைய ஓட்டுக் கணக்கை மாற்றி எழுதி விடும் என்ற அச்சத்தில்தான் காங்கிரஸ் தலைமை `சீமானைக் கைது செய்யுங்கள்' என்று தி.மு.க.வை நிர்ப்பந்திக்கிறது.

`சீமான் கைது செய்யப்பட வேண்டும்' என்று சில ஊடகங்களும் தமிழுணர்வுக்கு எதிராக வரிந்துகட்டி எழுதுகின்றன. அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாகவே சீமான் இப்போது நான்காவது முறையாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த முறை தேர்தல் முடியும் வரை வெளிவர முடியாத தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவர் மீது ஏவியிருக்கிறார்கள்'' என்று கொதித்தவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

சீமான் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இலங்கைப் பிரச்னையில் தமிழக முதல்வரின் செயல்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன?

``தி.மு.க., ஒரு பலமான, மக்கள் செல்வாக்குள்ள கட்சி; மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான பிரதிநிதிகளைக் கொண்ட கட்சி, தி.மு.க.!

இலங்கையில் கொடூரமான முறையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியைத் தந்து தி.மு.க.வால் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரமுடியும். இந்த நேரத்திலும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விமர்சனம் செய்திருக்கிறார், கலைஞர். இந்த விமர்சனத்தை மனசாட்சியுள்ள தி.மு.க.வினர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவு வீட்டில் அமர்ந்து கொண்டு அங்கிருப்பவர்கள் மீது விமர்சனம் செய்வது முறையற்றது என்பதை எல்லா மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

சிங்கள அரசின் வேண்டுகோளை நம்பி வெள்ளைக் கொடியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்த ஈழ மக்களை வயதானவர்கள், இளைஞர்கள், யுவதிகள், குழந்தைகள் எனத் தனித்தனியாகப் பிரித்து, முகாம்களில் அடைக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் தமிழர்கள் தினம்தினம் சாகிறார்கள். ஹிட்லரின் நாஜி கான்சென்ட்ரேஷன் முகாமை விட கொடுமையான முறையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்கும் போது முதல்வருக்குத் தெரிந்திருக்காதா என்ன?''

மத்திய அரசுதான் இலங்கைத் தமிழர்கள் மீதான போரை நடத்துகிறது என்பதுபோலல்லவா பேசுகிறீர்கள்?

``இலங்கைக்கு ராடார்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ராணுவப் பயிற்சிகள் கொடுத்து வருவது இந்திய மைய அரசுதான் என்று தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. இது காங்கிரஸ் மீதான கோபமாக மாறியிருக்கிறது. நிச்சயம் இது தேர்தலில் எதிரொலிக்கும். இன்றைக்கு இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள், தேர்தல் திருவிழா பணிக்குத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன. ஆனால் மாணவர்களும், இளைஞர்களும் காங்கிரஸுக்கு எதிரான இந்தப் பரப்புரையைத் தொடர்ந்து நடத்துவார்கள்.''

எதனடிப்படையில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்?

``அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறார். ஆனால், இலங்கையில் சார்க் மாநாடு நடந்தபோது சிங்கள எதிர்க்கட்சித் தலைவர்களான ரணில் விக்ரமசிங்கேவும், சந்திரிகாவும் இந்தியா வந்து பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் வசம் இரண்டரை லட்சம் தமிழர்கள் சிக்கியிருப்பதாக, சிங்கள அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இப்போது வெறும் 75,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக அதே அரசு அறிவிக்கிறது. அதே எண்ணிக்கையை சிங்கள எதிர்க்கட்சிகளான ரணிலும், சந்திரிகாவும் சொல்கிறார்கள். பிரணாப் முகர்ஜியும் 75,000 தமிழர்கள்தான் உயிருடன் இருக்கிறார்கள் என்கிறார். இரண்டரை லட்சம் தமிழர்களின் எண்ணிக்கை 75,000 ஆக மாறியது எப்படி? மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்?

இரண்டரை லட்சம் தமிழர்களை 75,000 ஆகக் குறைக்க சிங்கள அரசுடன் அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் சதித்திட்டம் தீட்டியிருக்கின்றன. அதையொட்டித்தான் முன்கூட்டியே தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகிறார்கள். இந்த சதித் திட்டத்தில் இந்திய அரசும் பங்கெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, ராடார்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ராணுவப் பயிற்சிகளைக் கொடுத்தது போதாது என்று, இந்தப் பாவத்தையும் இந்திய அரசு செய்யப்போகிறது என்றே நான் கருதுகிறேன்.''

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியிருக்கக் கூடாது என்கிற தொனியில் நீங்கள் பேசியிருக்கிறீர்களே?

``ரஹ்மான் இசை மேதை. அவரை விமர்சனம் செய்யும் தகுதி எனக்கு வந்துவிட்டதாகக் கருதவில்லை. தமிழனாக அவர் ஆஸ்கர் விருது வாங்கியதை பெருமையாகவே கருதுகிறேன். உலகமே உற்று நோக்கியிருந்த அந்த ஆஸ்கர் அரங்கில், `எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் தமிழை உச்சரித்தது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அத்துடன், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் வேளையில், இந்த விருதை கனத்த இதயத்துடன் வாங்கிக் கொள்கிறேன் என்கிற ரீதியில் அவர் பேசியிருந்தால், தமிழின அழிப்பு விவகாரம், சர்வதேச அளவில் இன்னும் அதிகமாகக் கவனிக்கப்-பட்டிருக்கும் என்பதைத்தான் நான் பதிவு செய்தேன்.''

சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்குத்தான் மக்கள் வாக்களிப்பது?

``தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து, தமிழ்த் தேசியம் மற்றும் ஈழ மக்கள் வாழ்வுரிமை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளுக்கே ஆதரவு என்கிற கோரிக்கையை ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்கள் முன்வைக்கலாம். தேர்தல் திருவிழாவில் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆயினும் என்னைப் போன்ற அரசியல் சார்பற்ற போராளிகள், அந்த வெற்றிடத்தை நிரப்புவோம். இந்தப் போராட்டத்தினால் ஏற்படும் சொந்த பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல் தமிழர்களுக்கு ஆதரவான எங்கள் நிலைப்பாடு தொடரும்'' என்று குமுறலோடும், வேதனையோடும் பேட்டியை முடித்தார் இயக்குநர் மணிவண்ணன்.

படம்: ஞானமணி

Comments