கருணாநிதி - அடக்குமுறையின் ஆகக் கூடிய வடிவம்

நான் படித்த எங்கள் கிராமத்துப் பள்ளியைச் சுற்றிலும் ஏராளமான மாமரங்கள் இருக்கும். விதவிதமான வகைகளாக புளிப்பு, இனிப்பு என மா மரங்களைக் கொண்ட செழிப்பான பகுதி அது. தினந்தோறும் மாங்காய்களைத் திருடி அதில் உப்பைச் சேர்த்து தின்பதுதான் எங்கள் வேலை. பள்ளிக்கூட மரங்கள் எல்லாம் மாணவர்களுக்கே என்பதுதான் எங்கள் நினைப்பு. ஆமாம் அவைகளோடுதான் எங்கள் பள்ளிக்கூட பொழுதுகள் கழிந்தது. ஒரு நாள் “இனிமேல் மாங்காய் பறித்தால் ஐம்பது ரூபாய் பைன்” என்று அசெம்பிளியில் அறிவித்தார் தலைமை ஆசிரியர். எங்கள் வகுப்பில் உள்ள பலரும் சேர்ந்து ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு ஐம்பது ரூபாய் சேர்த்தோம். ஒரு கோணிப்பையை வாங்கிக் கொண்டோம். கோணி நிறைய மாங்காய்களை வேட்டையாடிச் சேர்த்தோம். ஐம்பது ரூபாயைக் கொண்டு போய் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தோம். “அய்யா எங்களுக்குத் தேவையான மாங்காய்களை பறித்துக் கொண்டோம். இதோ உங்களுக்கான ஐம்பது ரூபாய்” என பணத்தை நீட்டிய பதினைந்து பேரும் சஸ்பெண்ட் ஆனோம்.

Chennai High court உயர் நீதீமன்றத்திற்குள் போலீசை அனுப்பி காட்டுமிராண்டித்தனமாக வழக்கறிஞர்களைத் தாக்கி விட்டு, நீண்ட தாமதத்திற்குப் பிறகு இப்போது இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மாங்காய் திருடியதும் சஸ்பெண்ட் ஆனதும் நினைவுக்கு வந்தது. நாளை தேவைப்பட்டால் சஸ்பெண்ட் ஆக இரண்டு போலீஸ்காரர்களை தயாரித்து வைத்துக் கொண்டு நீதிமன்றத்துக்குள் போய் வக்கீல்களைத் தாக்கலாம். ஒரு வேளை வக்கீல்களைக் கொன்றிருந்தால் நிரந்தரமான சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்திருப்பார்களோ என்னவோ? ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகச் சொன்ன கருணாநிதி, இன்னும் அந்த அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்யாததோடு அவரே அறிக்கை மூலம் அவர்களைத் தூண்டி விட்டு உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு அனுப்பி வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கடந்த ஒருமாதகாலமாக நடந்த வழக்கறிஞர்கள் போராட்டம் தேர்தல் நெருங்க நெருங்க தீவிரம் ஆகுமோ என்பதை உணர்ந்த அரசு, நீதி நிர்வாகம் அனைவரும் சேர்ந்து வழக்கறிஞர்களை சமாதானப்படுத்துவதற்காக இப்படி ஒரு ஏமாற்றுத் தீர்ப்பை வழங்கியிருப்பார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் நம்முள் பலவிதமான கேள்விகளை உசுப்பி விட்டிருக்கிறது. ஈழம், சமூகப் போராட்டங்கள் இதிலெல்லாம் பத்திரிகையாளர்கள் என்ன பாத்திரம் வகிக்கிறார்கள் என்கிற கேள்வியை இன்று நாம் வழக்கறிஞர்களை முன் வைத்தே கேட்க வேண்டியுள்ளது.

ஆனால் போராட்டம் என்பது என்ன? மனித குலம் தான் கடந்து வந்த பாதை நெடுகிலும் போராடிப் பெற்ற உரிமைகளுடனேயே சிவில் சமூகமாக வளர்ந்திருக்கிறது. ஆனால் நம்மை பாதுகாப்பதற்கு என ஏற்படுத்தப்பட்ட அரசு இயந்திரத்தின் அங்கங்களான நீதிமன்றம், போலீஸ் ஆகிய துறைகள் பல நேரங்களில் நமது சிவில் உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கின்றன. போராடுவது எவ்வகையான உரிமை என்பதை துல்லியமாக என்னால் கூற இயலாவிட்டாலும், உணவுக்கான போராட்டமே மனிதனின் முதலும் முடிவுமான போராட்டமாக நான் பார்க்கிறேன். மொழி, இனஒதுக்கல், பாரபட்சமான நீதி என தேசிய இன உரிமைகள் ரீதியான போராட்டங்கள் கூட சுதந்திரத்திற்கானவைதான். அந்த வகையில் ஈழத்தில் கடந்த முப்பதாண்டுகளில் பரிணாம வளச்சி பெற்ற அந்த போராட்டம் இன்று மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறது. ஈழம் என்கிற தமிழ் மக்களின் கனவுக்கு விடை கொடுப்பது இல்லை என்றால் நீண்ட கால மக்கள் போராட்டத்தை கட்டுவதன் மூலம் போராட்டத்தை வளர்த்தெடுப்பது என நீண்டு செல்ல வேண்டும் என்பது நமது ஆசை. ஆனாலும் போராடினால்தானே வெற்றியும் தோல்வியும். தோற்றாலும் மாவீரர்கள் எப்போதும் மாவீரர்களே!

சமகாலத்தில் பாகிஸ்தானில் கிளர்ந்த மக்கள் போராட்டம், நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் தலைமையில் கிளர்ந்த மக்கள் போராட்டம் என்பதோடு ஒப்பிட முடியாவிட்டாலும், ஒன்று பட்ட வழக்கறிஞர்களின் தீவிர போராட்டம் என்பது நமது மனச்சாட்சியை உலுக்கி விட்டிருக்கிறது. அரசின் உடைப்பு வேலைகள், ரௌடிகளின் மிரட்டல்கள் என எதற்கும் பலியாகாமல் வழக்கறிஞர்கள் ஒன்று பட்டு நின்று போராடினார்கள். ஆனால் வழக்கறிஞர்கள் விஷயத்தில் கருணாநிதியும் தமிழக அரசும் எப்படி நடந்து கொண்டார்கள் எனப் பார்த்தால். கருணாநிதி எவ்வளவு மோசமான அரசியல் வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறார் என்பதையும், பாசிச ஜெயலலிதாவுக்கு சற்றும் குறைவில்லாதவர் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அரசு நிர்வாகம், ஆளும் திமுகவிற்கு ஆதரவான பெரும்பாலான ஊடகங்கள், பொதுப்புத்தி என அனைத்தையும் மீறிதான் வழக்கறிஞர்கள் போராட வேண்டியிருந்தது. காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது பொய் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

1. அவர்கள் உயர்நீதிமன்றத்திற்குள் கூடி நின்றார்கள் (ஏண்டா வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்துக்குள் கூடாமல் கமிஷனர் அலுவலகத்துக்குள்ளா கூட முடியும்?)

2. சமாதானம் பேசத்தான் உள்ளே போனோம். அவர்கள் கல்வீசித் தாக்கி கலவரம் உண்டாக்கி விட்டார்கள் (நூற்றுக்கணக்கான அதிரடிப்படை குண்டர்களோடுதான் நீங்களெல்லாம் சமாதானம் பேசப் போவீர்களா?)

3. வழக்கறிஞர்கள் தாக்குதலில் போலீஸ் படுகாயம். (படுகாயப்பட்ட போலீஸ்காரர்கள் சுண்டு விரலில் துணி சுற்றியிருந்தார்கள்)

இப்படி பலவகையான குற்றச்சாட்டுகளை ஊடகங்களின் துணையோடு தொடர்ந்து கக்கிக் கொண்டிருந்தார்கள் போலீசும், அரசும். இதற்கெல்லாம் உச்சமாக, பெண் போலீஸார் நீதிமன்றத்துக்குள் பாலியல் தொல்லைக்குள்ளாவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. உயர் போலீஸ் அதிகாரிகளால் சாதாரண கூலிகளைப் போல நடத்தப்படும் கடைநிலை போலீஸ்காரர்களின் மனைவிகளை வெள்ளைக் கொடியோடு வழக்கறிஞர்களிடம் சமாதானம் என்ற போர்வையில் கேனத்தனமாக அனுப்பி வைத்தது. அடுத்து உண்ணாவிரத நாடகம். உண்ணாவிரதம் இருப்பது போல் திரட்டி பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி போட்டோவும் பேட்டியும் கொடுத்து முடித்ததும் உண்ணாவிரதத்திற்கு அனுமதியில்லை என்று அனுப்பி வைத்தது என இத்தனை நாடகங்களையும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடத்தியபோதும், வழக்கறிஞர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை நசுக்க முடியவில்லை. உண்மையில் போலீஸ்காரர்கள் போராட வேண்டும் என்றால் முதலில் தங்களை ஒரு அடிமைகளைப் போல நடத்தும் உயரதிகாரிகளுக்கு எதிராகத்தான் முதலில் போராட வேண்டும். போலீஸ் வேலையில் சுயமரியாதைக்காகவும், முறைப்படுத்தப்பட்ட வேலை நேரத்திற்காகவும், போதுமான ஊதியத்திற்காகவும்தான் போலீஸ்காரர்கள் போராட வேண்டும். ஆனால் இந்த காவலர்களையும் அவர்களது குடும்பங்களையும் உயரதிகாரிகள் எப்படி அடியாட்களாக மாற்றுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவங்கள்தான் ஒரு எடுத்துக்காட்டு.

பாலியல் சமத்துவத்தோடு ஒரு பெண் போலீஸ் தமிழக காவல்துறையில் செயல்பட முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பாலியல் சமத்துவம் அல்ல, பாலியல் பாதுகாப்பே கிடையாது. பழங்குடிப் பெண்களிடம், தலித் பெண்களிடம், ஆதிவாசிப் பெண்களிடம், தேடுதல் வேட்டையின் போது போலீசார் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியேதான் பெண் காவலர்களிடமும் நடந்து கொள்கிறார்கள். ஆண்களை அண்டி அவர்களைச் சார்ந்து மட்டுமே இங்கே பெண் போலீஸ் செயல்பட முடியும் என்பதுதான் ஆணாதிக்கத்தால் வகுக்கப்பட்ட விதி. இதற்கு போலீஸ் துறை ஒன்றும் விதிவிலக்கல்ல. அதனால்தான் பாலியல் துன்புறுத்தல் என்கிற ஒரு அஸ்திரத்தை பெண் போலீசை வைத்து வீசச் செய்கிறார்கள். பல இடங்களில் போலீஸ் துறையில் ஆண் அதிகாரிகள் பெண் காலவலர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு எவ்வளவோ சான்றுகள் இருக்கின்றன.

காதல் என்பது மனித குலத்தின் பொதுவான விதியாக இருந்த போதும் முதலாளித்துவ ஒழுக்கத்தில் உழைக்கும் மக்களின் காதலையும் பணக்கார சமூகங்களின் காதல் ஒழுக்கத்தையும் இன்றைய மறு காலனியாதிக்கச் சூழலில் வேறுபடுத்திப் பார்க்கமுடியும். ஆனால் ஆண் என்ற திமிரும் போலீஸ் உயரதிகாரி என்கிற திமிரும் பல பெண் போலீசாரை இன்று வரை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கி வருகிறது. வெறும் காக்கிச் சீருடை அணிந்த காட்சிப் பொம்மைகளைப் போல அவர்களை உயரதிகாரிகளும் ஆண் மனோபாவமும் நடத்தியதன் விளைவு. பல மகளிர் காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து மையங்களாக மாறி கிடைத்த வரை கறந்து விட்டு தாலி செண்டிமெண்டுக்குள்ளேயே குடும்ப பிரச்சனைகளை தீர்க்க முனைகிறது. பெண்களை சமையல்காரிகளாக மட்டுமே வைத்திருந்து, ஆனால் காக்கிச் சீருடை மட்டும் அணிவித்து அவர்களை பெண் என்று நிலையிலேயே நிறுத்தி வைப்பதால்தான் பாலியல் உணர்வில் அவர்களால் சுதந்திரத்தைப் பேண முடியவில்லை. அதனால்தான் போலீஸ் குடியிருப்பில் மேலதிக காதல் தகராறுகள்.

சமீபத்தில் சிவகங்கையில் வேல்விழி என்ற பெண் காவலர் தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக வீசப்பட்டிருந்தார். காதல் தகராறினால் நேர்ந்த அந்தக் கொலையிலிருந்து தெரிவதென்ன? கொலை எதற்காக நடந்திருக்க வேண்டும்? ஒன்று பணக்கார வீட்டுப் பையனை அந்த வேல்விழி காதலித்திருக்க வேண்டும். அல்லது தன்னை விட உயர்ந்த சாதியிலோ தாழ்ந்த சாதியிலோ காதலித்திருக்க வேண்டும். இந்த இரண்டில் வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. ஆக வேல்விழி போலீஸ் பெண்மணி அதுவும் தலைமை ஏட்டு என்பதால் அவரால் கொலையிலிருந்து தப்ப முடியவில்லை. பணக்கார நாயின் முன்னாலும், சாதி ஆண்டைகளின் முன்னாலும் வேல்விழியின் காதல்கள் வெட்டி வீசப்படுகிறது என்றால், காக்கிச் சட்டை இந்த இரண்டிற்கும் முன்னால் மண்டியிட்டுக் கிடக்கிறது என்று பொருள். அதை அறியாத அப்பாவிப் பெண் வேல்விழி தலை வெட்டி வீசப்படுகிறார். இது ஒரு எடுத்துக்காட்டுதான். தமிழகம் முழுக்க பெண் போலீஸ் மற்றும் காவல்துறை கடை நிலை கான்ஸ்டபிளுக்கு உயரதிகாரிகளால் நேருகிற அவமானங்களுக்காக சங்கம் சேர்ந்து ஊர்வலம் போகாத இந்த அப்பாவி போலீஸ்காரர்கள்தான் இன்று சஸ்பெண்ட் செய்யப்படாத தங்களின் உயரதிகாரிகளுக்காக வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

‘கரும்புக்கு அதிக விலை கேட்டால் அடி. நெல்லுக்கு விலை கேட்டால் அடி. குடிநீர் கேட்டால் அடி. நிவாரணம் கேட்டால் அடி. அடி வாங்கினவனெல்லாம் ஒடி விடுகிறான். ஆனால் வழக்கறிஞன் மட்டும் ஓட மறுக்கிறானே! என்ன செய்கிறேன் பார்’ என்றுதான் அன்று உயர்நீதிமன்றத்துக்குள் நுழைந்து தாக்கினார்கள். அதனையடுத்து அரசுக்கு எதிரான போராட்டம் வலுக்க, போராட்டத்தை நசுக்க குண்டர்களை அனுப்பியதும், திமுக வழக்கறிஞர்களை போராடுகிற வழக்கறிஞர்களுக்கு எதிராக தூண்டி விட்டதும் அதுவும் இந்த எழுச்சிக்கு முன்னால் எடுபடாமல் போனபோது, கடைசியில் எனக்கு முதுகு வலி என கெஞ்சியதும் என எவ்வளவோ சொல்லலாம். ஆனால் முதல்வருக்கு என்னவிதமான மரியாதை இங்கே கிடைக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு போதும், “நடந்து விட்ட அசம்பாவிதத்தை களைய நீங்கள் அனுமதித்தால் ஆம்புலன்சிலேயே வந்து உங்களைச் சந்திக்கிறேன்” என்று தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்தியாயவுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். ஒரு மாநில முதல்வர் எழுதிய கடிதத்திற்கு தற்காலிக தலைமை நீதிபதி பதில் கூட அனுப்பியதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் மூத்த தலைவருக்கு இவ்வளவுதான் மரியாதை. சரி ஏடாகூடமாக அவமானப்படுத்தாமல் பதிலாவது அனுப்பாமல் விட்டாரே என்று மௌனமாக இருந்தாரா கருணாநிதி ? கடைசியில், ‘பிரச்சனை நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்குமிடையிலான பிரச்சனையாக மாறிவிட்டது” என்று நக்கலாகச் சொன்னார்.

சொல்லிய வார்த்தைகள் காற்றில் கரைந்து அடுத்த அறிக்கை வருவதற்குள் தீர்ப்பு வந்து விட்டது. தீர்ப்பு சரியான தீர்ப்பாக இல்லாத போதும் நீதிபதிகள் மறைமுகமாக கருணாநிதிக்கு ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள். அது, பிரச்சனை நீதிமன்றத்திற்கும் வழக்கறிஞர்களுக்குமானது அல்ல. அரசிற்கும் வழக்கறிஞர்களுக்குமிடையிலானது.

ஆனால் இன்றைக்கு வரை ஒரு கேள்விக்கு மட்டும் தமிழக போலீசிடமோ கருணாநிதியிடமோ பதில் இல்லை. உயர்நீதிமன்றத்திற்குள் யார் அனுமதியோடு போலீசார் நுழைந்தார்கள், தாக்கினார்கள்?

தலைமை நீதிபதியின் அனுமதியைக் கோராமல் உள்ளே நுழைந்த காவல்துறை அதிகாரிகளை சம்பவம் நடந்த அன்றே சஸ்பெண்ட் செய்திருந்தால். இந்தப் பிரச்சனை இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசார் என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வழக்கறிஞர் சமூகத்தையே பகைத்துக் கொண்டார்.

ஈழத்தமிழர் விவகாரத்தில் செய்த துரோகம்

காங்கிரசிற்கு எதிராகப் பேசியவர்கள் மீது அடக்குமுறை கைதுகள், சட்டக் கல்லூரியை இழுத்து மூடி ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வியை நாசமாக்கியது என இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னாலும் இருப்பது ஈழத் தமிழர் பிரச்சனை. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருணாநிதியும் திமுக அரசும் இருக்கிறது என்பதால் இங்கே சுமூகச் சூழல் கெடுகிறது. இது அனைவருக்குமே தெரியும். இன்று தமிழக அரசிற்கு எதிரான, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வலைகள் தமிழகம் முழுக்க கொழுந்து விட்டெரிகிறது. அது கருணாநிக்கும் தெரியும் அதனால்தான் மன்மோகன் போர் நிறுத்தம் வலியுறுத்துவதாக தனக்கு கடிதம் எழுதியதாகச் சொல்கிறார். ஆனால் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் சிறிபால டி சில்வா, “இந்தியாவின் உதவியில்லாமல் இந்தப் போரில் நாங்கள் வெற்றியடைந்திருக்க முடியாது என்றும். 13-வது சட்டத்திருத்தமும் அதை ஒட்டிய தீர்வுகள் குறித்தும் முன்னர் இந்தியா பேசியது. இப்போது தீர்வுத்திட்டங்கள் எதையும் முன் வைக்குமாறு எங்களை இந்தியா நிர்பந்திக்கவில்லை” என்று வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார் என்றால் மன்மோகனும் கருணாநிதியும் சேர்ந்து யாரை ஏமாற்ற இந்த நாடகங்களை கடந்த பல மாதங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

உயர்நீதிமனறத் தீர்ப்பின் மூலம் ஒன்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. பணக்காரன், அரசதிகார வர்க்கம், நீதித்துறைக்கு உள்ள நெருங்கிய நட்பும் நலம் பேணலும் இந்தத் தீர்ப்பின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அதனால்தான் வெளிப்படையாக நீதிமன்றம் சில கேள்விகளைக் கேட்கத் தயங்குகிறது. சுப்ரமணியன் ஸ்வாமி மீது முட்டை வீசிய போது நீதிபதிகளுக்கு வந்த கொதிப்பு கூட தங்களின் வழக்கறிஞர்களைத் தாக்கியபோது வரவில்லை. எப்படி சாதாரண கான்ஸ்டபிளுக்கு ஒரு பிரச்சனை என்றால் உயரதிகாரி வரமாட்டாரோ அது போல வழக்கறிஞர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நீதிபதியும் வரமாட்டார். ஆனால் உயரதிகாரியின் பிரச்சனைக்காக இன்று சாதாரண கான்ஸ்டபிள்கள் எப்படி வீதிக்கு வந்து போராடத் தூண்டப்படுகிறார்களோ, அது போல அல்ல, நீதிபதிகளை போலீஸ் தாக்கியபோது தங்களின் எஜமானர்கள் தாக்கப்படுகிறார்களே என்று போய் தடுத்த வழக்கறிஞர்கள்தான் ரத்தம் சொட்டச் சொட்ட காயப்படுத்தப்பட்டார்கள். ஆனால் நீதிபதிகளின் மௌனம் போலீஸைப் பாதுகாக்கிறது. அரசின் அராஜகத்தை மறைமுகமாக அங்கீகரிக்கிறது. சு.சாமி மீது விழுந்த முட்டைக்காக இவர்களை வருத்தம் கொள்ளச் செய்கிறது. பார்ப்பனக் கூட்டத்தில் அல்லக்கைகளாக போலீசும் அரசதிகாரமும் மாற்றப்பட்டிருப்பதும். பார்ப்பனீயத்தை மீறி இங்கே ஒன்றும் புடுங்கி விட முடியாது என்பதையும் தான் இந்த மோதல்கள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் இந்த போராட்டம்தான் பார்ப்பனீயத்திற்கும், அடக்குமுறை அரசதிகாரத்திற்கும் எதிராகவும் கூர்முனையாக இருந்தது.

கடைசியாக,

வழக்கறிஞர்களே! போரட்ட ஒருங்கிணைப்புக் குழு போராட்டத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அதே வேளையில், நீதிமன்றம் தொடர்பாக மக்களின் பாதிப்பை மனதில் கொண்டு பணிக்குத் திரும்பும் அதே வேளையில், போலீஸ் அராஜகத்திற்கெதிரான போராட்டம் தொடர ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டக் குழுவை உருவாக்கி அந்தக் குழு, ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலோடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது என் கருத்து. அதே நேரம் என்ன காரணத்திற்காக வழக்கறிஞர்களை தாக்கினார்களோ அந்தப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதுதான் இவர்களை வீழ்த்த ஒரே வழி. ஏனென்றால் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்னிலும் பார்க்க பல நூறு பெண்களும் குழந்தைகளும் கொடூரமான இனவெறிப் போருக்கு பலியாகிறார்கள். இந்தியா இன்னும் அந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆக எங்கிருந்து தொடங்கினோமோ அங்கிருந்தே மீண்டும் இதைத் தொடங்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்திற்கான உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க மிகப்பெரும் சக்திகளான வழக்கறிஞர்கள் முன்வரவேண்டும்.

- பொன்னிலா (judyponnila@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

Comments