சிறிலங்கா படையினரின் பாதுகாப்பு வலயம் என்ற அந்த கொலைக்களத்திற்கு மக்கள் செல்ல மறுக்கின்றனர், அச்சமடைகின்றனர் எனவும் அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மக்கள் எதிர்கொள்கின்ற மனிதப் பேரவலம் தொடர்பாக அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் வன்னியில் இருந்து வெளியிட்ட அறிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.
வன்னியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா படையினரின் எறிகணை, பீரங்கி தாக்குதல்களில் நாள்தோறும் படுகொலைகளை செய்யப்படுவது சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட படுகொலை என்று கண்டனம் தெரிவித்த அவர், அனைத்துலக சமூகம் இதனை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றது என்றும் கூறினார்.
உணவுகளையும் மருந்துப் பொருட்களையும் வன்னிக்கு அனுப்ப விடாது தடுத்து நிறுத்தி பட்டினி போட்டு மக்களை கொல்வதும் மகிந்த அரசாங்கத்தின் மற்றுமொரு உத்தி என்றும் எடுத்துக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம், அவ்வாறான இனப் படுகொலை உலகில் வேறு எங்கும் இடம்பெற்றதில்லை என்றும் தெரிவித்தார்.
காயமடையும் மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களில் ஒரு விழுக்காட்டைக்கூட அரசாங்கம் உரிய முறையில் அனுப்பவில்லை.
இந்நிலையில் மக்கள் பாதுகாப்பாக அடைக்கலம் புகுவதற்கு அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் செல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்து அவலப்பட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அப்படியே கொன்று குவிப்பதும் அங்கவீனமடைய செய்வதும்தான் மகிந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கம்.
இதனை அனைத்துலகம் பார்த்துக்கொண்டிருக்கப் போகின்றதா? அல்லது வெறுமனே கண்டன அறிக்கை வெளியிட்டு கவலை தெரிவிக்கப்போகின்றனரா? எனவும் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் ஆவேசமாக எடுத்துக் கூறியுள்ளார்.
Comments