இரகசியம் என்றோ ஒரு நாள் பரகசியம் ஆகும் என்று பேச்சு வழக்கில் கூறப்படுவது உண்டு.
இன்றைக்கு நீ இரகசியமாக வைத்திருக்க முயல்வது என்றோ ஒரு நாளைக்கு வெளியே தெரியவராமலா போகும் என்று விட யங்களை மூடிமறைக்க முயல்வோரைப் பார்த்து உண்மை அறிய விரும்புபவர்கள் நையாண்டியாகக் கேட்பதுமுண்டு.
இலங்கை விவகாரத்தில் இந்தியா வெளிப்படுத்த விரும்பாமல், மறைத்து வைத்திருந்த, இரகசியம் பேணிய விடயம், கொழும்பு நாடாளுமன்றத்தில் பரகசியப்படுத் தப்பட்டுவிட்டது.
சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை உண்மையைக் கட்டவிழ்த்துவிட்டார்.
இந்திய வைத்தியர்களின் வருகை குறித்து ஜே.வி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபத்துக்கும் கண்டனத்துக்கும் பதிலளிக்கப் போய் அமைச்சர் சிறிபால, பையிலிருந்த பூனையை வெளியே ஓட விட்டிருக்கிறார்.
ஆம். இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் பெரும் பென்னம்பெரிய ஒத்துழைப்பினாலேயே விடுதலைப் புலிகளை, அவர்களின் பயங்கரவாதத்தை இந்த அளவுக்கு ஒழித்துக் கட்ட முடிந்தது என்று அந்த நாட்டுக்கு நன்றிக் கடன் செலுத்தும் பாங்கில் புகழாரம் சு10ட்டினார் இலங்கையின் பொறுப்புவாய்ந்த மூத்த அமைச்சர்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு தொடர்ந்து வழங்கிவரும் உதவிகள் அளவிடமுடியாதவை என்றும் அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியிருக்கிறார்.
இலங்கை விவகாரத்தில், ஈழத் தமிழர்களின் பிரச்சினை யில், இந்திய மத்திய அரசு தமிழகத் தலைவர்களுடன் எப்படி ஒளித்துப்பிடித்து விளையாடியது; விளையாடி வருகிறது என்பதனை மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்துகின்றன சில்வாவின் புகழார விவரணங்கள்!
இவை நாடக அரங்கக் காட்சிகள் போன்று ஈழத் தமிழர்களின் மனக் கண்கள் முன் என்றும் நினைவுக்கு வந்து நிழலாடும் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.
ஈழத் தமிழர் விடயத்தில், அரசியல், இராணுவ சார்பான வற்றைத் தவிர்த்தாலும்கூட, வன்னியில் தமிழர்கள் செத்தொழிவதையும் அவர்களது ஏனைய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் களைவதில்கூட, இந்திய மத்திய அரசு அதனைத் தடுக்க மனமார்ந்து முயற்சிக்காமல் ஒளித்துப்பிடித்து விளையாடுவதை இந்தப் பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டி விட்டோம்.
வன்னியில் முல்லைத்தீவில் போரில் சிக்குண்ட மக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்தைப் போர் நிறுத்தம் செய்யுமாறு வெளி வெளியாக, உத்தியோகபூர்வமாக எழுத்தில் வற்புறுத்தாமல், செய்தியாளர்களிடம் கூறுவதும், மகாநாட்டில் பேசுவதுமாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி காலங் கடத்தி, தமிழகத்தில் எழுந்த ஈழத்தமிழர் ஆதரவையும் அதனால் அங்குள்ள அரசியல் தலைவர்கள் கொடுத்த அழுத்தங்களையும் கரைத்து விடுவதற்கு கைக்கொண்ட உபாயங்கள் எல்லாவற்றுக்கும் அத்திபாரமான காரணங்களின் மூலத்தை அமைச்சர் சிறிபால டி சில்வா (இலங்கை அரசாங்கம்) நெல்லிக்காய் மூடையைக் கட்டவிழ்த்து விட்டு “கையில் எடுத்துக்”" காட்டியிருக் கிறார்.
இன்னொரு புறமாக அடுத்த பக்கமாக நோக்கினால் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் வட இந்தியத் தலைவர்கள் காலில் போட்டு மிதித்துவிட்டனர்! மனிதாபிமான உதவி என்ற பெயரில் மருந்துப் பொருள்களையும், டாக்டர்களையும் அனுப்பினால் இந்தியாவின் பங்கு முடிந்தது என்று எண்ணுமளவுக்கே அதன் இரண்டாம் தரச் செயற்பாடுகள் அமைந்து வருகின்றன.
காந்தி, நேரு, இந்திரா போன்ற மாண்புமிகு அரசியல் தலைமைத்துவங்கள் போன்று, இப்போதும் சரி இனி எப்போதும் சரி வட இந்தியத் தலைமைத்துவங்களை எதிர்பார்க்க முடியாது என்பதும் கல்லில் எழுத்துப் போல் கருதப் படவேண்டிய காலமாகிவிட்டது.பயங்கரவாதத்தை ஒழிப்பதென்ற சித்தாந்தத்தில் செயற்பாட்டில் அரசுகள் என்ற வகையில் இலங்கையும் இந்தியாவும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் இந்தியாவின் பிரதான மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகள் போரினால் இலங்கையில் மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போது, மத்திய அரசு அதனை மனிதாபிமானக் கண்ணோடு பார்க்காமல் தனது அரசியல் மற்றும் செல்வாக்குச் செலுத்துதலை முதன்மைப்படுத்திச் செயற்படுகிறது என்று பல தரப்புகளும் ஊகித்தது உண்டு. அதனை இந்திய மத்திய அரசு மூடிமறைத்து தனது அரசி யல் மற்றும் ராஜதந்திர சாணக்கியத்தை செய்து முடித் திருக்கிறது!
இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ ஆயுத உதவிகளைச் செய்து வருவது ஏற்கனவே மெல்ல மெல்லக் கசிந்த விடயமே. ஆனால் மத்திய அரசு அது குறித்து வெளிக்காட்டாமல் தனது காரியங்களை ஆற்றி வந்தது. இலங்கைக்குக் கடன் உதவி வழங்குவதாக மட்டுமே புதுடில்லி அரசு கூறிவந்தது. ஆனால் அதற்கும் மேலாக நேரடியாக ஆயுத உதவி, மற்றும் பண உதவி செய் வது சில நாள்களுக்கு முன்னர் வெளிப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் தமக்கு எழுதிய கடிதத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு பண உதவி செய்வதாகவும் தெரிவித்திருந்தார் என்று வைகோ சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இந்த இலட்சணத்தில், இலங்கையில் அப்பாவித் தமிழ்மக்கள் போரில் மடிவதைத் தடுக்க தமிழகத் தலைவர்களின் செல்வாக்கு புதுடில்லியில் செல்லாது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது! அது இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டும் விட்டது.
உதயன்(ஆசிரியர் தலையங்கம்)
Comments