தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் அரசின் முயற்சி தோல்வி – வினோவின் மறுப்பறிக்கை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் தீவிர முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டிருந்த போதிலும், அந்த முயற்சி படுதோல்வி கண்டிருப்பதால் சிறீலங்கா அரசு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வந்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தனித்தனியாகச் சந்தித்துள்ள பசில் ராஜபக்ச அவர்களை அரசுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் ஊடகங்கள் வாயிலாக அரசு பரப்புரை மேற்கொண்டிருந்தது.

வினோ நோகராதலிங்கம் வவுனியாவிலுள்ள வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமைப் பார்வையிட அனுமதி வழங்கியிருந்த அரசு, அது பற்றிய நிழற்படங்களை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு ஊடாக பரப்புரையும் மேற்கொண்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்த வினோ நோகராதலிங்கம், அந்த மக்களை அரசு மிகவும் சிறப்பாகப் பராமரிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருப்பதாக சிறீலங்கா அரசு பரப்புரை மேற்கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சிறீலங்கா அரசுடன் இணைய இருப்பதாகவும் அரசினால் திட்டமிடப்பட்டு பரப்புரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதனை மறுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வினோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள்:

கடந்த வியாழக்கிழமை என்னால் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைக்குப் பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

சில ஊடகங்களும் இணையத் தளங்களும் எனது உரைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதுடன் எனது உரையை திரிபுபடுத்தியும் எனதும், த.தே. கூட்டமைப்பினதும் அரசியல் உறுதிப்பாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்கின்றேன்.

எனது உரையில் சொல்லப்படாத முரணான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதுடன் நான் அரசுடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் எழுதியிருந்தன.

மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் இவற்றைக் கண்டிப்பதோடு, இதில் எந்த வித உண்மையும் இல்லை என்பதையும் உறுதியாக நிராகரிக்கின்றேன்.

எனது மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் தமிழ் தேசியத்தை கட்டிக் காப்பதற்குமான உறுதியான நிலைப்பாட்டிலிருந்தும் திசை மாறிச் செல்லாமல் உணர்வு பூர்வமான எனது செயற்பாடுகள் தொடரும், அன்றும் சரி இன்றும் சரி என்றுமே த.தே. கூட்டமைப்பினதும், ரெலோ இயக்கத்தினதும் உறுதியான அரசியல் நிலைப்பாட்டையே பின்பற்றுபவன்.

எமது மக்களின் இன்றைய நெருக்கடியான காலத்தில் வரலாற்றுத் துரோகம் ஒன்றினை செய்வதற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் துணை போகமாட்டேன். இதில் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் எனது திடமான கொள்கையில் கடுகளவேனும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.எனக்கெதிரான பொய்யான பரப்புரைகளை நிராகரிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் இன உரிமைக்காக போராடவும் மனம் தளராது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பாடுபடுவேன்.

(கையொப்பம்) எஸ்.வினோநோகராதலிங்கம்

Comments