அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன?

பழைய வரலாறுகளை நினைவூட்டிப் பார்க்கிறது. "வணங்கா மண்' இக் கப்பல் பயணத்தின் முக்கியத்துவம் என்ன? சிங்கள இராணுவ முற்றுகைக்கு உள்ளான வன்னி மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க சர்வதேசம் பின்னடிக்கும் இவ்வேளையில், "வணங்கா மண்' எனப் பெயரிடப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இக்கப்பல், உருவாக்கப் போகும் தாக்கங்கள் எத்தகையது என விரிவாகப் பார்ப்போம்.

பிரான்சில் வசித்த, யூதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு "இடப்பெயர்வு 1947' (Exodus 1947) என்கிற கப்பல், 1947 ஆம் ஆண்டு யூலை 11ம் திகதி செற்றி (Sete) துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. "எஸ் எஸ் பிரசிடன்ட் வோர்பீல்ட்' (SS President Warkield) என்ற நீராவிக் கப்பலிற்கு, "" இடம்பெயர்வு 1947'' என்று பெயரிடப்பட்டு 4500 யூத அகதிகள் அதில் ஏற்றப்பட்டனர். அக்கப்பலில் கட்டப்பட்டிருந்த பதாகையில் "ஹகனா கப்பல் இடப்பெயர்வு 1947' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

"ஹகனா' ( Haganah) என்றால் "பாதுகாப்பு' என்று யூதரின் கீப்று (Hebrew) மொழியில் பொருள்படும். அக்கால கட்டத்தில் இயங்கிய " ஹகனா' என்கிற துணை இராணுவ அமைப்பானது, பின்னாளில் இஸ்ரேலிய இராணுவக் கட்டமைப்பின் மையச் சக்தியாக மாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை கிட்லரின் இனப்படுகொலைகளிலிருந்து தப்பிய யூத மக்கள், அமெரிக்கப் பிரஜைகள் சிலரின் ஆதரவுடன், பல கப்பல்களில் பாலஸ்தீனத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இக்கப்பல்களை பாலஸ்தீனத்தினை அண்மித்த சர்வதேசக் கடற்பரப்பில் இடைமறித்த பிரித்தானியக் கடற்படையினர், யூதமக்களை ஏற்றி வந்த அக் கடற்கலங்களை திருப்பி அனுப்ப முயற்சித்தார்கள். அதன் மீது தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன.

அன்றைய பாலஸ்தீன நிலம், பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததையும் கவனிக்க வேண்டும். இந்த "இடப்பெயர்வு 1947' கப்பல் மீது, பிரித்தானியா தாக்குதல்களைத் தொடுத்ததால். சர்வதேச அளவில் இச் சம்பவம் பெரும் கவனயீர்ப்பினை ஏற்படுத்தி, பாலஸ்தீனத்தை பிளவுபடுத்தும் தீர்மானமொன்றை ஐ.நா. சபையில் உருவாக்க வழிவகுத்தது. அதாவது "இடப்பெயர்வு 1947' என்கிற கப்பல் பயணம், ஒரு புதிய தேசத்தின் பிரசவிப்பிற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று கூறலாம். ஆகவே தாயகம் நோக்கிய "வணங்கா மண்' பயணிப்பில், சர்வதேசம் மறந்த, எம்மக்களிற்கான உடனடித்தேவைகளை பூர்த்திசெய்யும் உணவு, மருந்துப்பொருட்களை ஏற்றிச் செல்லப்படும் அதேவேளை, பன்னாட்டுச் சதிவலைகளை கிழித்தெறியும் உத்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

யூதர்களின் "தாயகம்' நோக்கிய இடப்பெயர்வுப் பயணமும், புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின், வணங்கா வன்னி மண் நோக்கிய ஆதரவுப்பயணமும், வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டு நின்றாலும், சர்வதேச விழிப்புணர்வு என்கிற பொதுநிலையில் இவை பொருந்தி நிற்பதைக் காணலாம்.

1934 ஆம் ஆண்டிலிருந்தே யூதமக்களின், பாலஸ்தீனத்தை நோக்கிய கப்பல் பயண இடப்பெயர்வு முன்னெடுக்கப்பட்டதைக் காணலாம். முதலில் வேலோஸ் (Velos), யூனியன் (Union) பெயர்கொண்ட கப்பல்களில், சட்டபூர்வமற்ற யூதக் குடியேற்றவாசிகளின் இடப்பெயர்வு ஆரம்பமானதோடு, இந்தப் பயணங்களில் பலர் கொல்லப்பட்டனர்.

ஆனாலும் பயண முயற்சிகள் இடைநிறுத்தப்படவில்லை. 3000 யூதர்களை ஏற்றிச்சென்ற "சல்வடோர்' (Salvador) என்ற கப்பல், 1940 ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதியன்று புயலில் சிக்குண்டு அழிந்தது. அதேவேளை பசுபிக் (Pacific), மைலோஸ் (Milos), அட்லாண்டிக் (Atlantic) என்கிற கப்பல்கள் நவம்பர் 1940 அன்று கைபா (Haifa) வைச் சென்றடைந்தன. அக்கப்பலில் இருந்தோர் "பற்றியா' (Patria) என்ற பிரித்தானிய கப்பலிற்கு மாற்றப்பட்டு, மொறிசியசை நோக்கி திருப்பி அனுப்பும் வேளையில், இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த "ஹகனா' இயக்கத்தினர், இக்கப்பலில் குண்டொன்றை வெடிக்க வைத்ததில், 250 பேர் இறந்தனர்.

1947 ஏப்ரலில், 2641 யூத அகதிகளை ஏற்றிக்கொண்டு, பிரான்சிலிருந்து பயணித்த "தியடோர் ஹேர்ஸ்' (Theodore Herzl) என்ற கப்பல், பிரித்தானியாவினால் வழிமறிக்கப்பட்டு, சைப்பிரசை நோக்கி திருப்பி விடப்பட்டது. எத்தகைய இடர்வரினும், யூத இடப்பெயர்வு முயற்சிகள் முடங்கவில்லை. இறுதியில் அம்மக்களின் இடைவிடாத போராட்டமும், தொடர்கப்பல் பயணங்களும் ஐ.நா.சபையை அசைத்து, தமது நாட்டிற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது.

இஸ்ரேலின் உருவாக்கம் குறித்து, பல முரண்நிலை விவாதங்கள் சரித்திரபூர்வமான ஆதாரச் சிக்கல்கள் இன்னமும் தொடர்ந்தாலும். இவ்வரலாற்றுப் பதிவிலிருந்து பெறப்படவேண்டிய போராட்டக் குணாம்சத்தை உள்வாங்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உண்டு.

ஆனாலும் பாலஸ்தீனத்தை நோக்கி யூத இடப்பெயர்வு காலத்தில், நாசி ஹிட்லரைப் போற்றிய அரபுத் தலைவர்களும் இருந்தார்கள். தற்போது, இந்திய உதவியைப் போற்றும் நிமால் சிறிபால சில்வாவின் இந்த வாரக் கூற்றினை அரபுத்தலைவர்களின் அந்த நாளைய ஆதங்கத்தோடு ஒப்பிடலாம்.

ஆகவே ஆழமான அரசியல், மற்றும் மனிதாபிமானப் பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கும் இந்த "வணங்கா மண்' பயணத்தை வெற்றி பெறக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்லும்பணி புலம்பெயர்ந்த தமிழீழ மக்களைச் சார்ந்தது.

அடங்கா வன்னிமண், சிங்களத்திற்கெதிரான தனது உக்கிரச் சமரினை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வணங்கா மண்ணின் தாயகப் பயணம், அவிழாத முடிச்சுக்களையும் நேராக்கும். வைத்தியர்களோடு, குறிப்பாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களையும் இப்பயணம் முழுமையாக உள்ளடக்கினால், பயணிப்பின் இருவகை நோக்கங்களும் பூரணப்படுத்தப்படும்.

அது சென்றடையும் மையத்தின் உட்கருத்தும் அதுவாகவே இருக்கும். இப்பயணத்தை, அதன் ஆரம்ப புள்ளியிலேயே தடுத்து நிறுத்த, சிங்களமும் இந்தியாவும் கூட்டுச்சேர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளலாம். பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் வணங்கா மண்ணின் பயணம், ஐ.நா. சபை மீதும் பாரிய அழுத்தங்களை உருவாக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும், நிகழ்வுகளை உருவாக்கும். தற்போது, ஐ.நா மனித உரிமை ஆணையகமும், யுனிசெப்பும் விடுக்கும் காட்டமான அறிக்கைகள், அவ்வமைப்புகளையே, மிக மோசமாக விமர்சிக்கும் நிலைக்கு சிங்களத்தை இட்டுச் சென்றுள்ளது.

விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவர் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக்கொண்டு, சிறீலங்காவிற்கு எதிராக போர்க்குற்ற வழக்கை ஐ.நா. தாக்கல் செய்யுமாயின், அதன் சிறீலங்கா அலுவலகம், மக்களால் முற்றுகையிடப்படுமென அரச சார்பு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. சிங்களத்தின் சீற்றம் சகல திசைகளிலும் சீறிப் பாய்கிறது. நோர்வே கொடியயரித்த ஜே.வி.பி, இனி ஐ.நா. சபைகொடியையும் எரிக்கும்.

"சுடரொளி' ஆசிரியர் வித்தியாதரனிற்காகப் பேசுபவர்களின் கரங்களில் இரத்தக் கறைபடிந்திருப்பதாக கொக்கரிக்கிறான், தமிழினப்படுகொலையை முன்னின்று நடாத்தும் கோத்தபாய இராஜபக்ச. சிங்களத்தின் எறிகணை வீச்சால் உடல் சிதறிய கர்ப்பிணித்தாயின் பிளந்த வயிற்றிலிருந்து, கருவறைச் சிசுவின் கால்கள் தெரிகின்றன. இக்கொடூர நிகழ்வின் பிதாமகன் கோத்தபாய, எழுத்துச் சமராடி வித்தியாதரனை பயங்கரவாதி என்கிறான். மனிதக் கேடய விவகாரத்தை தமது அறிக்கைகளில் மறக்காமல் இணைத்துக்கொள்ளும் சர்வதேச ஜனநாயகக் காவலர்கள், ஊடகவியலாளர்களையும், இடம்பெயர்ந்த வன்னி மக்களையும் கொடுஞ்சிறைக்குள் அடைத்து வைத்திருக்கும் சிங்களத்திடம் எதுவுமே கேட்பதில்லை.

இவையயல்லாம் இறையாண்மைக்குள் இருக்கும் ஜனநாயகச் சிறைகள் ஒத்து ஊதாவிட்டால், குவாண்டனாமோ சிறைபற்றிச் சிங்களம் பேசத் தொடங்கிவிடுமென்கிற கலக்கம் அவர்களை வாட்டுகிறது.

தாயகத்திலோ, சுமைதாங்க முடியாமல் விளிம்புகள் விரிகின்றன.

தோண்டினால் எம்மண்ணில் பல கம்போடியாக்கள்.

"வணங்காமண்' என்கிற விடுதலைத்தேரின் வடத்தினை, ஊர் கூடி இழுப்போம்.

விடுதலையின் விரிதளங்களிற்கான புதிய வாசலை அது திறக்கும்.

- இதயச்சந்திரன்-

Comments