''மக்கள் ஏன் ஓட்டுப் போடக் கூடாது?''
''ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை. பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக்கூட 'முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்' என்று ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கைகூடக் கிடையாது.
இருந்தாலும், ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை.
இன்னொரு வகையில், கருணாநிதி மீதும் ஜெயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி வாக்களித்துத் தணித்துக்கொள்ளும் ஆசுவாசம்.
இது ஒருபுறமிருக்க, அரசியல்வாதிகள் வாக்காளர்களை ஊழல்மயப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதற்குத் திருமங்கலம் இடைத் தேர்தலே அண்மைக் கால சாட்சி!''
''வாக்குரிமை என்பது ஓர் அடிப்படையான ஜனநாயக உரிமைதானே?''
''நாங்கள் தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை. இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம். ஓட்டுப் போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமையடையச் செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர, வேறு எந்த உரிமையைக் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி, வேலை, உணவு போல பேச்சுரிமைகூட அடிப்படை உரிமைதான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?''
''அப்படியானால் என்னதான் உங்களின் மாற்று அரசியல்?''''இந்தப் போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள் 'புதிய ஜனநாயகம்' என்ற மாற்றைச் சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு. ஆனால் அது 'வாக்காளப் பெருமக்களே' என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது. டாடாவையும், டாடாவால் துப்பாக்கிச் சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி 'வாக்காளப் பெருமக்கள்' என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படிக் கொண்டுவர முடியும்? சட்டம் இயற்றுவது சட்டமன்றம், அதை அமல்படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்போதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்தரவாதங்கள்தான் ஜனநாயகத்தைப் பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது.''
''சோவியத் யூனியன் உடைந்துவிட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான். அப்படியானால்..?''
''இந்தியாவின் தேர்தல் ஜனநாயகம் மட்டும் வெற்றியடைந்ததாகச் சொல்ல முடியுமா? ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச் சாதாரண விஷயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். 'அது தோற்றுவிட்டதே' என்பது, அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் அது எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்பதும் உண்மை!''
''தேர்தல் புறக்கணிப்பு ஒருபுறம் இருக்கட்டும்... ஈழப் பிரச்னை இந்தத் தேர்தலில் எப்படி எதிரொலிக்கும்?''
''இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள்தான். ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி ஈழ ஆதரவாளர்கள் ஏமாறக் கூடாது. ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான்.
நாம் கொடுக்கின்ற வரிப் பணமும், வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. ஈழத் தமிழனுக்கு காங்கிரஸ் மட்டும்தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை.
இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையைப் புலிகள் சுற்றி வளைத்தபோது, உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர்.
அப்போது, 'உடனே புலிகள் முற்றுகையை விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், இந்திய விமானங்கள் வரும்' என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது.
இந்தியா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!''
''இது ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாமலா இருக்கும்..?''
''யாராலும் அதிகம் பேசப்படாத இன்னொரு கோணமும் இதில் இருக்கிறது. இந்தியா, இலங்கைத் தீவைத் தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது. இந்தியப் பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.
டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணெய்க் கிணறுகள் என இந்தியாவின் அனைத்துப் பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. 'இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளைப் புனரமைக்க இந்தியா உதவும்' என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப் பெரு முதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் சொல்லும்.
இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!
இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்திவைக்கக் கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த நியாயம் ஈழத்துக்கு மட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்!''
''இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
''அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன்சிங்தான்
இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தைக் கொளுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்.
ஒரு கருத்தினைத் தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதைப் போல ஒரு கேலிக் கூத்து வேறு எதுவும் இல்லை.
அதனால்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம், 'தேர்தல் பாதை... திருடர் பாதை!' ''
- பாரதி தம்பி, படம்: கே.ராஜசேகரன் |
Comments