நீதிநெறியை மிதித்த மூர்க்கத்தனம்

1919ஆம் ஆண்டில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்னும் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். ஆங்கிலேய அரசு கொடிய ரவுலட் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவிக்கவே அவர்கள் கூடியிருந்தார்கள். அதன் குறுகிய வாயிலை அடைத்துக்கொண்டு பிரிட்டிசு இராணுவம் சுற்றிவளைத்து நின்றது. இராணுவத்தின் தளபதியாக வந்த டயர் என்பவன் ஆயுதம் தரியாத அப்பாவி மக்களை சுடும்படி உத்தரவிட்டான். ஏறத்தாழ 400 பேர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டனர். 2000பேருக்கும் மேல் படுகாயமடைந்தனர். கொடூரமான இந்தக் கொலைகளை நடத்திய டயர் "சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும் வரை" என கொக்கரித்தார். இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு நாளாக இந்நாள் இன்றளவும் திகழ்ந்து வருகின்றது.

சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு ஜாலியன் வாலாபாக் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அரங்கேற்றப் பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற வளாகத் திலே எங்கும் இல்லாத அளவில் அங்கு வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் காவல் படையினரால் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமுதாயமே விரட்டி விரட்டி தாக்கப்படும் அளவிற்கு அவர்கள் இழைத்த தவறுதான் என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவி வகித்த நீதியரசர்களும் வாதாடிய வழக்கறிஞர்களும் இந்திய அளவில் பெரும் புகழ்பெற்றவர்கள். உயர்நீதி மன்றத்தின் பெருமையை பலமடங்கு உயர்த்தியவர்கள். இங்கு பணியாற்றிய பலர் பல மாநிலங்களில் தலைமை நீதியரசர்களாக விளங்கியிருக்கிறார்கள். பல வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றும் அங்கும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளார்கள். இத்தகைய பெருமைக்குரிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதிப்பையே சீர்குலைக்கும் வகையில் காவல்துறை நடந்துகொண்டது அழியாத கறையாகும்.

29-01-09 முதல் வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல கட்டப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு மேலாக அவர்கள் நீதிமன்றங் களைப் புறக்கணித்து வருகிறார்கள். இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். அப்பா வித் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவது நிறுத்தப்படவேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்துத்தான் அவர்கள் போராடினார்கள். தமிழக அரசுக்கு எதிராகவோ காவல் துறைக்கு எதிராகவோ அவர்கள் போராடவில்லை. ஆனால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றுள்ள கொடூரமான தாக்குதல் களின் விளைவுகளை நேரில் கண்ட போது பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இப்படியொரு கொடுமை இதுவரை தமிழக உயர்நீதிமன்ற வளாகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநில உயர்நீதிமன்ற வளாகங்களிலும் நடை பெற்றதில்லை. நீதிமன்ற வரலாற்றிலேயே மிகமிக மோசமான கருப்பு நாள் இதுவாகும்.

இந்தத் தாக்குதல்களுக்கு முன் பாக 4-02-09 அன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தையொட்டி உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் நடத்திய சாலை மறியலின்போது பாரிமுனையில் சைக்கிள் கடை ஒன்று தாக்கப்பட்டதாக கூறி வழக்கறிஞர்கள் சிலர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. இதில் கைதான 22 வழக்கறிஞர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு இரவு 7 மணிக்கு காவல் துறை அழைத்து வந்தது. அவர்களுக் காக பிணை மனுக்களை தாக்கல் செய்ய வந்திருந்த சுமார் 200 வழக்கறிஞர்கள் மீது காவல் இணை ஆணையர் இராமசுப்பிரமணியம் தலைமையிலான காவல் படையினர் தடியடி நடத்தியதில் அதில் வழக்கறிஞர் புகழேந்தியின் மண்டை உடைந்தது. பல வழக்கறிஞர் கள் படுகாயமடைந்தனர். இந்த வழக்கறிஞர்கள் மீதும் பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இப்படி ஆத்திரமூட்டப்பட்ட போதிலும் வழக்கறிஞர்கள் காவல்துறைக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்க வில்லை. மாறாக ஈழத்தமிழர்களுக்காக ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலிகள், இரயில் மறியல்கள், இராணுவ அலுவலக முற்றுகை போன்ற போராட்டங்களைத் தான் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் சிதம்பரம் கோயில் நிர்வாகம் சம்பந்தமாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய 17-02-09 அன்று சுப்பிரமணியசாமி உயர்நீதி மன்றத்திற்கு வந்திருந்தபோது அவர் மீது முட்டைகள் வீசியதாக 20 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் களை அவரவர் வீடுகளில் சென்று கைது செய்திருக்கலாம். பிணையில் வெளிவரக்கூடிய குற்றச்சாட்டுக்கள் மட்டுமே இவர்கள் மீது சுமத்தப்பட்டிருப் பதால் அந்தந்த காவல் நிலையங்களி லேயே பிணையில் விடுவித்திருக்கலாம். ஆனால் வழக்கறிஞர்களுடன் ஓர் மோதலைத் ஏற்படுத்தும் திட்டத்துடனே தான் அவர்களை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி அங்குதான் மோதலுக்கு அடித்தளம் இடப்பட்டிருக்கிறது.

சுப்பிரமணியசுவாமி மீது இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் என்பவர் அதே காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்றுக்கொள்ள காவல் துறை மறுத்துவிட்டதின் காரணமாக மூத்த வழக்கறிஞர்கள் சிலர் உட்பட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல்நிலை யத்திற்குச் சென்று நியாயம் கேட்டுள்ள னர். இறுதியாக சுப்பிரமணிய சுவாமியின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை முடிவு செய்தது. இதற்குப் பின் குற்றச் சாட்டில் இடம்பெறாத வழக்கறிஞர்கள் சிலரை கைதுசெய்வதற்கு காவல்துறை முயற்சி செய்தபோது வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு நடந்துள்ளது. அதற்குப் பிறகு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றுவிட்டனர்.

அன்று பிற்பகல் மூன்று மணிய ளவில் ஆயிரக்கணக்கான காவலர்கள் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமலேயே காவல்படை உள்ளே புகுந்தது. உயர்நீதிமன்றத்தின் அத்தனை வாயில்களும் பூட்டப்பட்டன. பொறிக்குள் சிக்கியதுபோல வழக்கறிஞர்கள் வளாகத் திற்குள் சிக்கிக்கொண்டனர். 3 மணி முதல் இரவு ஏழரை மணி வரை நாலரை மணி நேரத்திற்கும் மேலாக காவல் படையின் வெறித்தாண்டவம் வளாகத்திற்குள் நடத்தப்பட்டது.

அந்த வளாகத்திற்குள் உள்ள பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர் கள் சங்க இருப்பிடங்களையோ வழக்க றிஞர்கள் அறைகளையோ காவல் துறை விட்டுவைக்கவில்லை. நீதிபதிகளின் அறைகள் கூட தப்பவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் ஆகிய எல்லோருமே கடுமையான தாக்குதல் களுக்கு ஆளாயினர். பெண் வழக்கறிஞர் களும் அலுவலர்களும் அவமானப்படுத் தப்பட்டு அடியும் வாங்கியுள்ளனர். அவர்கள் அறைகளிலிருந்த கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், ஏசி இயந்திரங்கள் ஆகிய எல்லாமே நொறுக் கப்பட்டுள்ளன.

வழக்கறிஞர்களின் நூலகங்களைப் பார்த்தபோது அந்தப் புத்தகங்களின் மீதும் காவலர்கள் வெறித்தாக்குதல்கள் நடத்தி யுள்ளனர். அங்கேயிருந்த கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு புத்தகங்கள் வீசியெறியப் பட்டுள்ளது. அங்கிருந்த நாற்காலிகள் உடைத்து மாடியிலிருந்து கீழே வீசப் பட்டுள்ளன. கிரானைட் கற்களால் செய்யப்பட்ட மேசைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். மாடியில் இருந்த பொருட்களும் தப்பவில்லை. வழக்கறிஞர்களும் தப்பமுடியவில்லை. வழக்கறிஞர்களின் அறைகள் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியிலும் காவலர்கள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நடத்தப்பட்ட தடியடி ஒவ்வொரு வரின் தலையைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பத்திரிகை யாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 60க்கு மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நீதியரசர்கள் சுதந்திரம், நாகப்பன், பாட்சா ஆகியோரும் காவல்துறையினரால் விரட்டப்பட்டுள்ளனர். நீதியரசர் ஆறுமுகபெருமாள் ஆதித்தன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொது மக்களின் வாகனங்களும் தப்பமுடிய வில்லை. காவல் படையினரின் அத்து மீறிய இந்தச் செயல்கள் குறித்து முழு விவரமும் கண்டறியப்பட்டுத் தவறி ழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தலைமை நீதிபதியிடம் அடிபட்ட வழக்கறிஞர்கள் ஓடிச்சென்று புகார் செய்தபோது மாலை 7 மணியளவில் அவர் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரை வரவ ழைத்தார். நீதிமன்ற வளாகத்தில் யாருடைய அனுமதியின் பேரில் காவல் படை புகுந்தது என அவர் எழுப்பிய கேள்விக்கு அதிகாரிகள் தரப்பில் பதில் இல்லை. நீதிமன்ற வளாகத்தில் இருந்து உடனடியாக காவல்படை வெளியேற வேண்டும் என்றும் வழக்கறிஞர்களைக் கைது செய்யக்கூடாதென்றும் சி.பி.ஐ. விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.

மதுரையில் ஊர்வலமாகச் சென்ற வழக்கறிஞர்களை டி.ஐ.ஜி. கிருஷ்ண மூர்த்தி கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய படம் எல்லாப் பத்திரிகை களிலும் வெளிவந்துள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்தை வழக்கறிஞர் கள் எரித்துவிட்டதாக காவல்துறையின் சார்பில் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தின் அத்தனை வாயில்களையும் அடைத்து காவல்துறை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்ட பிறகு உள்ளே சிக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள் வெளியே வரமுடியாமல் தவித்திருக்கிறார்கள். அவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். அப் படி இருக்கும்போது அவர்கள் நீதி மன்றத்திற்கு வெளியே வந்து போலிஸ் நிலையத்திற்கு எப்படி தீ வைக்க முடியும்?

தலைமை நீதிபதியும் தலைமைப் பதிவாளரும் வளாகத்திற்குள் காவல் துறையை தாங்கள் அழைக்கவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார்கள். உச்சநீதிமன்றமும் வளாகத் திற்குள் காவல்துறை புகுந்து தடியடி நடத்துவதற்கு ஆணை பிறப்பித்தது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் காவல் துறை செல்வதற்கு தலைமை நீதிபதி அனுமதிக்கவில்லை என்று சொன்னால், அதிகார மையத்தில் உயர் நிலையில் உள்ள ஒருவர்தான் அந்த அனுமதியை வழங்கியிருக்க வேண்டும். மாநகர காவல் ஆணையாளர் இராதாகிருஷ் ணன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். எனவே அவருக்கு இத்தகைய ஆணையை பிறப்பித்தது காவல்துறை தலைமை இயக்குநரா அல்லது முதலமைச்சரா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும்.

ஒருமாத காலமாக போராடிவரும் வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் ஏன் இந்த தடியடி? இதற்குப் பின்னணி என்ன?

இந்த நிகழ்ச்சிக்கு இரு நாட் களுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்து வழக்கறிஞர்கள் போராட்டம் குறித்து புகார் செய்ததாக கூறப்படுகிறது. இப்போராட்டத்தில் சோனியாவின் உருவப்படங்கள் மற்றும் காங்கிரஸ் கொடிகள் கொளுத்தப்படுவதாகவும் அதைத் தடுப்பதற்கு தமிழக முதலமைச் சர் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இச்செய்தி கேட்டு சோனியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக சுப்பிரமணிய சுவாமி பத்திரிகையாளரிடம் "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது இந்த ஆட்சியை பதவிநீக்கம் செய்யவேண் டும்" என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக" அறிவித்ததும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. 19ஆம் தேதியன்று காலையில் திருமண விழா ஒன்றில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி செயலலிதா அவர்கள் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேவரும்படி காங்கிரசுக்கு விடுத்த அழைப்பும் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கண்ட சூழ்நிலைகளே வழக்கறிஞர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகார மையத்தை தூண்டியது என்று கூறப்படுகிறது.

நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட மூர்க்கமான தாக்குதலின் விளைவாக தமிழகம் ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற்றப்பட்டுவிட்டது. மிகவேகமாக சரிந்துவரும் தனது செல்வாக்கை மீட்பதற்காக முதல்வர் கருணாநிதி அடக்குமுறையை மட்டுமே நம்பியிருக் கிறார். ஈழத்தமிழர்களுக்காகப் போராடும் வழக்கறிஞர்களை தனிமைப்படுத்தி ஒடுக்கிவிட முயலுகிறார்கள்.

ராஜாஜி, காமராசர் போன்றவர்கள் முதல்வர்களாகப் பதவி வகித்தபோது காவல்துறையை தங்களிடம் வைத்துக் கொண்டது இல்லை. அதை தனியமைச் சர்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தனர். காவல்துறையோ சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ தவறுசெய்யும்போது அவர்கள் தலையிட்டு திருத்தும் வாய்ப்பு முதலமைச்சர்களுக்கு இருந்தது. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் முதல் வரே காவல்துறையை வைத்துக்கொள் ளும் போக்கு வந்தது. காவல்துறை முதலமைச்சரின் செல்லப்பிள்ளையாக மாறியது. அரசியல் எதிரிகளை ஒடுக்கு வதற்கும் மக்கள் கிளர்ச்சிகளை அடக்குவ தற்கும் பயன்படும் துறையாக காவல்துறை மாற்றப்பட்டுவிட்டது. தான் பொறுப்பு வகிக்கும் துறைமீது யார் குற்றச்சாட்டு கூறினாலும் முதல்வர் மறுத்து தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்ற முயல் கிறார். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற கொடுமைகளுக்கு காரண மான உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் அடித்தவர்களையும் அடிபட்டவர்களையும் சமமாக வைத்து அவர்கள் சமரசமாக போகவேண்டும் என்றும் இல்லாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் மிரட்டுகிறார். முதலமைச்சர் சிறந்த நாடகாசிரியர் என்பதில் அய்யமில்லை. அவர் எழுதிய நாடகங்களில் அரசியல் புகுத்தியிருக் கிறார். ஆனால் இப்போது அரசியலையே நாடகமாக்கிக்கொண்டிருக்கிறார்.

காங்கிரசுடன் தி.மு.க.விற்குள்ள உறவை காப்பாற்றுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனநிலை யில் முதலமைச்சர் இருக்கிறார் என்பது தெளிவு. தமிழகத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதற் காக நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணிப் படையினராக வழக்கறிஞர் கள் திகழுகிறார்கள். எனவே அவர்களை அச்சுறுத்தி அடக்கி வைப்பதின் மூலம் இந்தப் போராட்டத்தை செயலற்றதாக ஆக்கிவிடலாம் என தமிழக அரசு கருதுகிறது. ஆனால் கொடுமையான ஒடுக்குமுறைக்குப் பிறகும் வழக்கறிஞர் கள் வீறுகொண்டு எழுந்து தங்கள் போராட்டத்தை தொடருகிறார்கள். சென்னையிலே மட்டுமல்ல தமிழகம் பூராவும் எல்லா இடங்களிலும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மக்களின் சகல பிரிவினரும் போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னாள் தவறு செய்த காவல் படை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தவறு வாரானால் அதன் விளைவாக தமிழகம் பொங்கி எழும்.

- பழ.நெடுமாறன்

Comments