தமிழக மக்கள் எரிமலையாக வெடிக்க போகிறார்கள் பழ. நெடுமாறன்

2002080204810101வரப்போகும் தேர்தல் களத்தை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றுவோம். யார் யார் துரோகம் செய்தார்கள் என்று தோலுரித்துக் காட்டுவோம்’’ என்று தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர் ஆனந்த்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று மலரஞ்சலி செலுத்தினார்.


பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம்,


’’ஈழத் தமிழருக்காக உயிர்த்தியாகம் செய்த ஆனந்தின் இறுதி ஊர்வலம் கடலூரில் நாளை நடைபெற உள்ளது. இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அப்போது அவர்களுடன் பேசி ஆனந்த் குடும்பத்துக்கு நிதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
இதுவரை தமிழகத்தில் 11 பேரும், வெளிநாட்டில் 3 பேரும் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிர் தியாகம் செய்த அனைவரும் இளைஞர்கள்.
வாழ வேண்டிய வயதில் இலங்கை தமிழர் படும் வேதனைகளை கண்டு தாங்க முடியாமல் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. யாரும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டாம் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக கேட்டு கொண்டுள்ளோம்.

இலங்கை பிரச்சினை தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இதை அரசு உணர வேண்டும். சராசரியாக 4 நாட்களுக்கு ஒருவர் வீதம் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக மக்கள் எரிமலையாக வெடிக்க போகிறார்கள். என்பதற்கான அறிகுறி இதுவாகும்.
தியாகத்துக்கு மதிப்பளித்து இலங்கை பிரச்சினையில் தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய மத்திய, மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய-மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

’’இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 48 நாள்களில் பல ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மக்கள் திரள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதித்து நடக்கிறோம். இதுவரை 11 இளைஞர்கள், உயிரைதுச்சமென மதித்து தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்திய அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தர வேண்டும் என்றா கேட்கிறோம். யுத்தத்தை நிறுத்தச் சொல்கிறோம். பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரை நிறுத்தச் சொல்லியிருந்தால் போர் நிறுத்தப்பட்டு இருக்கும்.

1983-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மூவாயிரம் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் இந்திரா காந்தி தேசியக் கொடி ஏற்றி விட்டு இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது.

இதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இருக்காது என்றார். இதைக் கேட்ட ஜெயவர்த்தனே டெல்லிக்கு வந்து விட்டார்.


இந்திராகாந்தியிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இதை மன்மோகன்சிங்கிடம் எதிர்பார்க்க முடியாது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சொல்கிறார் பிரணாப் முகர்ஜி.
இந்திராகாந்தி வழங்கிய ஆயுதங்கள்தான் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இந்த உண்மை காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியாது.

அவர்களுக்கு உலக வரலாறும், இந்திய வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரியம் உண்டு. மிகப் பெரிய தலைவர்கள் தியாகம் செய்து வளர்த்த கட்சியாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மனிதாபிமான அடிப்படையில் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் பிரதமருக்கு அடுத்த பொறுப்பில் இருப்பவர்.

அவர் சென்னையில் பேசும்போது தமிழர்களுக்கு ஆறுதலாக 4 வார்த்தை கூறுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் மாறாகப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில் இலங்கைப் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை, அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்.

காங்கிரஸ்காரர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதை தமிழ் இதயங்கள் மன்னிக்காது. இதற்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ளவர்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் 48 நாட்கள் மக்களை ஒற்றுமையாகச் சந்தித்து வருகிறோம்.

தேர்தல் வரும் போகும். வரப்போகும் தேர்தல் களத்தை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றுவோம். யார் யார் துரோகம் செய்தார்கள் என்று தோலுரித்துக் காட்டுவோம்’’ என்று தெரிவித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பேரணி பொதுக்கூட்டம் புதுவை கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகே நடந்தது.

இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் கோ.க.மணி, இந்திய கம்யூ. துணைசெயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், வி.சிறுத்தை அமைப்பாளர் தொல்.திருமாவளவன், பாஜ இல.கணேசன் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.

மேடையில் பேசிய தலைவர்களும் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதை முதலில் உறுதிபடுத்தினர். ஆனால் திடீரென அவர்கள் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. 2 பேரும் புதுச்சேரியில் இருந்தும் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எதிரொலியாக இது நடந்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments