பூண்டோடு அழிபடும் ஈழத் தமிழினத்தின் இறுதிப் போர் ! வெற்றி ஒன்றே எமது அறுதி இலக்கு !

ஆய்வுவன்னி மக்களின் அவலம் வரலாறு காணாத அளவுக்கு விரிந்து கிடக்கிறது. காணி நிலத் தோடு வீடு வளவோடு கைகால் உழைத்துத் தேடிய செல்வம் அனத்தும் பறிக்கப் பட்டு அனல் காற்று வீசும் பாலை நிலத்துக்குள் பாதுகாப்பு என இந்திய இலங்கை அரசுகளின் மரணப் பொறிக்குள் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று அழிக்கப் படுகின்றனர்.

வாரம் 80 பொதி ஊர்திகள் மூலம் கொடுக்கப் பட்ட உணவால் அரைப் பட்டினியில் தவித்த மக்கள் கடந்த 1 மாதமாக ஒரு பார ஊர்தி அளவு உணவுப் பொருளும் வழங்கப் படாத நிலையில் பட்டினிச் சாவுக்குள் ஒரு நேர உப்புக் கஞ்சிக்கும் வரிசையில் கை ஏந்திக் காத்திருக்கும் காட்சி அங்கே !

வீடுகளில் வாழ்ந்து மடிந்து ஈமக் கிரிகைகள் பெற்றும் முதுமக்கள் தாழிக்குள் அடக்கம் கண்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு படைத்த முது பெரும் தமிழினம் பதுங்கு குழிகளுக்குள் சாமதியாயும் வழியெங்கும் சதைப் பிண்டங்களாகியும் கிடக்கும் காட்சிகளும் அங்கே வன்னியில் !

ஈழத் தமிழருக்கு இறையாண்மை இல்லை எனக் கூறும் இவர்களுக்கு இறையாண்மை பற்றியும் ஐ.நா. மனித உரிமைச் சாசனத்தின் விதிகள் பற்றியும் புதிதாகப் பாடம் நடத்த வேண்டிய நிலை தெரிகிறது

இத்தனைக்கும் உடல் பொருள் ஆவி அர்பணித்து இலங்கை அரசின் பெயரால் இவைகளை நடத்தி நிற்கும் இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவியோ ஆந்திராவிலும் தமிழகக்திலும் கேரளாவிலும் மடிப் பிச்சை ஏந்தி இந்த மக்களின் துயர் துடைக்க கோரிக்கை விடும் காருண்யக் காட்சி வட இந்தியாவில் !

அப்படிப் பிச்சை ஏதும் எடுத்து அனுப்பினாலும் அவை பெருமாளுக்குப் போகவிடாது பறித்து விடும் அனுமார்களின் ஆட்சி நடக்கும்
தேசத்திலா அவை அந்த மக்கின் உயிர் காக்கப் போகின்றன ? மேலும் இந்தத் திட்டத்தை அப்படியே நம்பிவிடும் நிலையில் தமிழ் மக்கள் ஒன்றும் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பது இந்த இத்தாலி அம்மாவுக்குத் தெரியாது இருக்கலம். ஆனால் நாட்டிலே வீசும் தேர்தல் காற்றிலே காய்ச்சல் கிருமிகள் இருக்கும் சேதியைத் திருமங்கல இடைத் தேர்தல் காட்டி விட்டதை தமிழர் அறிவர். இதனால் தமிழக முதல்வர் தமது தள்ளாத முதமையிலும் தாளாத முதுகு வலியிலும் வன்னி மக்களுக்காக மகாத்மா காந்தி வகுத்த வழியில் உண்ணா நோன்பு இருந்த (?) நாடகக் காட்சியும் அரங்கேறியது.

இத்தனை அநியாய அக்கிரமங்களுக்கும் காரணம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் கைகளில் இருக்கும் ஆயுதங்களளே என்று இந்திய அரசுத் தலைவி பிரதீபா பட்டேல் முதல் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள் விவகார அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் தமிழக முதலமைச்சி ஜெயலலிதா, இந்நாள் முதலமைச்சர் கலைஞர், வருங்கால முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தங்கபாலு போன்ற எடுபிடிகளும் சொல்லி வருகிறார்கள்.

இத்தனை பெரிய அறிஞர்கள் கூறுவதில் உண்மை இருப்பதை ஆனந்த சங்கரி, டக்லஸ்,கருணா , பிள்ளையான், ஆறுமுகன் தொண்டமான் போன்ற அனுபவம் மிக்க இலங்கைத் தமிழர்களின் அரசியல் வாதிகளுக்கு மட்டும் விளங்கலாம். இப்படியானவர்களின் அறிவாற்றலை, அரசியல் சாணக்கியத்தை மகிந்த, பசில், போகொல்லகம , ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மேத்தானந்த தேரர், தம்மிக்க ரணவக்க, ரணில், போன்ற முதல் தர தேசிய வாதிகளும் பாராட்டலாம்.

எங்கே எதை எப்படிப் பெற வேண்டும் என்ற ஒரு நியாயப் பாடு அல்லது விவஸ்தையே இவர்களிடம் இல்லாமல் இருப்பதுதான் மிகப் பெரும் அநியாயமாகத் தெரிகிறது. பால் இருக்கிற பசு மாட்டில் பாலைக் கறக்க நினைக்காது காளை மாட்டைக் காயடித்துப் பாலைக் கறந்து விடும் செயலாக இலங்கை இந்திய அரசுகள் வன்னி மக்கள் மீது முட்டாள் தனமான போரை நடத்திப் புலிகளிடம் உள்ள ஆயுதத்தைப் பறிக்கப் போகிறோம் என்கிறார்கள்.

இந்தியத் தலைவர்கள் புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டால் போதும் மக்கள் உயிர் பிழைத்து விடுவர். அப்படி அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடாத காரணத்தால் மக்கள் கொல்லப் படுகிறார்கள் என்ற நியூட்டனின் விதி போன்ற புதிய விதி ஒன்றை வகுத்து விளக்கம் தருகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டாலும் போர் நிற்காது என்கிறது.

மேத்தானந்த தேரர் தம்மிக்க ரணவக்க போன்றோர் வன்னிப் பிரதேசத்தரில் சிங்களவரும் முஸ்லீம்களும் குடி அமர்த்தப் படுவர் என்கின்றனர். சிங்களத்தின் செயற் திட்டத்தில் இராணுவத்தினரும் அவரது குடும்பங்களும் குடியமர்த்தப் படுவர் என்கின்றனர். 1930 களில் அரசின் திட்டம் இட்ட சிங்களக் குடியேற்றங்களில் சிறைக் கைதிகளும் குற்றவாளிகளும் குடி அமர்த்தித் தமிழ் மக்களை தாமாகவே வெளியேற வைத்தனர்.

இன்று நாடே கைதிகளாலும் குற்றவாளிகளாலும் நிறைந்து கிடக்கிறது. எனவே கிழக்கிலும் வன்னியிலும் சிங்களக் குடியேற்றம் சிறப்பாக இடம் பெறும் சாத்தியம் உள்ளது. ஆனால் இத்தகைய பின்னணியில் தமிழ் மக்களின் உறுதியும் அறுதியும் படுத்தப் பட்ட விதியாக இருப்பது புலிகளின் கைகளில் ஆயுதங்கள் என்பதாக இருக்கிறது. இந்தியாவும் ஏனைய நாடுகளும் இந்த அளவுக்குச் சிங்களத்தின் தமிழ் இன அழிப்புப் போரில் தலையை நுளைக்காது இருந்தால் என்றோ தமிழ் மக்களின் துயரம் துடைத்தழிக்கப் பட்டுத் தனியான இறைமை பெற்ற ஆட்சி மலர்ந்திருக்கும்.

மொத்தத்தில் தமிழினத்தின் இன்றைய கையறு நிலைக்கு முற்று முழுதான பொறுப்பும் இந்தியாவின் நெறிகெட்ட வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்டது என்பதை 1977 முதல் இலங்கை பற்றிய அதனது வெளியுறவுக் கொள்கையை ஆய்வு செய்பவர் எவரும் எளிதில் புரிந்து கொள்வர். எக்காரணம் கொண்டும் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர் தமது தவறை உணர்ந்து திருந்தப் போவது இல்லை. தவறு நடந்து விட்டது அதனைத் திருத்த வேண்டும் என்ற பகுத்தறிவும் அதற்கு இருப்பதாக நினைத்து விடவும் முடியாது.

குடும்ப அரசியலிலும் ஊழலிலும் சிக்கிவிட்டுள்ள அசியல் வாதிகளும் கட்சிகளும் அறிவு பூர்வமாகச் சிந்திக்கவும் செயற்படவும் இயலாதுள்ள நிலையில் இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றம் என்பது முயற்கொம்பாய் இருக்கிறது. இதனால் இந்தியாவின் எப்பகுதியும் எந்நேரத்திலும் பகைச் சக்திகளின் தாக்குதல் எல்லைக்குள் கிடக்கிறது. இவை உண்மை என்பதைக் கடந்த காலத் தொடர்ச்சியான தாக்குதல்கள் நிரூபித்தும் உள்ளன.

தனது இறையாண்மை பற்றிக் கவலைப் படாத இந்தியா சிங்களத்தின் இறைமை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வது வேடிக்கையதான். ஈழத் தமிழருக்கு இறையாண்மை இல்லை எனக் கூறும் இவர்களுக்கு இறையாண்மை பற்றியும் ஐ.நா. மனித உரிமைச் சாசனத்தின் விதிகள் பற்றியும் புதிதாகப் பாடம் நடத்த வேண்டிய நிலை தெரிகிறது. தனது தமிழ் மக்களின் உணர்வுகளையோ உரிமைகளையோ மதிக்கக் தெரியாத ஆட்சி இந்தியாவில் நடக்கிறது.

ஆட்சியில் அதிகாரத்தில் உள்ள கட்சிகள் தனக்கு எதிராகக் கிளம்பும் அரசியல் எதிர்ப்புகளைக் கைதுகள் சிறைகள் மூலம் வலுவிழக்கச் செய்தும் பணநோட்டுக்கள், வாக்குறுதிகள், இலவசங்கள் வாக்கு மோசடிகள் மூலம் நடத்தும் ஜனநாயக ஆட்சி இலங்கையில் மகிந்தவின் ஜனநாயகத்துக்கு நிகராக உள்ளது. அதனால் அது மக்களால் மக்களுக்கான ஆட்சியாக இருக்காது மாறாக சோனியாவுக்கும் மகிந்தவுக்குமான இந்திய மக்களாட்சியாகவே அது இருக்கும்.

இனிமேல் தமிழகத் தமிழருக்கும் ஈழத் தமிழரின் கதியே அல்லாது தனியான சிந்தனை அரசியல் அபிலாசைகள் போன்றவை மத்திய அரசினால் அனுமதிக்கப்படப் போவதில்லை. மத்திய அரசில் இப்போதுள்ள பலம் போன்று தமிழருக்கு வாய்க்கப் போவதும் இல்லை. ஈழத் தமிழினத்துக்கு இதுபோன்ற அவலம் இனிப் புதிதாக வரப் போவதும் இல்லை. இந்த நேரத்தில் தமிழினததைக் காப்பாற்ற முடியாத தான் தோன்றித் தனமான தமிழக அரசியல் தலைவர்களின் செயற்பாடு இனத் துரோகத்தின் ஒட்டு மொத்த வடிவம் என்றே வரலாறு எழுதி வைக்கப் போகிறது.

இதில் அறிந்தோ அறியாமலோ தி.மு.க., ம.தி.மு.க., ப.ம.க. கட்சித் தலைவர்கள் கூட்டுக் குற்றவாளிகள் என்பதை செயலில் சாதித்து விட்டார்கள். அடுத்த பொதுத் தேர்தலில் இக்குற்றச் சாட்டை ஜெயலலிதாவே பிரச்சாரப் படுத்துவார் என்பதிலும் சந்தேகம் கிடையாது. ஈழத் தமிழினத்துக்காக 1995 ல் தீயில் தியாகமான அப்துல் மஜீத் முதல் இன்று வாணியம்பாடி சீனிவாசன் வரை எத்தனையோ தமிழக உறவுகள் உயிர்க்கொடை ஈந்தும் கூட எந்த விதத் தீர்வும் இல்லாது ஈழத் தமிழர் மட்டும் அல்ல இந்தியத் தமிழ் மீனவரும் இலங்கைப் படையால் கொன்று அழிக்கப் படும் நிலையே தொடருகிறது.

இந்தத் தமிழின அழிப்புப் போரில் இந்தியாவின் பாரிய பங்களிப்பு இருப்பதும் அதன் ஆட்சியில் தமிழக தமிழ் உறுப்பினர் அமைச்சர் பதவிகள் வகிப்பதும் அவலத்தின் அவமானத்தின் உச்சக் கட்டமாகும். தமிழைச் செம்மொழி ஆக்கி விட்டதாகத் தம்பட்டம் அடிக்கும் தற்குறித்தனமும் வரலாறு மன்னிக்கவோ மறக்கவோ மறைக்கவோ முடியாத சாதனைகளாகும்.

இந்த நிலையில் வருகின்ற தேர்தல்களாலும் எதுவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதைக் கட்சிகள் தமக்குள் அமைக்க முயலும் கூட்டணி வியூகங்கள் அம்பலப் படுத்துகின்றன. எனவே தமிழக உறவுகள் மிக உயர்ந்த அர்ப்பணிப்புகளைச் செய்து வருகின்ற போதும் அவர்களின் அரசியல் தலைமைகள் போதிய பலத்துடன் இருக்கும் நிலையிலும் மத்திய அரசின் தமிழர் விரோத செயல்களை நிறுத்தவோ இலங்கையில் தமிழ் இன அழிப்புப் போரைக் கைவிடச் செய்யவோ முடியாத நிலைதான் உள்ளது.

எனவே ஈழத் தமிழினம் தனது புலம் பெயர் மக்களின் பலத்திலும் அவர்களின் நேச சக்திகளின் தயவிலும் மட்டுமே நம்பியிருக்க வேண்டியாதாய் உள்ளது. சிங்களக் கட்சி பேதம் இன்றி பயங்கரமான பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரில் உலகின் போர்குற்றங்கள் அத்தனையையும் செய்து அகில உலகத்தின் வாயையையும் மூடவைத்து விடுவதில் வெற்றி கண்டுள்ளது.

அதன் அடுத்த அடியாக தமிழர் தேசிய கூட்டமைப்பை முடக்கும் நோக்கத்தில் பல வித இடர்ப்பாடுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிரான நடவடிக்கை மூலம் அவரது நாடாளுமன்றப் பதவியைப் பறித்து அடுத்த தேர்தலிலும் பங்கு பற்ற முடியாதவாறு அவரது குடியுரிமை பறிக்கப் பபட உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த வழியை ஊக்கப் படுத்திக் கூட்டமைப்பை முற்றிலுமாகத் தடை செய்வதன் மூலம் ஆனந்தசங்கரி, டக்லஸ் மற்றும் உதிரிகள் தமிழ் மக்களின் தலைவர்களாக அவதாரம் எடுக்க முயற்சி செய்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

எனவே புலம் பெயர் ஈழத் தமிழினம் தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி இந்தப் போரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. புலத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் அனைத்துலக கவனத்தை ஈர்த்துத் தம் பக்கம் உள்ள நியாயத்தை ஏற்கச் செய்ய வேண்டியது அதன் முதலாவது பணியாக இருக்கிறது.

இரண்டாவது முக்கிய பணியாக இலங்கையின் பொருளாதார வலுவை உடைக்கும் வகையில் அதன் வணிக வர்த்தக வளங்களைப் புறக்கணிப்பது ஒரு முக்கிய செயற் திட்டமாகப் பார்க்கப் படுகிறது. இன்று உலக பொருண்மியம் பாரிய வீழ்ச்சி கண்டுவரும் நிலையில், இலங்கையின் மிகப் பெரும் சந்தை வளமாக விளங்கும் புலம் பெயர் தமிழர்களின் ஒட்டு மொத்தப் புறக்கணிப்பு சிங்கள தேசத்துக்கு மரண அடியாக விழும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஓன்றாய் எழுவோம் உழைப்பால் உயர்வோம்.

ஈழப்பிரியன்

Comments