அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு வருமாறு ஜனா திபதி மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை நிராகரித்து, நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் மகா நாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்து விட்டனர்.
மகாநாட்டில் தாம் பங்குபற்றாமைக்கான காரணத்தை ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்திக் கடிதம் ஒன்றை அவர்கள் அனுப்பியிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் ஆராயப்படவேண்டிய விசேடமான அரசியல் விவகாரங்கள் குறித்து விசேடமாகக் குறிப்பிடப்படவில்லை. வெறுமனே, நாட்டில் நிலவும் அரசியல் சூழ் நிலை குறித்து ஆராய்வதற்கான விருப்பத்தை வெளியிட் டிருந்தீர்கள் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியில் இடம் பெயர்ந்துள்ள 3 லட்சம் மக்கள் தொடர்பாகத் தோன்றியுள்ள பாரிய மனிதாபிமான நெருக்கடி குறித்து எதுவும் கூற வில்லை என்பதையும் தமது கடிதத்தில் கூட்டமைப்பினர் "தடித்த எழுத்தில்" வடித்திருந்தனர்.
அதற்கப்பால், அந்தக் கடிதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மனிதாபிமான நெருக்கடி குறித்த விடயங்களே, அம்சம் அம்சமாக விவரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் இறந்தொழிவது குறித்தும், அவர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள், அவலங்கள் மற்றும் கிடையாமை குறித்த விவரங்களே ஜனாதிபதிக்கு எழுதிய அக் கடிதத்தின் பெரும் பகுதியில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
கடிதத்தின் இறுதிப் பகுதியில் வன்னியில் நிகழக்கூடிய மனிதப் பேரவலத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் வன்னி மக்கள் குறித்த ஒரு "நிலைமை அறிக்கை" யை ஜனாதிபதிக்கு கூட்டணியினர் அனுப் பியுள்ளனர். தமிழ்ப் பொதுமக்கள் பாரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளதாகவும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுத்தபின்னரே, அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சு நடை பெறுவது பொருத்தமென்றும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
இந்த மட்டில், தமிழ்மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்றவகையில், அவர்கள் நியாயமாக, நிதானமாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பத னைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வர் எனக் கொள்ளலாம்.
வீடு பற்றி எரியும்போது, பிடில் வாசித்த நீரோ மன்ன னாக அன்றி, வீடு நாசமாவதை சாம்பராவதைத் தடுக்க வேண்டும் என்பதில் அக்கறைகொண்டுள்ளமை ஏற்கத் தக்கதே. தமிழ் மக்களின் சார்பில் பேசவல்ல சக்தியை அவர் கள் வீணடிக்கவில்லை. எதற்கு முன்னுரிமை அழிக்கப் பட வேண்டுமோ அதாவது தீ மூண்டுள்ள வீட்டின் நெருப்பை அணைத்து சேதத்தைத் தவிர்த்தாலே அதனைப் புனரமைத்துப் பிள்ளைகளின் திருமணத்தை அங்கு நடத்த இயலும் நடத்த வேண்டும் என்று கறள் ஏறாத தராசு போல சரியாக அளந்து செயற்பட்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் படும் அவலங்களையும் அனுபவிக்கும் அநீதிகளையும், அவர்கள் மூன்றாம் தரப் பிரசைகளாக வாழ்வதிலிருந்தும் தோஷம் நீங்கியவர்களாக தமது அரசி யல் உரிமைகளை அனுபவிக்க வகைசெய்யும் அரசியல் தீர்வு ஒன்று அத்தியாவசியம் என்பதற்கு எதிர்க்கருத்து இருக்கமுடியாது.
ஆனால், இன்றைய கட்டத்தில் முதலில் தேவைப்ப டுவது தமிழ்மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுவதே ஆகும். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் தீட்ட முடியும். மகாநாடு என்ற காற்றலையில் எந்த ஓவியனாலும் வர்ணப் படம் கீறமுடியாது.
இந்தப் பெரும் உண்மையை மறந்து தமிழர்களின் இன்றைய நெருக்கடியான நிலையை மறைத்து வைத்துவிட்டு, அரசியல் தீர்வுக்காகப் பேச்சு நடத்துவது என்பது உலகம் தமிழர் நிலை குறித்து கொண்டுள்ள கவலையை, போலித்தனமாகத் துடைத்து விடும் முயற்சி என்பதனை எந்தத் தரப்பினர் வெளிப் படுத்திக் கூறமுன்வராவிடினும், தமிழ் மக்கள் புத்தி பூர்வமாக உணர்ந்துகொள்வர்.
முல்லைத்தீவில் மனிதப் பேரவலம் ஒன்று நிகழப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையும், பல உலக நாடுகளும் சர்வதேச மனிதாபிமானத் தொண்டு நிறு வனங்களும் அச்சம் வெளியிட்டும், எச்சரிக்கை செய்தும் வரும் இந்தத் தருணம் பார்த்து, ஆண்டிகள் கட்டும் மட மாக அரசியல் தீர்வு குறித்துப் பேசுவது வீணே பொழுதைப் போக்குவதற்கு ஒப்பானதே. அத்தோடு இது ஒழுங்கு நிரல் மாறிய ஒன்று.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கென உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி மாநாடு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நூற்றெட்டுத் தட வைகள் கூடியும் நடைமுறைச் சாத்தியமான எந்த உருப் படியான யோசனையையும் சாதகமான சிபார்சுகளையும் முன்வைக்காத நிலையில்
தமிழர் தரப்புக்களை மட்டும் அழைத்துப் பேசி உட னடியாக உகந்த தீர்வு ஒன்றைக் "கண்டுபிடித்து" விடலாம் என்று காட்ட விழைவது
அரசாங்கம் உலகத்துக்கு கூறிவரும் பொய்மைக்கு சாட்சி கூறுவதற்கே என்பதில் சந்தேகம் இல்லை. வேலிக்கு ஓணானைச் சாட்சி வைக்கும் தந்திர முயற்சி என்பதனை எவரும் இலகுவாகப் புரிந்து கொள்வர்.
தமிழர் விவகாரத்தில் அவர்களுக்குரிய, உகந்த அரசி யல் தீர்வு ஒன்றினை வழங்க வேண்டும் என்பதில் மகிந்த அரசுக்கு மனதார்ந்த, முழுமையான விருப்பம் இருப்பின்
வன்னிப் பேரவலத்தை நீக்குவதற்குத் தேவையான உகந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். முதலில் தமிழ் இனம் அழிவதைத் தவிர்க்க ஏதுவான வழிமுறைகளைச் செயற்படுத்தவேண்டும்.
அதன் பின்னர், உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றை காண் பதற்கு மனச்சுத்தியுடன், கபடமில்லாச் சிந்தையுடன் செய லில் இறங்கவேண்டும். அது நேர்மையான முயற்சியாக அமையின் கூட்டமைப்பினரைத் தமிழ் மக்களே உந்தித் தள்ளி அதற்கான முயற்சியில் இறங்கத் தூண்டுவர்; அனுமதிப்பர்.
Comments