யாரிடம் கேட்பது நீதியும் நேயமும் ...?


வன்னிப் பகுதியில் நடைபெற்று வரும் மோதல்களி னால் போரின் விளைவாக 60 ஆயிரம் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விவரத்தை வெளியிட்டிருப்பது வன்னியில் இயங்கும் தமிழீழ விடுதலைக் கழகம் அல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர் அவசர நிதிய நிறுவனமே (யுனிசெப் நிறுவனமே) மேற்கண்ட புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது.

அதனால் மேற்சொன்ன விவரம் கூட்டிக் குறைக் கப்பட்ட எண்ணிக்கை என்று அரசாங்கம் அதன் கல்வி அமைச்சு மறுப்புத் தெரிவித்துவிட முடியாது.

இதனை எதற்காகக் குறிப்பிட நேரிடுகிறது என் பதற்குக் காரணம் உண்டு. வன்னி சம்பந்தமாக சர்வதேச அமைப்புக்கள், நிறுவனங்கள் வெளியிடும் புள்ளி விவ ரங்கள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டவை என்று அரசு எடுத் தாற் போல் மறுப்புத் தெரிவிப்பது வழக்கமாகி வருகிறது.

சர்வதேச அமைப்புகள் தமது புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச்சுக்களை அல்லது பிரதிநிதிகளைக் கலந்தாலோ சிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசிடம் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யாளர் நாயகம் நவநீதம்பிள்ளை வன்னியில் போரினால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிட்ட புள்ளிவிவரம் பெருப்பிக்கப்பட்டது என்றவாறு பெரும் வாதப் பிரதிவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டு அது இன் னும் தணியவில்லை.

அதேபோன்று "யுனிசெவ்" அமைப்பு வெளியிட் டுள்ள போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண் ணிக்கையும் அரசுக்கு ஒவ்வாமையைக் (Alergy) கொடுக்கலாம். நிற்க!
ஐ.நாவின் சர்வதேச சிறுவர் அவசர நிதியம் வெளி யிட்ட எண்ணிக்கையை ஒருபுறம் வைத்துவிட்டு, அது குறிப்பிட்டுள்ள தாக்கம் குறித்துச் சிந்திக்கும்போது தமிழர்களுடைய இன்றைய சந்ததி மட்டுமின்றி வருங் காலச் சந்ததியும் எத்துணை பாதிப்புக்கு ஆளாகப் போகி றது என்பதனை நினைத்துப் பார்க்கவே பயங்கரமான தாகத் தோன்றுகிறது.

அரசாங்கத்தின் "மனிதாபிமான நடவடிக்கை" தொடங் கப்பட்ட நாளிலிருந்து, மோதல் காரணமாக பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் கடும் காயங்களுக்கு ஆளா கியுள்ளனர். நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட் டுள்ளனர் என்று "யுனிசெவ்" கணக்கிட்டுள்ளது.
வன்னி வாழ் சிறுவர்கள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலான காலப்பகுதியில், பன்னிரண்டு தடவைகளுக் கும் கூடுதலாக பாதுகாப்புத் தேடி இடம்விட்டு இடம் பெயர்ந்துள்ளனர் என்ற தகவல்களையும் யுனிசெவ் வெளிகொணர்ந்திருக்கிறது.

அவை மட்டுமின்றி, தமது வயதுக்கேற்ற வசதிகள் இன்றிப் பதுங்கு குழிகளிலும் மறைவிடங்களிலும் தொடர்ந்து வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர் என்பதனையும் மிகுந்த கவலையுடன் தெரிவித்திருக்கின்றது.

போர் இல்லாத காலத்தில், அமைதி நிலவிய காலத்தில் , சிறுவர்களாக இருந்தவர்கள் பெற்றோராலும் ஒட்டு மொத்தமாக சமூகத்தினாலும் எவ்வளவு அக்கறையுட னும் பராமரிப்புடனும் பேணி வளர்க்கப்பட்டவர்கள் என்ற நிலையுடன் ஒப்பிடும்போது, இன்றைய வன்னிச் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய உள, உடல் பாதிப்புகள் எல்லையற்றனவாக இருக்கப்போகின்றன என்ற சேõகம் எவரது மனதையும் நெருடும்.

இன்றைய சிறுவர்கள் நாளைய இளைஞர்கள்; அடுத்த நாள் தமிழர் சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழவிருப் பவர்கள். சிறுவர்கள் தமக்குரிய வசதிகள் இல்லாமல் அடிப்படை வசதிகள்அடிப்படை பராமரிப்புகள் இன்றி வளர்வது எதிர்காலத்தில் நினைக்கவொண்ணாத பாதிப்புகளையும் நட்டத்தையும் சமூகக் கட்டமைப்பில் குலைவையும் உருவாக்கப்போகிறது என்று சிந்திக்க மனம் பதறுகிறது.

வன்னி மோதலில் அகப்பட்டு காயமுற்று திருகோண மலைக்குக் கூட்டிச் செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை, போரி னால் அவர்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு ஒரு குறியீடாக அமைகிறது. அவர்களில் பலர் அவயவங்களை இழந்தும், பிஞ்சு மேனியில் ஆறாக் காயமுற்றும் வந்திருப்பது யுனிசெவ்வின் அறிக்கை யினை ஆமோதிப்பதாகவே அமைகிறது.

ஒட்டு மொத்தத்தில், தமிழர்களின் இன்றைய சந்ததி மட்டுமின்றி எதிர்காலத் தலைமுறையும் போரினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படவுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு பாதகநிலை. போர் ஒன்று நடைபெற்றால் இத்தகைய நட்டங்கள் உண் டாவது தவிர்க்கமுடியாததே என்று கூறி அல்லது தர்க்கித்து மனம் ஆறக்கூடிய விவகாரமும் அல்ல இது.

இன்றைய உலகியல் நடப்புகளில் சிறுவர்களுக்கென உரிமைகள் வகுக்கப்பட்டு, அவர்கள் உடல், உள, வளம் நிறைந்த எதிர்காலப் பிரசைகளாக சந்ததியினராக பேணப்படவேண்டும் என்று பல சர்வதேச நியமங்களும் பிரகடனங்களும் சட்டமுறைகளும் உலகளாவிய ரீதியில் கைக்கொள்ளப்படுகின்றன.

அவற்றை எல்லாம் தூக்கிவீசி, காலில் போட்டு மிதிப்பது போன்று வன்னியில் போரின் விளைவுகள் நாசகாரமாகியுள்ளன. மனித நேயம், மனிதாபிமானம் என்ற அடிப்படைப் பண்புகளை சுனாமி அலை போல வந்து அடிபெயர்த்திருக்கிறது போர்.

இதற்கு யாரிடம் நீதியும் நேயமும் கேட்பது.....?

Comments