ஐயோ..ஆமி வருது,.ஆமி வருது

பிரசித்தி பெற்ற ராமேஸ் வரம் கடற்கரையின் அடி வானம் சிவந்து, வெளிறிப் பூக்கும் அதிகாலைப் பொழுதுகளில், தற்போது தென்படும் காட்சிகளைக் காலன் பார்த்தால் கூடக் கண்ணீர் வடிப்பான்.

மன்னார், பேசாலை, நெடுங்கண்டல் அடம்பை, தாழ்பாடு, மருங்கன், வட்டக் கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்தும், மற்ற கடலோரக் கிராமங்களில் இருந் தும் தலைவிரி கோலமாக, வீடு வாசல் களையும்

உடைமைகளையும் அப்படியே போட்டுவிட்டு, அழுத விழிகளோடு அகதிகளாக வந்து சேரும் அபலைகளின் எண்ணிக்கை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

தனுஷ்கோடிப் பகுதி யிலும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறை யிலும் குடும்பம் குடும்பமாய்க் குவிந்த படி இருக்கின்றனர். நாம் அப்பகுதியை அடைந்தபோது, மிகத் தாழ்வான உயரத்தில் இந்திய நேவி விமானம் ஒன்று வட்டமடித்தபடி இருந்தது.

கரையில் நின்றவர்களெல்லாம், 'அதோ ஒரு படகு தெரியுது,' 'இந்தப் பக்கம் ரெண்டு வருது' என்று பரிதாபமாய்க் கூவியபடி, பரபரப்புடன் இருந்தனர். சற்று நேரத்தில், கருவட்டம் படிந்து மிரண்ட விழிகளோடு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களும் கைக் குழந்தைகளும் பச்சிளம் பாலகர்களுமாய்க் கரையேறித் தள்ளாடி மணலில் விழுந்தனர். ஏற்கெனவே வந்து சேர்ந்த தெரிந்த முகங் களைப் பார்த்ததும், பேச வார்த்தைகளின்றி வெடித்த குரலில் கதறி அழுததைப் பார்த்த போது, ஓ... எவ்வளவு கொடூரமானவை! பார்க்கச் சகிக்காமல், அருகில் நின்ற போலீஸ்காரர் பக்கம் திரும்பியபோது, அவர் கண்களிலும் நீர்! அவர் அதைச் சமாளிக்க ஆகாயத்தை வெறித்தபடி அண்ணாந்திருந்தார். கரையில் நின்ற அதிகாரிகள், படகுகளில் வந்தவர்களைப் பதிவு செய்யும் 'மகாவீர் தர்மசாலா' சத்திரத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர்.

ஊரையே ராணுவம் வளைத்துத் தீ வைப்பதை யும், துடிதுடிக்க இளைஞர்களைச் சுட்டு முச்சந்தி யில் டயர்களைப் போட்டுத் தீ வைப்பதையும் நேரில் பார்த்தவர்கள் இன்னும் அந்த மிரட்சி யிலிருந்து விடுபடாமல் அரண்டுபோயிருந்தனர்.

பாலஸ்தீனத்திலும் வியட்நாமிலும் நடந்த வெறியாட்டமெல்லாம் தோற் றுப்போகும் அளவுக்கு இலங்கையில் கொலை வெறி தலைதூக்கி நர்த்தன மாடுவது ஒவ்வொருவரின் நடுங்கிய குரலிலும் எதிரொலிக்கிறது.

எனட்டாவிலிருந்து வந்துள்ள 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயதுச் சிறுமி மஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவள் மழலையில் மிரண்டு மிரண்டு சொல்கிறாள்... ''நான் இஸ்கூலுக்குப் போகும்போது ஜீப்பில் ஆமி(ஆர்மி) வந்தது. அப்பம்மா, நான் எல்லாம் ஒரு இடுக்கில் ஒளிஞ்சு கொண்டம். புத்தகப் பைகளோட வந்த என்ட பொடியன்களைச் சுட்டார்கள். மாரெல்லாம் ரத்தம். கீழே கிடந்த பொடியன்கள் கால் மேலே ஜீப் ஏறிப் போச்சு! சடசடன்னு சத்தம் கேட்டுச்சு. நான் கண்கள மூடிக்கிட்டன். அப்புறம் நான் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன். பள்ளிக்கும் போறதில்லை. வீட்டில் சாப்பிட எதுவும் இல்லாமல் பட்டினியாக் கெடப்போம். எப்பவாவது அம்மா சமையல் பண்ணும். அப்ப வெடிச் சத்தம் கேட்கும். புறக் கடை வழியா எல்லாம் காட்டுக்குள் ஓடிப் போய்ப் படுத்துக்கொள்வம். காட்டுக்குள் ஆமி வராது. அங்க டைகர் அங்கிள்ஸ் இருப்பாங்கன்னு பயம்.

ஒருநாள், அடம்பல்ல தமிழாள் களைச் சுட்டு, பொணங்களை எங்க வீட்டு வழியா லோரிகளில் ஏற்றி வந்தார்கள். லோரிகள் போன பாதை எல்லாம் சொட்டுச் சொட்டா ரத்தம் கிடக்கும். நான் இனி அங்கு போகமாட்டேன். என் புத்தகங்கள், நோட்டெல்லாம் கொண்டு வந்திட்டன். சிங்களப் பிள்ளையள் எங்களப் பார்த்தால், தமிழ்ப் பிள்ளையளெண்டு கதைக்காதுகள்...'' என்று கைகளை விரித்து மஞ்சு சொல்லிக்கொண்டிருந்தபோது, உதடுகளும் விரல்களும் நடுங்கியபடி இருந்தன.

இரண்டு மாதக் கைக் குழந்தையுடன் அப்போதுதான் படகிலிருந்து இறங்கிய புனிதம் தலைவிரி கோலமாய் தலையிலும் உடம்பிலும் மணல் துகள் படிய வந்து நின்றார்.

''ஐயோ, ஆண்டவனே! நாங்கள் பட்ட கொடுமை சொல்ல ஆயுள் போதாது. எங்களத்த வயசுக் கொமருகளை (பெண்களை) ராணுவம் தூக்கிக் கொண்டு போய்க் கெடுத்து நாசம் பண்ணுகிறது. எங்கள் வீட்டைச் சுற்றி 15 பேரை இப்படி நாசம் பண்ணினார்கள். என் தோழி ஒருத்தி அவமானத்தில் செத்துப் போனாள். என் அண்ணனைப் பிடரியில் அடித்து ராணுவம் இழுத்துப் போனது. என்ன ஆச்சோ தெரியலை'' என்று அவர் சொல்லும்போது வார்த்தைகள் உடைந்து, அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

தாழ்பாடு பி.ஜஸ்டீன் சொல் லும்போது... ''எங்கள மீன் பிடிக்க விடமாட்டாங்க. எத்தனை நாளைக்குப் பயந்துகொண்டு கிடப்பம்? 'தேடுதல் வேட்டை' என்று சொல்லி, விடுதலைப் புலிகளைப் பிடிப்பதாகச் சொல்லி அப்பாவிகளைச் சுட்டுக் கொல்கிறார்கள். கொள்ளையடிப்பதற்கும் கற்பழிப்பதற்கும்தான் இவர்கள் 'தேடுதல் வேட்டை' என்று சொல்லி ஊருக்குள் இறங்குகிறார்கள். மொத்தம் 500 பேர் வரை ஜீப்புகளிலும் ராணுவ வண்டிகளிலும் வருவார்கள். வந்து, ஊருக்கு அப்பால் வண்டிகளை நிறுத்தி விட்டு, 300 பேர் ஊரைச் சுற்றி வளைத்துக்கொள்வார்கள். மீதம் இருப்பவர்கள் ஊருக்குள் நுழைந்து கொள்ளையடிப்பார்கள். 'பாம்' வைப்பார்கள். யாரும் தப்பி ஓட முடியாது. பிணத்தையும் யாரும் போய்த் தூக்கக்கூடாது'' என்றார்.

இப்படி சோகக் கதைகளுடன் ராமேஸ்வரத்துக்கு வந்து சேர் பவர்கள், அங்கிருந்து மண்டபம் கேம்ப்புக்கு அழைத்து வரப்படு கிறார்கள். மண்டபம் முகாமில் நாம் நுழைந்தபோது, மருத்துவப்பணி படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கே தன் மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார் டாக்டர் செல்வ மகேந்திரன். விடுதலைப் புலிகளுக்கு மருத்துவம் பார்த்ததாகக் காரணம் சொல்லி அவரைக் கைது செய்துகொண்டு போய்ப் படாதபாடு படுத்தியுள்ளார்கள்.

''ஐந்தரை அடி நீளம், ஒன்பதடி அகல அறைக்குள் பத்துப் பதினைந்து பேரைப் போட்டு அடைத்து வைப் பார்கள். ரப்பர் பையில் மணலை நிரப்பி முதுகுத் தண்டில் அடித்தார்கள். நெருப்பால் சுட்டார்கள்'' என்று கூறி, காயத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த அவரின் ஐந்து வயதுப் பெண் குழந்தை சுபத்ரா 'வீல்' என்று அலறிக்கொண்டு ஓடிவந்து தன் தாயின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். டாக்டரின் மனைவி பதறிப் போய், ''என்ட மகளே... என்ன விஷயம்?'' என்று கேட்கவும், ''ஆமி... ஆமி வருது!'' என்று அரண்டு போய், நம் காவல்துறை ஜீப்பைக் காட்டியது. ''பயப்படாதே! இது சிங்கள ஆமி இல்லே. உன் அங்கிள்ஸ்! துவாக்கா (துப்பாக்கி) இல்ல, பார். நீ போய் பயப்படாமக் கதைக்கலாம்'' என்று சொல்லியும், சுபத்ரா நம் போலீஸை மிரண்டு மிரண்டு வெறித்தபடி இருந்தாள்.

நாளுக்கு நாள் பாரத மாதாவின் பாதத்தின் அடியில் புரையோடிக் கொண்டிருக்கும் இந்தப் புண் எப்போது, எந்தச் சிகிச்சையால் ஆறும்?

Comments