இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக பிரசாரக்களத்தை இலங்கை நெருக்கடி தொடர்பிலான சொற்போர் கணிசமானளவுக்கு ஆக்கிரமிக்கப் போகிறது என்பதற்கான சகல அறிகுறிகளையும் காணக்கூடியதா இருக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக திராவிட இயக்கக் கட்சிகளின் தலைவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் தங்களது அரசியல் எதிரிகளுக்கு எதிரான பிரசாரங்களுக்காக அதனால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பார்க்காமல் பயன்படுத்தும் ஒரு விபரீதப் பண்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களுடன் சம்பந்தப்பட்ட இலங்கையின் தற்போதைய நெருக்கடியும் கூட அதற்கு விதிவிலக்கானதாக இருக்கவில்லை என்பதுதான் எமக்குப் பெரும் கவலையைத் தருகிறது.
தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபட்ட விவகாரங்களை தங்களது பாரம்பரிய அரசியல் வன்மத்தின் அடிப்படையிலான உணர்வுகளுடன் நோக்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றே நாம் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வந்திருக்கிறோம். சகல கட்சிகளும் ஒருமித்துக் குரல் கொடுக்கக்கூடிய சூழ்நிலை தோன்றவேண்டுமென்பதே எமது வேண்டுதலாகவும் இருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்களுடனான ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு முன்னெடுக்கப்படுகின்ற போராட்ட இயக்கங்களில் தமிழகக் கட்சிகளிடையே காணப்படுகின்ற வக்கிரத்தனமான அரசியல் முரண்பாடுகள் பிரதிபலிப்பதன் விளைவாக தமிழக மக்களின் உணர்வுகளும் கூறுபோடப்படுகின்றன. இதை தமிழக தலைவர்கள் விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்று நாம் நினைக்கவில்லை. விளங்கிக் கொண்டும் கூட விசித்திரமான போக்கில் செயற்படுவதுதான் தமிழக அரசியலின் தனித்துவமோ என்னவோ தெரியவில்லை.
அண்மைக்காலமாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இலங்கை நெருக்கடி தொடர்பில் தங்களுக்கிடையே தீவிரமான அறிக்கைப் போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைகளில் எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக உரத்துக்குரல் கொடுத்தவர்கள் தாங்களே என்றும் போராட்டங்களை நடத்தியவர்கள் தாங்களே என்றும் ஒவ்வொருவரும் உரிமை கோருவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் மற்றையவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்று பரஸ்பர குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இவ்வாரம் தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் எஸ்.ராமதாஸுக்கும் இடையே இடம்பெற்ற சொற்போரில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிகவும் வெறுக்கத்தக்கவையாகும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அணியிலே இருக்கிற டாக்டர் ராமதாஸ் போன்ற தளகர்த்தர்கள், சேனாதிபதிகள், வீராதிவீரர்கள், சூராதிசூரர்கள், ரணரங்க மார்த்தாண்டர்கள் முரசம் முழங்க, பேரிகைகொட்ட கள்ளத்தோணியில் என்றாலும் ஜெயலலிதாவையும் அழைத்துக்கொண்டு இலங்கைக்குப் போய் ராஜபக்ஷவை வென்றுவிட்டு வரட்டுமே என்று கலைஞர் கூறியிருக்கிறார்.
இதற்குப் பதில் அளித்த டாக்டர் ராமதாஸ் முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் கள்ளத்தோணியில் படையெடுத்து போகுமாறு கேட்டிருப்பது எந்த அளவிற்கு அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியலமைப்புக்கு உட்பட்டது என்பதை சட்டவல்லுநர்கள்தான் விளக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார். தமிழக முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு போதிய நெருக்குதல் களைக் கொடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு டாக்டர் ராமதாஸ் தெரிவித்த கருத்துகளுக்கு பதில் அளிக்கும்போது கலைஞர் கருணாநிதி தனது பழுத்த அரசியல் அனுபவத்திற்கு கிஞ்சித்தும் ஒவ்வாத முறையில் கள்ளத்தோணியில் படையெடுத்துக்கொண்டு போகட்டுமே என்று வசனம் எழுதுகிற அளவுக்கு தன்னைத் தரம் தாழ்த்தியிருக்கக் கூடாது என்பது எமது அபிப்பிராயம்.
தேர்தல் நெருங்குகிற வேளையில் ஏற்கனவே வெளியிட்டவற்றையும்விட சூடான அறிக்கைகளும் பதில் அறிக்கைகளும் தமிழக அரசியல் தலைவர்களிடம் இருந்து வரலாம். பிரசார மேடைகளிலும் முழக்கங்கள் கேட்கலாம். ஆனால், இலங்கைத் தமிழர்கள் இவர்களிடம் எதிர்பார்ப்பது அடுக்கு வசனங்களையோ, வார்த்தை ஜாலங்க ளையோ, வசைபாடல்களையோ அல்ல.
தேர்தல் பிரசாரங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒரு முக்கிய சர்ச்சையாக்கினால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை தமிழக தலைவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். தமிழகக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுடனோ அல்லது தோல்விகளுடனோ முடிந்துவிடுகின்ற பிரச்சினையல்ல இது. மிகவும் கவலை தருகின்ற விடயம் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக மக்கள் வெளிக்காட்டுகின்ற உணர்வுகளுக்கு நிகரானதாக அரசியல் தலைவர்களின் அணுகுமுறைகளோ செயற்பாடுகளோ இல்லை என்பதுதான்.
ஒன்றுமட்டும் உண்மை. தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியுமே இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை முற்றுமுழுதாகக் கைவிட்டு அரசியல் செய்ய முடியாத அளவிற்கு தற்போது சூழ்நிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் வீண் போகாதிருப்பதை உறுதி செய்யக்கூடிய அளவுக்கு தமிழகத் தலைவர்கள் மத்தியில் நிதானமும் தூரநோக்கும் தேவை!

Comments