இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு லோகசபைக்கு அடுத்த மாத மத்தியில் பொதுத்தேர்தல் ஆரம்பமாகி றது. அதில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் நிய மனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு நிர்ணயிக்கப் பட்ட நாள்கள் நெருங்கிவிட்டன. அதனால் அரசியல் கட்சிகள் தமக்குள் கூட்டணி வைத்து வெற்றி பெறுவதற் கான ஆயுத்தங்களை ஆரம்பித்துள்ளன.
ஒரு கட்சி தேவைப்படும் கூடுதல் ஆசனங்களை ஒரு கட்சியே பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் காலம் இப்போது இந்தியாவிலும் இல்லாமற் போய்விட்டது. கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட மத்திய அரசே புது டில்லியில் ஆட்சி நடத்தும் காலம் பல வருடங்களுக்கு முன்னரே வழமையாகி விட்டது.
மேலும், இந்தியப் பொதுத் தேர்தலில் பலம் வாய்ந்த இரண்டு பிரதான அணிகள் மோதும்நிலை மாறி இப்போது மூன்றாவது அணி ஒன்றும் பிறப்பதற்கான வாய்ப்பிருப்பதாக அவதானிக்கப்படுகிறது.
வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் பணி நேற்றே சில மாநிலங்களில் ஆரம்பமாகிவிட்டது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டதாக, வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் திகதி ஏப்ரல் 24 ஆம் திகதி வரை நீளுகிறது. தேர்தல் வாக்களிப்பும் ஏப்ரல் 16 ஆம் திகதி தொடங்கி மே 13 ஆம் திகதிவரை நடைபெறும். மே 16 ஆம் திகதி வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் வெவ்வேறு நாள்களில் வெளியிடப்படும். இந்தியாவின் மத்திய அரசாங்கம் 15 ஆவது நாடாளு மன்றம் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் கூடும்.
ஆகையால், அகன்று பரந்த இந்தியாவின் நான்கு திக்குகளிலும் திசைகளிலும், சுமார் ஒன்றரை மாதங் களுக்குத் தேர்தல் சூட்டின் அனல் வீசப்போகிறது.
வேறெந்த இந்தியத் தேர்தல்களையும் விட, 15 ஆவது லோக சபைக்கான தேர்தல்களில் ஈழத்தமிழர் களின் பார்வை மே மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலிலேயே விழும் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.
முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ஈழத்தமிழர் விவகாரத்தை வாக்கு வங்கியாக்க வேண்டிய தேவை, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்பட் டுள்ளது. எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளராயினும் கொதித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அதிக அக்கறையும், ஈடுபாடும், ஆதரவும் காட்டுகிறாரோ அவரது வாக்குப்பலம் கனமாகி அவர் புதுடில்லி நாடாளு மன்றத்தில் ஆசனத்தைப் பிடித்துக்கொள்ள இயலுமென்ற தேர்தல் களநிலைமை தமிழகத்தில் உருவாகிவருகிறது.
அந்த அளவுக்கு,வன்னித் தமிழ் மக்களின் மனிதப் பேரவலம் குறித்து தொப்புள்கொடி உறவுகளின் (எம்.ஜி.ஆரின் வாசகத்தில் இரத்தத்தின் இரத்தங் களின்) இரக்கத்தின் பால், கவலை மேலீட்டினால் எழுந்துள்ள ஆதரவு உணர்வுகளைத் தமக்கு ஆதாய மாக்க, வாக்குப் பெருக்கத்துக்கான குடுகுடுப்பை யாக்க ஏற்கனவே தமிழக அரசியல் தலைவர்கள் முட்டி மோதுகின்றனர். அவர்களின் அரசியல் போட்டிப்போருக்கு, ஒருவரிடமிருந்து மற்றவர் தம்மைத் தற்காத்துக் கொள்ளகை யில் ஏந்த வேண்டிய கேடயமாகவும் வன்னி மக்களின் மனிதப் பேரவலம் வார்க்கப்பட்டு விட்டது.
வட இந்திய அரசியல் தலைவர்கள் ஈழத் தமிழர் களின் விவகாரத்தைத் தமது குப்பைத் தொட்டிகளுக் குள் போட்டு விட்டார்கள் என்று இங்குள்ளோரின் நெஞ் சங்கள் கனக்கிறது என்றால்
தமிழக அரசியல் தலைவர்கள் தமக்குள் கன்னை பிரித்துக் கொண்டு எதுவுமே சாதிக்க, ஈட்ட முடியாதவாறு சிதறுண்டு போகும் படலம் விரிவதை இப்போது தூரத்தே துயரத் துடன் பார்க்க முடிகிறது.
அணி மாறுதல், தொகுதிப் பங்கீடு என்ற தேர்தல் புலத்தின் "நாகரிகம்" வேறெந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் ஆரம்பத்திலேயே வீச்சுப் பெற்றிருக்கிறது.
அந்தக் களத்தில், ஈழத்தமிழரைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க முடியாமல் கையறு நிலைக்கு வந்து தமிழ்ச் சொற்களால் சிலம்படி காட்டும் கருணாநிதியும்
ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையில் எடுக்காதிருப் பின், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உடைத்துவிட முடியாது என ஊகித்து, உணர்ந்து உண்ணா விரதம் இருந்த ஜெயலலிதாவும்
மத்திய அரசைக் கைப்பற்றப்போகும் ஏதோ ஒரு அணி யில் சேர மூச்சு வாங்க வாங்கக் குதித்திருக்கிறார்கள்!
இந்த இரண்டு அணிகளில் எந்த அணியோடு ஒட்டிக்கொள்ளலாம், பேரம் பேசலாம் என்று போட்டி போடுகின்றனர் ஏனைய தமிழகத் தலைவர்களும், கட்சியினரும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டியிருந்து சலித்து, வெறுப்படைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இராமதாஸூம்
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரே அணியில் நின்ற திருமாவளவனும், இராமதாஸூம் எதிரும் புதிருமாகப் முட்டி மோதும் நிலை ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்ற ஆசனங்களைப் பிடித்து விடவேண்டும் என்ற நப்பாசையில் இன்னும் எத்தனையோ முட்டி மோதல் களும், அணி மோதல்களும் அரங்கேறப் போகின்றன.
தமிழக மக்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை மறந்துவிட மாட்டார்கள்.
ஆனால் தமிழக அரசியல் தலைவர் கள்...தங்கள் குத்துக்கரணங்களையும், குத்து வெட்டு களையுமே அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். தமிழகத் தலைவர்களின் அரசியல் அசிங்கம் நாளாக ஆக நாறும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்....!
-
Comments