அதுவும் ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையானது விடுதலைப் புலிகளின் மீது மட்டுமல்லாது இலங்கை இராணுவத்தின் மீதும் போர்க்குற்றம் சுமத்தும் வகையில் அமைந்துவிட்டமையானது அரசாங்கத்தை பெரிதும் பாதித்து விட்டதாகவே தெரிகிறது. ஏனெனில் ஐ.நா.மனித உரிமைகள் பேரணியின் அமர்வில் இம்மாத ஆரம்பத்தில் இலங்கை நிலைவரம் தொடர்பாக அறிக்கை விடுத்திருந்த இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அதன் பின்னர் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து நிலைமைகளையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிவாரண உதவிகள் பற்றியும் எடுத்துக்கூறிய பின்னரும் கூட நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தால் இவ்வாறான அறிக்கை விடப்பட்டிருப்பதே அரசாங்கத்தை ஒரு கணம் நின்று யோசிக்கவைத்திருக்கக் கூடும்.
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.உள்ளிட்ட சர்வதேசம் அறிக்கைகளை விடுவது என்பது புதிதல்ல என்றாலும் கடந்த சில மாதங்கள் போல் தொடர் சங்கிலியாக முன்னெப்போதும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்திற்கு தற்போதைய இலங்கை நிலைவரம் அவர்களை திருப்பிப் பார்க்கச் செதிருக்கிறது.
அதாவது ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராயப்பட வேண்டுமென ஏனைய நாடுகள் வலியுறுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த மாதமும் இவ்வாறான பேகரிக்கையொன்று விடுக்கப்பட்ட போதும் அது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் எதிர்ப்பால் நடக்கவில்லை. எனினும் பாதுகாப்பு சபையின் அமர்வில் "ஏனைய விடயங்கள்' என்ற தலைப்பின் கீழ், இலங்கையின் நிலைவரம் பற்றி மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுச் சென்றே அவர் இந்த அறிக்கையை விடுத்திருந்தார்.
அதன் பின்னர் மீண்டும் இலங்கை விவகாரம் தொடர்பாக ஏனைய விடயங்கள் என்ற தலைப்பின் கீழ் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆராயப்பட வேண்டுமென ஆஸ்திரியா, மெக்ஸிக்கோ, கோஸ்ராரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இலங்கை விடயம் உள்விவகாரம் என சீனா இதற்கும் எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் போதிலும் இதில் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகளின் 5 உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி அறியப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் இதுவரை இலங்கை நிலைமைகள் பற்றி எந்தவொரு அறிக்கையேதும் விடுத்திராத ஆஸ்திரியா, மெக்ஸிக்கோ, கோஸ்ராரிக்கா போன்ற நாடுகள் கூட இன்று இலங்கை விவகாரம் பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபையிலேயே பேச வேண்டுமென வலியுறுத்துமளவுக்கு நிலைமைகள் சென்றிருப்பது குறித்து இலங்கை அரசாங்கத்தின் கவனம் செல்லாமல் இருந்திருக்க முடியாது.
ஐ.நா., அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான் என பல நாடுகளும் பல நாடுகளின் அங்கத்துவம் கொண்ட அமைப்புகளும் இலங்கை நிலைவரம் குறித்து ஆழ்ந்த கவலைகளை வெளியிட்டு வருவதுடன் பொது மக்கள் இழப்பை தவிர்க்க உடனடி போர் நிறுத்தத்துக்கும் இலங்கை அரசாங்கத்தையும் விடுதலை புலிகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மையில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக தொலைபேசி மூலமே தொடர்பு கொண்டு இலங்கை நிலைவரங்கள் பற்றி கேட்டறிந்திருந்ததுடன் பொது மக்களின் பாதுகாப்புக் குறித்தும் தங்களது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர்.
அது மட்டுமல்லாது ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பேசியிருக்கும் பிரிட்டன், சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் வடக்கே இடம்பெறும் மோதல்கள் இடம்பெற்றுவரும் பிரதேசங்களில் மக்களின் மோசமான நிலைமைகள் குறித்து கடும் ஆதங்கம் வெளியிட்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாது இலங்கை நிலைவரம் மிக நெருக்கடியானதாகவும் அபாயகரமானதாகவும் இருப்பதாக கவலை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகளுக்கான ஆணையாளர் பெனிற்றா பெரேரா வோல்ட்னர், விரைவில் ஒன்றியத்தின் அரசியல் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அத்துடன், யுத்த நிறுத்தத்துக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசாங்கமோ விடுதலைப் புலிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இவை மட்டுமல்லாது நாளாந்தம் இவ்வாறான அழுத்தங்களுடன் கூடிய பல அறிக்கைகள் மேற்குலக நாடுகளினால் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும நிலையில் அரசாங்கம் சற்றுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வது போன்ற கருத்துகளையும் வெளியிடுகிறது.
அண்மையில் கூட, முன்னணி சர்வதேச அமைப்புகளுக்குள் புலிகள் ஊடுருவியிருப்பதாக அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியிருந்தார். அரசாங்கம் சார்பில் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டாலுமே சர்வதேச சமூகத்திடமிருந்து வரும் அழுத்தங்கள் வெளியிடப்படும் அறிக்கைகள் எம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் எப்போதும் பதிந்தே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில், இவ்வளவு காலமும் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவந்த இந்தியாகூட தற்போது இலங்கைத் தமிழ் மக்களின் துன்பம் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாகவும் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது எனவும் கருத்துகள் வெளியிட்டு தனது போக்கை மாற்றிக் கொண்டிருப்பதால் இலங்கை அரசாங்கத்துக்கு அதிலும் சிறிய மனத்தாக்கல் இருக்கலாம். எனினும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் இவ்வாறான நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடுமென இலங்கை சற்று நிம்மதியடையக் கூடும்.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தும் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு வலியுறுத்தியிருக்கிறார்.
பொதுமக்களின் இழப்பை குறைத்துக் கொள்ளவென சர்வதேசம் விடுக்கும் போர் நிறுத்த வேண்டுகோள்களைத் தொடர்ந்தும் நிராகரிப்பதில் உறுதியாக இருக்கும் இலங்கை அரசாங்கம் உலக நாடுகளின் செயற்பாடுகளில் விசனமடைந்திருப்பதையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்கிறது. அண்மையில் கூட பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உபதேசம் செயும் உலக நாடுகள் விடுதலைப் புலிகள் மனித உரிமைகளை மீறிச் செயற்படுவது பற்றி மட்டும் ஏன் பேசுவதில்லையென்று கேள்வி எழுப்பியிருந்தார்.
எனவே, சர்வதேச சமூகத் திடமிருந்து தனக்கு சாதகமான விடயங்களை மட்டுமே எதிர்பார்க்கும் அரசாங்கம் அதே சர்வதேச சமூகம் விடுக்கும் வேண்டுகோள்களை நடைமுறைப்படுத்த மட்டு மல்லாது பரிசீலிக்கக்கூட தயாரில்லையென்ற கடும் போக்கில் நடந்து கொள்கிறது. எந்தவொரு அழுத்தத்திற்கும் நாங்கள் அடிபணியப் போவதில்லையென அடிக்கடி கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு சர்வதேச அமைப்புகளினதும் உலக நாடுகளினதும் அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களின் தாற்பரியங்கள் புரியாமல் இருக்க வாப்பில்லை.
எவ்வாறிருப்பினும், மேற்குலக நாடுகள் பொதுவாக ஐரோப்பிய நாடுகளே இலங்கை நிலைவரம் பற்றி விசனம் வெளியிட்டு வரும் நிலையில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கையின் நிலைப்பாடுகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டிருக்கிறது. அதேபோல் இந்தியாவும் உள்ளார்ந்த ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றபோதிலும் அங்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் காரணமாக இந்திய அரசாங்கம் இலங்கை விவகாரம் தொடர்பில் வெளிவாரியான ரீதியில் சற்று மாறுபட்ட நிலைப்பாட்டை (தற்காலிகமாக) கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவது போல பிராந்திய நாடுகளின் ஆதரவுடனேயே இலங்கை தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை அரசியல் நகர்வுகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதேநேரம், கடந்த ஒரு மாதகாலப் பகுதிக்குள் காயமடைந்தவர்களில் நூற்றுக் கணக்கானோர் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு (ஐ.சி.ஆர்.சி. அனுசரணையுடன்) கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வன்னியில் அரசாங்கம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அறிவித்திருக்கும் பாதுகாப்பு வலயத்தின் மீது ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை கூறியிருப்பதை நிராகரித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாது வன்னியில் ஏனைய பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மீதும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் அதில் 2,800 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடுமென்றும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் சுட்டிக் காட்டியிருப்பதாகவும் நவநீதம்பிள்ளையின் அலுவலகம் விடுத்த அறிக்கையும் அமைச்சர் சமரசிங்கவால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக் கான உயர் ஸ்தானிகரின் இந்த புள்ளி விபரங்கள் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான இணையத்தளங்களில் வெளியான புள்ளிவிபரங்களை ஒத்ததாக இருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக் காட்டியிருந்த போதிலும், ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகராலயம் அதன் அறிக்கையில் உறுதியாக இருப்பதாக அதன் பேச்சாளர் ருபர்ற் கொல்வில்லே தெரிவித்திருந்தார்.
எனவே, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டிருப்பதை அமைச்சரே உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் ஏதோ ஒரு தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் வன்னியில் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் மறுத்துவிட முடியாதல்லவா?
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் என்ற பொறிக்குள் சற்று சிக்கியிருக்கின்றது என்பதை முற்றிலும் மறுத்து விட முடியாது. ஏனெனில் அரசாங்கத் தரப்பில் அதன் நடவடிக்கைகளுக்கு என்ன நியாயம் கூறப்பட்டாலுமே, ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மற்றும் உயர் ஸ்தானிகராலயம் போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஸ்தாபனங்களின் அறிக்கைகளை உலக நாடுகள் முற்றாக புறக்கணித்து விடமாட்டா என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
Comments