இது தொடர்பாக சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் இருந்து நேற்று வெள்கிக்கிழமை கலாநிதி நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றது. பொதுமக்கள் தங்கியுள்ள இதர இடங்கள் மீதும் குண்டுகளை வீசி வருகின்றது.
அப்பாவி தமிழர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச்செல்ல முயற்சிப்பவர்களை சுட்டுக்கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர்கள் சிறுவர்களை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய செயல்கள், அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானவை. இவை போர் குற்றங்களாகவும் கருதப்படும்.
இடம்பெற்று வரும் மோதல்களில் கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 800 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.
7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்தவர்கள் ஆவர். நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இவ்வளவு குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.
இதே ரீதியில் போர் நீடித்தால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை பேரழிவு நிலைக்கு சென்று விடும் என்று அஞ்சுகின்றோம். உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடும், மனிதாபிமான சூழ்நிலையை மேலும் சீர்குலைத்து விடும்.
எனவே, அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக, சிறிலங்கா இராணுவமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் இதர சுயாதீன அமைப்புக்களும் நிலைமையை துல்லியமாக கண்டறிய சிறிலங்கா அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments