தமிழீழத்திற்கான தேவையும் , சாத்தியக்கூறுகளும்.!

யூதர்களுக்கு இசுரேல் சாத்தியமென்றால் , இந்தோனேசிய கிறித்தவ மக்களுக்கு கிழக்கு திமூர் சாத்தியமென்றால் , கொசாவோ சாத்தியமென்றால் ஏன் தமிழர்களுக்கு ஈழம் சாத்தியமில்லை என்ற கேள்வி வெகு ஆழமானது.

இந்தக் காலகட்டத்திற்கு தேவையானது. புலிகள் வீழ்ந்து விட்டனரோ என் ஐயத்திலிருக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கும் , கையாலாகதவர்களாக தம்மைக் கருதிக்கொண்டு புலம்பும் தாய்த்தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த சிந்தனையைத் தோற்றுவிக்க வல்ல கேள்வி அது.

இன்றைய உலகத் தமிழர்களின் ஒரே சாத்தியமான குரலான தாய்த்தமிழக மாநில அரசு தனது கடமையைச் சரிவரச் செய்கிறதா என்று ஆராய்வதும் , தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அளவிற்கு அது திறனுடன் இருக்கிறதா என்று பார்ப்பதும் தமிழீழத்திற்கான தேவையை உறுதி செய்ய உதவும்.!

***

எல்லோரையும் போல , நானும் கூட கலைஞரைப் பற்றிக் குறைகூறிக்கொண்டுதான் இருக்கிறேன் , ஒரு மாநில முதல்வர் என்ற அளவிற்கு கூட அவர் முயற்சிக்கவில்லையே என்று. ஆனால் நிதர்சனம் என்று பார்த்தால் , மீறிப் போனால் கலைஞரால் என்ன செய்து விட முடியும்.?

இந்திய அரசின் மேல் நம்பிக்கையற்று பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்தாலும் கூட இரண்டு மாதங்களுக்கு முன் அரசு கவிழ்ந்திருக்கும். அவ்வளவுதான். தனது மாநில ஆட்சியைத் துறந்திருந்தால் மீண்டும் தேர்தல் வந்திருக்கும். அவ்வளவேதான். காரணம் – அவருக்குள்ள அதிகாரங்கள் மிகவும் குறுகியவை. அவரால் மட்டுமல்ல , தேசிய அளவில் எந்தவொரு இந்திய மாகாணமுமே அந்த அளவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும்…அதற்கு மேல் இங்கே வழியுமில்லை.

இன்று அமெரிக்கா , ஐ.நா , செஞ்சிலுவைச் சங்கம் , நார்வே , ஐரோப்பிய ஒன்றியம் இவைகள் விடுக்கும் எந்த வேண்டுகோளையுமே மதிக்க மறுக்கும் இலங்கை அரசாங்கம் கருணாநிதியை மட்டுமா மதிக்கப்போகிறது???

இன்றைக்கு கலைஞரைக் குறை சொல்லும் அனேக உடன்பிறப்புக்கள் அவருடைய தமிழினக் காவலர் பட்டம் பறி போய்விடுமே என்ற கவலையில்தான் அவருக்கு வேண்டுகோள்களை வைத்துச் சலிக்கிறார்களே தவிர அவரால் கூட ஒன்றும் கிழிக்க முடியாது என்று தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். மக்கள்தான் குழம்பிப் போயிருக்கிறார்கள். அந்தக்குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத்தான் அவரவர் தமிழகத்தின் ஈழ ஆதரவு எழுச்சியை தனது எல்லைக்குட்பட்டவாறு உபயோகப்படுத்துகிறார்கள்.

அவரவர் அரசியல் ஆதாயத்தைத் தவிர ஒரு உபயோகமான காரியத்தையும் இந்த எழுச்சி செய்திருக்கிறது……..…அதென்ன?

மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் நிலையிலும் கூட தமிழர்களுக்கான நியாயமான உரிமைகளை தமிழுணர்வுள்ள ஒரு கட்சியாலேயே நிறைவேற்ற இயலவில்லை என்று கண்டுணர்ந்ததுதான் அது.! தற்போதைக்கு தமிழர் நலனையும் , உரிமையையும் பாதுக்காக்க வல்ல ஒரூ அமைப்போ , நாடோ , மாநிலமோ இன்று இல்லை என்பதை இங்கே நாம் தெளிவுற விளங்கிக் கொள்ள முடியும்.

***

தான் சார்ந்த ஒரு கூட்டம் , தான் சார்ந்த ஒரு ஊர் , தான் சார்ந்த ஒரு நகரம் , தான் சார்ந்த ஒரு நாடு , அதில் வாழ்வோர் என்னைச் சார்ந்தவர்கள் , அவர்கள் பேசும் மொழி என்னுடையது என்ற நோக்கிலேயே மனிதன் தனித் தனி தேசிய இனங்களாக பிரிந்து வாழத்துவங்கினான்.

அத்தேசிய இனங்கள் தான் பாரசீகனாகவும் , ஆரியனாகவும் , அரேபியனாகவும் , திராவிடனாகவும் , வெள்ளையனாகவும் , டூட்சிகளாகவும் , சாவளர்களாகவும் , கலிங்கர்களாகவும் , ஒஸ்ஸேத்தியர்களாகவும் , ஜார்ஜியர்களாகவும் , கிரேக்கர்களாகவும் மாற்றிற்று. அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு மொழியையும் நிர்மாணித்துக்கொண்டார்கள் , அல்லது ஒரு குறிப்பிட்ட மொழியினை பேசுபவர்கள் அவர்கள் தங்களை அம்மொழி பேசும் இனத்தவர்களாக அடையாளப்படுத்திக்கொண்டார்கள். இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் இதே அடிப்படையில்தான் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

நிற்க ,

இதைச் சொல்வதே எந்தவொரு தேசிய இனமும் ஒரு தனிப்பட்ட ஒரு நாட்டை கொண்டிருக்கும் போது அந்த இனம் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்….அப்படித்தான் இனங்களே உருவாகின, மனிதனின் பாதுகாப்பின்மை பற்றிய பயமே அவரவர்களுக்கென்று ஒரு குழுவினை உருவாக்க அடிகோலிற்று.


தமிழீழம்காலத்தின் கட்டாயம்…!

தமிழன் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாட்டை உருவாக்க முடியாதா? அதற்கான வசதியும் , வாய்ப்பும் இல்லையா??

இந்த இரு கேள்விகளுக்கான சரியான விடையைக் காண நாம் சற்றேறக்குறைய 60 ஆண்டுகள் பின்னோக்கி இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கட்டத்திற்கு செல்லுவோம்.

இரண்டாம் உலகப்போரில் போக்கிடமற்ற தேசிய இனமாக அறியப்பட்ட யூதர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்…..! ஹிட்லரால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட ஒரு சூழலில் அவர்களுக்கென்று ஒரு தனி இடம் / தனி பூமி தேவை என்ற நோக்கில் இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் இசுரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு அங்கு யூதர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

இன்றைய உலகச்சூழலை உற்று நோக்குகையில் இரண்டாம் உலகப் போர் காலத்தை விட முற்றிலும் வேறுப்பட்டதாக காட்சியளிக்கிறது. இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளும் , நேச நாடுகளும் ஒன்றுக்கொன்று சண்டையிட்ட அந்தக் காலம் உலக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நிகழ்வாகும். காலனி ஆட்சிகளின் காலத்தின் முடிவுகள் அரும்பத்தொடங்கியிருந்த காலமது.

யூதம் என்ற தனி தேசிய இனத்திற்கென ஒரு நாடு இருக்கப் போய்தான் இங்கே மும்பை நாரிமன் ஹவுசில் அகப்பட்ட ஒரு சில யூதர்களுக்காக அது இந்தியாவுடன் தொடர்ச்சியாக மும்பை நிலவரம் பற்றி விசாரித்தும் வந்தது. அங்கு கொல்லப்பட்ட ஒரு சில யூதர்கள் இந்திய கமேண்டோக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வெளிப்படையாக தெரிவித்தது.

இன்றும் உலகின் ஒரே ஆண் பிள்ளை நாடாக அது இருக்கிறது. தன் இன மக்கள் எங்கே தாக்கப்பட்டாலும் உடனே தன் எதிர்ப்பையும் , தேவைப்பட்டால் இராணுவ ரீதியிலும் பதிலடி கொடுக்கிறது.

ஆகவே , உலகளாவிய முறையில் தமிழர்களின் உரிமையை நிலை நாட்டவும் , தமிழர்களின் தேவையை உலகுக்கு உரத்துச் சொல்லவும் , எங்கெங்கு தமிழரின் உரிமைகள் பறிக்கப்படுகிறதோ அதையெல்லாம் தட்டிக்கேட்கவும் , சர்வதேச அளவில் அந்தப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லவும் , ஐ.நா போன்ற உலக அரங்குகளில் தமிழரின் குரல் வலுவாக ஒலிக்க உதவவும் தேசிய நாடு ஒன்று தமிழர்களுக்கு அவசியம் தேவை.

இங்கேதான் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் தமிழீழத்திற்கான ஆதரவை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனென்றால் தமிழனுக்கென்று ஒரு தேசிய நாடு ஈழத்தில் மட்டும்தான் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அந்தச் சாத்தியக்கூறுகளை அதிகரித்து தமிழீழத்தை உருவாக்கிட ஒவ்வொரு தமிழனும் தன்னால் இயன்ற அளவிலான பணிகளைத் தொடர்ந்து செய்திடுவதே நம்முன் உள்ள மிகப்பெரும் சவால். அதற்குமுன் இன்றைய இடியாப்பச் சிக்கலுக்கு மூல காரணம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே உடனடித் தேவை…..!

***

யூதர்கள் இரண்டாம் உலகப்போரில் எப்படி கொன்று புதைக்கப்பட்டார்களோ அதே போலத்தான் இன்று தமிழர்கள் வன்னியில் புதைக்கப்படுகிறார்கள்.

ஆனால் சில வித்தியாசங்களுண்டு……! அவை என்ன?

அன்று உலகம் இரு பிரிவுகளாக நின்று ஒரு பிரிவு மட்டுமே யூதர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கியது. ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமும் கூடி நின்று தமிழினப்படுகொலையை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

அன்று யூதர்களைக் காப்பாற்ற ஒருவருமே இல்லையே என்று நேச நாடுகள் நாஜிகளை எதிர்த்துப் போராடினார்கள். இன்று தமிழர்களுக்கு ஒரே ஆதரவான புலிகளையும் அழித்துவிடத் துடிக்கிறது மேற்குலகமும் மற்ற உலக நாடுகளும்.

ஏன்??

அன்று உலகளாவிய ஐ.நா போன்ற சமாதான அமைப்போ , மனித உரிமை அமைப்புக்களோ , உலக நீதிமன்றமோ இல்லை. இன்று அவைகள் இருந்தும் வாய்மூடி மெளன சாட்சிகளாக , இரக்கமற்ற கட்டிடங்களாக அந்த அமைப்புக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதைத்தான் ஒருசில தினங்களுக்கு முன் ஆப்பிரிக்க யூனியனும் ஆப்பிரிக்காவையே சுற்றி வரும் உலக நீதிமன்றம் இலங்கையைக் கண்டு கொள்வதே இல்லை என்று குற்றஞ்சாட்டியது.

ஏன்??

அன்று உரிமைகளுக்காக போராடியவர்கள் தியாகிகளாக்கப்பட்டார்கள். இன்று உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக தீவிரவாதிகள் ஆக்கப்படுகிறார்கள். தியாகிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஒரே வேறுபாடுதான் , ஜெயித்தவன் தியாகி ஆகின்றான் , போராடிக்கொண்டிருப்பவன் தீவிரவாதி ஆகிறான்.

நேற்றைய பகத் சிங்கும் , நேதாஜியும் , வாஞ்சிநாதனும் எப்படி ஆங்கிலேய அரசுக்கு தீவிரவாதிகளோ அதுபோலவே இன்று பிரபாகரன் இலங்கைக்கு தீவிரவாதி.. இன்றைக்கு புரட்சிநாயகர்களாக சித்தரிக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவையும் , சே குவேராவையுமே அவர்கள் தோல்வியைச் சந்தித்திருந்தால் உலகம் இவ்வளவு கொண்டாடியிருக்குமா என்பது கேள்விக்குறியே. ஆகவே வெற்றி பெற்றவர்கள் தான் இன்று உலகிற்கு நண்பர்கள்.!

கொசாவோவை தனி நாடாகப் பெற்றுத்தந்த மேற்குலகம் தமிழ் ஈழத்தை மட்டும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்………..

மிலோசெவிக்கை படுகொலையாளன் என்று சித்தரித்து உலக நீதிமன்றத்தில் நிறுத்திய சர்வதேச நீதி மன்றம் இன்று இராஜபக்சேவை தனது கூட்டாளி ஆக்கிக்கொண்டிருக்கிறது.

ஏன்???

மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் இந்தியா , இந்தியா , இந்தியா , இந்தியா என்பதுதான். ஆசியக் கண்டத்தில் சீனாவிற்கு நிகரான சக்தியொன்று வேண்டுமென்ற கோணத்திலேயே தெற்காசியப் பிரச்சினைகளை உலக நாடுகள் அணுகுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சந்தை தமது பொருட்களை விற்கத் தேவையென்ற நோக்கிலேயே உலகநாடுகள் இந்தியாவுடன் உறவைப் பேண விரும்புகின்றன.

ஆக , இந்தியாவின் நண்பனையே தனது நண்பனாக ஏற்றுக்கொள்ளும் மேற்குலகம் இன்று இந்தியாவின் புலிகளுக்கெதிரான நிலையை தமது நிலையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயர்களால் தைக்கப்பட்ட இந்தியாவின் தேசியத்தைக் காக்க தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. தமிழர்களின் போராட்டம் நசுக்கப்படுகிறது. அதுதான் நாம் இன்றைய சூழலின் உண்மை நிலவரம்.!

இன்றைய தமிழகத்தின் இந்திய நடுவண் அரசிற்கெதிரான போராட்டங்கள் கேலிக்கூத்தானவை. நமது உரிமைகளை பறிப்பவர்களிடமே எங்கள் உரிமைகளை மீட்டுத்தாருங்கள் என்று கதறுகிறோமோ அது எவ்வளவு முட்டாள்தனம்? எவர் தமிழர்களை கொன்றொழிக்கிறார்களோ அவர்களிடமே இனப்படுகொலை பதாகைகளை ஏந்தி அவர்களுக்குப் புரிய வைக்க கொடி பிடிக்கிறோமே அது வடிகட்டின பைத்தியக்காரத் தனம் இல்லை என்ற தமிழுணர்வாளர்களின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.

திசை திருப்பப்படும் போராட்டக்களம்.!

இந்திய தேசியத்தின் அங்கமான தாய்த் தமிழக மக்கள் திக்குத் தெரியாமல் தமது சோதரர்களைக் காக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். ஆதங்கப்பட்டு நிற்கிறார்கள். அந்த ஆதங்கம்தான் இங்கு தீக்குளிப்புக்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அந்த இயலாமைதான் இன்று மாணவர்களின் தன்னெழுச்சியாக மாறிக்கிடக்கிறது.

ஈழத்தின் பாலான தமிழகத் தமிழர்களின் உணர்வு வழக்கறிஞர் , காவல்துறை மோதலால் திசை திருப்பப் படுகிறது. உண்ணாவிரத நாடகங்களால் பிரச்சினையின் தீவிரத்தைத் தணிக்க முயற்சிக்கப்படுகிறது. பிரணாப்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டும் , சோனியாக்களின் திடீர் நிவாரணங்களாலும் நமது ஓட்டுக்களைச் சூறையாட சூழ்ச்சி நடக்கிறது. இப்படி பொய்யானதொரு தேசியத்தைக் கிழிக்கும் சீமான்கள் இல்லாத இறையாண்மையின் பால் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.

அத்தகைய சூழ்ச்சிகளையும் , செப்படி வித்தைகளையும் , திசை திருப்பல்களையும் , நாடகங்களையும் தமிழன் பகுத்தாராய்ந்து புறந்தள்ள வாய்ப்புண்டா? பெரியாரின் பகுத்தறிவுத் துணையோடு அவன் இந்த ஓட்டரசியலையும் , சுயநல அரசியல்வாதிகளின் வேடத்தையும் கிழித்தெறிவானா?

பதில் என்னவோ தெரியவில்லை, ஒரு வேளை இந்த பாராளுமன்றத் தேர்தல் அதற்கான பதிலை வைத்திருக்கிறதோ என்னவோ….காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

***

புலிகள் உடனடியாக ஒரு பெரிய போர் வெற்றியைத் தராத நிலையில் , சர்வதேசமும் புலிகளுக்கெதிரான ஒரு நிலையை எடுத்து விட்ட சூழலில் தமிழீழம் சாத்தியமா ? ஆம் சாத்தியம் தான். காரணம் எந்தவொரு விடுதலைப்போரும் உரிமைகள் மறுக்கப்படுவதனால் மட்டுமே உருவாகிறது. அந்த உரிமைகளை மீட்டுத்தர வாய்ப்பில்லாத போது அப்போராட்டம் முடங்கிப் போய்விடுவதென்பது இயலாதது.

அங்கே போராட உணர்வுள்ள இளம்புலிகள் இருக்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழக மக்கள் செய்யக்கூடியது என்ன???? போராட்டக்களத்தில் நிற்கும் புலிகளுக்கான அங்கீகாரத்தை இந்தியாவிடமிருந்து பெற்றுத்தர முயல்வதே….!

எப்படி?

தமீழீழத் தமிழர்களின் ஒரே வலுவுள்ள பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தான் என்று இந்தியாவை அங்கீகரிக்கச் செய்வது !

புலிகளுடன் சமாதானம் பேச வசதியாக அவர்களின் மீதான தடையினை நீக்க வலியுறுத்துவது…!

தமிழீழமே தீர்வு என்று இந்தியாவிடம் இடித்துரைப்பது…..!

தமிழர்களின் நலனை புறக்கணிக்காமல் இந்திய நடுவண் அரசு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்ற வலியுறுத்துவது….!

தொடர்ந்து மத்திய அரசுகள் நமது நலன்களை புறக்கணிக்குமானால் மத்திய அரசின் நிறுவனங்களை தமிழகத்தில் செயல்பட விடாமல் முற்றுகைளாலும் , ஆர்ப்பாட்டங்களாலும் முடக்குவது…..!

இவைகள்தான் தமிழகத்தில் தமிழன் செய்யக் கூடியவை…….செய்ய இயன்றவை…. நமது தார்மீகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். தமிழீழத்திற்கான ஆதரவினை வழங்குவோம்.! நமது ஆதரவு முழக்கம்தான் , தமிழர்களின் அழுகுரலுக்கான விடிவுக்கு வழி சமைக்கப் போகிறது.…..!

அந்த விடிவுகாலமென்பது கண்டிப்பாக ஒருநாள் நமது உரிமைகளை மீட்டுத்தர தமிழீழம் உருவாகும் காலமேயாகும். அப்படிப்பட்டதொரு தமிழீழம் பெயரளவிற்கு மட்டுமே தமிழ்நாடாக இல்லாமல் உண்மையான தமிழனின் நாடாக இருக்கும்…..!!


உரிமை இழந்தோம் ,

உடமையும் இழந்தோம்…!

உணர்வை இழக்கலாமா??

Comments