மறைக்கப்பட்ட மலையகத் தமிழரின் வரலாறு

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்னை எழும் போதெல்லாம் நம்மில் சிலருக்கு இலங்கையின் இறையாண்மை பற்றிய கவலை பெருக்கெடுக்கத் தொடங்கிவிடுகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் இது முக்கியமானதுதான்.

அரசாங்கத்துக்கு இறையாண்மை என்பது எத்தகைய முக்கியமானதோ அதைவிடக் கூடுதலான முக்கியத்துவம், அதன் கீழ் வாழும் மக்களின் வாழ்வுரிமைக்கும் தரப்பட வேண்டும். ஆனால் இன்றைய இலங்கையின் இறையாண்மை, வடக்கில் குண்டுகளைப்
பொழிந்து, தமிழ் மக்களுக்கு எதிராகக் கொலைக்களம் அமைத்துச் செயல்படுகிறது.

கிழக்கில் தொன்மையான தமிழ் மக்களின் வாழ்விடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்கள மக்களின் குடியேற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து மலையகத்துக்குக் காலனிய காலங்களில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் கூலிகளாகச் சென்றார்கள்.
ஆனால் இவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் இன்னமும் மறைக்கப்பட்ட வரலாறாகவே தொடர்கிறது. இலங்கை அரசதிகாரம், அரச பயங்கரவாதமாக மாறி அந்த மக்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள் என்னும் அடையாளத்தைச் சிதைத்துவிட்டது.

சுதந்திரத்துக்குப் பின்னர் இவ்வாறாக இலங்கை அரசு உருவாக்கிக் கொண்ட இறையாண்மைக்கு முதலில் பலி கொடுக்கப்பட்டது மலையகத் தமிழர்கள் தான். இந்தியாவிலிருந்து காப்பி, ரப்பர் தோட்டங்களில் கூலி வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இவர்கள். பலி பீடத்தில் ஆடுகளின் தலை துண்டிக்கப்பட்ட பிறகு ரத்தம் சொட்டச் சொட்ட அதன் உடல் துடித்துக் கொண்டிருப்பதைப் போல, ஆண்டுகள் பல கடந்துவிட்ட பின்னரும், இனவெறி உருவாக்கிய கொதிப்பிலிருந்து இந்த மக்கள் விடுபட முடியாமல் இன்னமும் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மலையகத் தமிழர்களின் சோக வரலாறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பிடித்துச் செல்லப்பட்ட கறுப்பின மக்களுக்கு நிகழ்ந்த சோகத்தைப் போன்றதுதான். ஆனாலும் கறுப்பின மக்களுக்கு நேர்ந்த துயரத்தைவிட இது சற்று மாறுபாடு கொண்டது.
அமெரிக்காவில் அடிமை ஒழிப்புக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்த பின்னர், 1833-ம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அடிமை ஒழிப்பு, சட்டமாக இயற்றப்பட்டது.

இதன் பின்னர் தான் கூலிகள் என்னும் சொல் அறிமுகமானது. சட்டப்படி இவர்கள் அடிமைகள் இல்லை என்று சொல்லிக் கொள்ளவும், அதே சமயம் அடிமைகள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதற்கும் ஐரோப்பிய முதலாளிகளால் தந்திரமாக உருவாக்கப்பட்ட சொல்தான் இது. இந்தக் கூலிகள், ஆப்பிரிக்க நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அடிமைகள் எவ்வாறான துயரங்களை அமெரிக்காவில் சந்தித்தார்களோ அத்தனை துயரங்களையும் இவர்கள் குடியேறிய நாடுகளில் சந்தித்தார்கள்.

மலையகத் தமிழர்களைப் பற்றி ஆராயும் ஒருவருக்குக் கூலி என்னும் சொல்லை ஆராய்வதும் அவசியமாகி விடுகிறது. இந்தச் சொல் நம்மீது பதிக்கப்பட்ட அவமான முத்திரை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்தியச் சமூகத்தில் பிறப்போடு சாதியும் இணைக்கப்பட்டுள்ளதைப் போல, இந்தக் கூலி என்னும் சொல்லும் காலனிதேச மக்களோடு குறிப்பாக இந்தியர்களோடு இணைக்கப்பட்டிருந்தது.

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் கூலி பாரிஸ்டர் என்றே அழைக்கப்பட்டார். இந்தியர்களில் மற்ற ஐரோப்பியர்களைப் போல, கப்பலைச் சொந்தமாக வாங்கினாலும் அந்தக் கப்பல் கூலிக் கப்பல் என்றே அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் தமிழ் படிக்க முதலில் ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் பெயர் கூலித் தமிழ் என்பதாகும். 1927-ல் தமிழ் மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக தனியார் கிறிஸ்தவப் பிரசார சபை ஒன்று தொடங்கப்பட்டது.
இதுவும் தமிழ்க் கூலி மிஷன் என்றே அழைக்கப்பட்டுள்ளது.
கூலிகளில் பெரும் எண்ணிக்கையில் தமிழகத்திலிருந்துதான் சென்றுள்ளார்கள். ஆங்கிலேயர் வருகையை ஒட்டி, 18,19-ம் நூற்றாண்டுகளில் 24 பஞ்சங்கள் தொடர்ந்து இந்தியாவைத் தாக்கின.

பல லட்சம் மக்கள் செத்து மடிந்தார்கள். இதை விடவும் கூடுதலாக பிரிட்டிஷாரின் நிர்வாகச் சுரண்டல் அடித்தள மக்களைத் தாக்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியில் நில அளவு அடிப்படையில் வரிவிதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதற்கு முன்னர், மன்னர் காலத்தில் நிலம் விளைந்தால் மட்டுமே, 6-ல் ஒரு பகுதி அல்லது 3-ல் ஒரு பகுதி என்ற அளவில் வரிபெறும் கொள்கை அமலில் இருந்தது. பிரிட்டிஷார் விதித்த இந்தப் புதிய நிலவரியைக் கட்டமுடியாமல், கூலிகளாக நாட்டைவிட்டு வெளியேறும் அவசியம் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேர்ந்தது.. தமிழகக் கடற்கரையை ஒட்டி இலங்கையின் கடல் எல்லைகள் நெருக்கமாக அமைந்திருந்தன.
பெரும் எண்ணிக்கையில் கூலிகளாகத் தமிழ் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இலங்கையில் மலையகத்தில், முதல் குடியேற்றம் 1824-ல் நிகழ்ந்தது. தமிழ் நாட்டிலிருந்து 16 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டார்கள். கப்பலில் செல்கிறவர்கள் தனுஷ்கோடியில் புறப்பட்டு, இலங்கையின் தலைமன்னார் துறைமுகத்துக்கு போய்ச்சேர வேண்டும். இதில் கப்பல் பயணம் அத்தகைய எளிதானது இல்லை. படகுகள் மட்டும் சென்று கொண்டிருந்த பாதையில் ஆரம்பத்தில் கப்பல்கள் பெரும் விபத்துகளுக்கு உள்ளாயின.
இதில் நிகழ்ந்த வரலாற்றுச் சோகம் ஒன்று இன்னமும் சரிவர பதிவு பெறவில்லை. கூலிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஆதிலெட்சுமி, கடலில் மூழ்கியது. அதிலிருந்த 120 பேரும் அப்படியே இறந்து போனார்கள். டைட்டானிக், கடலில் மூழ்கிய அதே காலத்தில் தான் இதுவும் கடலில் மூழ்கியது. ஆனால் உலகப் பெரும் பணக்காரர்கள் கப்பல் என்பதால் டைட்டானிக் உலகப்புகழ் பெற்றுவிட்டது.

நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் பல உலக விருதுகளை மொத்தமாகப் பெறும் திரைக்கதை இதிலிருந்து பிறந்தது. ஆனால் ஆதிலெட்சுமியில் பயணம் செய்தவர்கள் ஒடுக்கப்பட்ட கூலித் தொழிலாளர்கள். மூச்சுக் குமிழ்களை மட்டும் வெளியிட்டு கப்பலுடன் கடலில் மூழ்கிப் போனார்கள்.
தலைமன்னாரில் தரையிறங்கியவர்கள் கால்நடையாக மலையகம் போய்ச்சேர வேண்டும். மலையகத்தின் கண்டி போய்ச்சேருவதற்கு, இங்கிருந்து ஒரு மாதம் தேவைப்படும். பிலிப்ஸ்-ஏ-டம்பளர் துணை கலெக்டர் பொறுப்பை ஏற்றுள்ளவர். இவர் தயாரித்த அறிக்கை ஒன்று கூறுகிறது.

""1867-ம் ஆண்டு புறப்பட்டவர்களின் எண்ணிக்கை 639. இதில் 186 பேர் மட்டும் மலையகம் போய்ச் சேர்ந்தார்கள். இடையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 453 பேர்'' என்று அறிக்கை கூறுகிறது. இதைத் தவிர மலையகத்தில் போய்ச்சேர்ந்த பின்னர் அந்த மக்கள் உயிர் தப்பி வாழ்தலும் மிகவும் கடினமானதாகிவிட்டது. இதன் துயரம் எத்தகையது என்பதை அறிந்துகொள்ள, புள்ளிவிவரம் ஒன்று ஆதாரங்களைத் தருகிறது. 1841-க்கும் 1846-க்கும் இடையில் இந்த ஆறு ஆண்டுகளில் 90 ஆயிரம் மக்கள் இறந்து போனார்கள் என்று இந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

பல்வேறு துயரங்களைச் சந்தித்து, அழிந்தது போக எஞ்சியிருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை இலங்கையின் சிங்கள ஆதிக்க அரசியல்வாதிகளுக்குப் பெரும் அச்சத்தை உருவாக்கியது.. சுதந்திரம் பெற்றவுடனேயே இந்த மக்களின் வாக்குரிமையை முற்றாகப் பறிப்பது என்று முடிவுக்கு வந்தார்கள். இதற்கென்று சுதந்திர இலங்கை 1948-49-ம் ஆண்டுகளில் இரண்டு சட்டங்களை இயற்றிக்கொண்டது.

ஒன்று இலங்கைக் குடியுரிமைச் சட்டம்; மற்றொன்று இலங்கை வாக்குரிமைச் சட்டம். இந்தச் சட்டங்களின் மூலம் மலையக மக்களின் குடியுரிமை முற்றாகப் பறிக்கப்பட்டது. இதன் மூலம் வாக்குரிமைக்கு தகுதி பெற்ற 8 லட்சத்து 50 ஆயிரம் மலையகத் தமிழர்களில் 7 லட்சம் மக்கள் தங்கள் வாக்குரிமையை இழந்து போனார்கள்.

இந்த வாக்குரிமைப் பறிப்பால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 33 சதவிகிதமாக இருந்த தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுதந்திரத்திற்குப் பின்னர் 20 சதவிகிதமாகக் குறைந்து போனது. பிரிட்டிஷ் ஆட்சியில் இவர்களின் பிரதிநிதியாக எட்டு பேர் இருந்தார்கள். இதன் பிறகு 1952-லிருந்து 1972 வரை மலையக மக்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.

சுதந்திரத்துக்குப் பின்னும் தன் சொந்த நாட்டில் வாக்குரிமைக்கும், குடியுரிமைக்கும் உலகிலேயே நீண்ட காலம் போராடிய மக்கள் மலையக மக்களாகத்தான் இருக்க முடியும்.

இந்தப் போராட்டம் கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டம் தீவிரமடைந்து மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பெற்றுவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டபோது, இந்தியா தலையிட்டது.. சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் 1964-ல் உருவானது.

இதைவிட மலையக மக்களுக்கு இழைத்த துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. நூற்றாண்டுகால தங்கள் உழைப்பால் மலையகத்தைச் செல்வம் கொழிக்கச் செய்த, அந்த மலையக மக்களில் 6 லட்சம் பேர் இந்தியாவுக்கு அகதிகளாக அனுப்பப்பட்டார்கள்..

மலையக மக்களை அகதியாக்கும் உரிமையை இந்திய அரசுக்கு யார் கொடுத்தார்கள்?

இலங்கை, இப்பொழுது பொதுத் தேர்தலை சந்திக்கப் போகிறது. மலையக மக்களில் இப்பொழுது 90 ஆயிரம் பேர் வாக்குரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தைச் சொல்லி வாக்குரிமையைப் பறிக்கிறது இலங்கை அரசு.
தமிழ் மக்களை அழித்துவிட்டேன் என்ற இனவெறி போதையில் தேர்தலைச் சந்திக்க ராஜபட்ச திட்டமிட்டிருந்தாலும் மலையக மக்களின் இந்த 90 ஆயிரம் வாக்குகளும் தன்னுடைய வெற்றியைப் பாதிக்கும் என்று கணக்குப் போடுகிறார். எனவே இவர்களை வாக்கற்றவர்களாக வைத்துக்கொண்டே தேர்தலைச் சந்திக்க இவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தியா, தேர்தலைச் சந்திக்க இருக்கும் மத்திய அரசு, இலங்கையின் இந்த வாக்குரிமைப் பறிப்புக்கு என்ன பதிலளிக்கப் போகிறது ?

சி. மகேந்திரன்

Comments