இலங்கையில் இடம்பெறும் போர் குற்றச் செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஐ.நா

சிறீலங்காவில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக ஐநாவின் மனிதஉரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

சிறீலங்காவில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் போர் குற்றங்களில் ஈடுபட்டுவருவதாகவும் சிறீலங்காப் படைகளினால் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவது அதிர்ச்சியழிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

யுத்தவலயத்தில் சிக்குண்ட 180 000 மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு போர்நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினர் பொதுமக்கள் வதியும் பாதுகாப்பு வலயப்பகுதியை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், விடுதலைப் புலிகள் பொதுமக்களை நகரவிடாது தடுப்பதாகவும், பொதுமக்களையும் சிறுவர்களையும் பலவந்தமாக படைகளில் சேர்ப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி 20 மாதம் முதல் 2800 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7000 மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தமுனைப்புகள் பாரிய மனித அவலத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் இந்நிலை தொடருமாயின் சர்வதேச யுத்த குற்றசெயல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Comments