நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டளவான அமெரிக்கத் தமிழர்கள் கலந்து கொண்டதுடன், கொத்துக் குண்டுவீச்சு உட்பட இனப்படுகொலை பற்றிய பதாகைகளைத் தாங்கியிருந்ததுடன், சர்வதேச நாணய நிதியமே இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்துக! மற்றும் படுகொலைகளை நிறுத்துக! போன்ற முழக்கங்களையும் எழுப்பினர்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ள 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவது குறித்து அந்த அமைப்பு ஆலோசித்து வரும் வேளையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சர்வதேச நாடுகள், மற்றும் அமைப்புகளிடம் இருந்து பெறப்படும் நிதியுதவி மூலமே தமிழின அழிப்பை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாக புலம்பெயர் தமிழர்களும், அமைப்புக்களும் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி முதல் இன்று வரையான 5 வாரங்களில் மட்டும் பொதுமக்கள் 2,800 பேர் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7,000 பேர் வரையில் படுகாயமடையச் செய்துள்ள இலங்கை அரசாங்கத்திற்கு கடனுதவியை வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குரல் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் வெளியுறவு அலுவலகத்தின் துணைப்பிரிவின் பொறுப்பதிகாரி ஜெரமி மார்க் (Jeremy Mark), இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை பற்றிக் கேட்டறிந்ததுடன், அந்த மனுவை உயர் அதிகாரிகளின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அலுவலகம் முன்பாக இரண்டு மணித்தியாலங்களாக மெளனமாக கவலையுடன் நின்றனர். தாங்கள் கொண்டுசென்ற சுவரொட்டிகளை வாசிக்குமாறு காட்டினர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போரை நிறுத்த வலியுறுத்தியமைக்கு இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அம்மையாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Comments