ஐ.நா.சபையில் உறுப்புரிமையுள்ள நாடு நாளாந்தம் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பில் ஐ.நா. அதிக கவனம் கொள்ளவில்லை என தமிழீ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வன்னியில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வகையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோளை எமது அமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் எறிகணை வீச்சுக்களினாலும், பட்டினியாலும் நாளாந்தம் இறப்பை சந்தித்து வருகின்றனர்.
வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அலவங்களை போக்குவதற்கான உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என பல தடவைகள் நாம் கோரிக்கை விடுத்தோம், இன்னமும் விரும்புகின்றோம் ஆனால் சிறிலங்கா அரசுதான் தொடர்ந்து நிராகரித்துவருகின்றது.
அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்க வேண்டும் என எமது அமைப்பிடம் கோரும் அனைத்துலகம் ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசை கோருவதுடன் நாளாந்தமும் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்படும் மக்களின் மனித அவலங்களை நிறுத்தவும் முன்நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லையா? சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை அனைத்துலக சமூகம் நிறுத்துவதற்கு முன்வராத போது அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு துணை போவதாகவே நாம் கருத முடியும்.
இந்த அவலங்களை வெளியிடுவதற்காக சுதந்திரமான ஊடகவியலாளர்களும் மனிதாபிமான அமைப்புக்களை சேர்ந்தோரும் எமது பகுதிக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபடுவதையும், உதவி புரிவதையும் அரசு தொடர்ந்து தடுத்து வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித மற்றும் பொது உரிமைகளுக்காகவும், சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், அடக்குமுறையான சட்டங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவுமே போராடி வருகின்றனர்.
சிறிலங்காவில் இருந்து தமிழ் மக்களை முற்றாக இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் முகமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். எமது அமைப்பும் அவ்வாறே உருவாகியது ஆனால் உலகம் எமது அபிலாசைகளை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.
அனைத்துலக சமூகம் அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள மறுப்பதுடன், ஆயுதங்களை கீழே போடுமாறு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. எதற்காக? நாட்டில் உள்ள தமிழ் இனத்தை அழித்த பின்னர் சிங்கள மக்கள் எஞ்சிய மக்களை அடக்கி ஆட்சி புரிவதற்காகவா?
வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக சமூகம் தமிழ் மக்களின் நிலையில் இருந்தால் அவர்கள் விருப்பத்துடன் அரசின் பாதுகாப்பு தேடி செல்வார்களா? அரச படையினரின் எறிகணைத்தாக்குதலில் உங்களின் ஒரு பிள்ளை கொல்லப்பட்ட பின்னர் மறுநாள் ஏனைய பிள்ளைகளுடன் நீங்கள் அதே அரசின் பாதுகாப்பு தேடிச் செல்வீர்களா? ஐ.நா.வின் நிதி உதவியில் இயங்கிவரும் தங்கும் முகாம்களில் கூட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
அங்கு மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஏனைய மக்களும் அங்கு செல்ல வேண்டும் என அனைத்துலக சமூகம் எவ்வாறு எதிர்பார்க்கலாம். மக்களை பலவந்தமாக தடுத்துவைக்க வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்களே உங்களுக்கு இதனை தெரிவிப்பார்கள்.
அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்களோ, மருத்துவர்களோ, உதவி அமைப்புக்களோ ஏதாவது கருத்தை தெரிவித்தால் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என அரசு குற்றம் சுமத்தி வருகின்றது.
Comments