பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடி தடை செய்யப்பட்டவுமில்லை, அதனை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் பொது இடங்களில் வைத்திருப்பது சட்ட விரோதமானதுமில்லை என இன்று லண்டன் அல்பேட்டன் பகுதியில் லிபரல் டெமோகிராட் கட்சியினால் ஈழத்தமிழர்களில் படுகொலைக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வெம்பிலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு அன்டர்ஷன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தில் பல லிபரல் டெமோகிராட் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டு இலங்கையில் நடைபெறுவது இன அழிப்பே என உறுதிபட தெரிவித்ததுடன், இவ்வினவழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர்.
அதேவேளை பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் மேற்கொள்ளப்படும் பல பொய் பிரச்சாரங்களையும், நாசகார வேலைகளையும் சுட்டிக்காட்டிய பொதுமக்கள், லிபரல் டெமோகிரட் கட்சியானது, தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்தை அங்கீகரித்து, பிரித்தானியாவில் உள்ள கட்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்று பகிரங்க வேண்டுகோளும் விடுத்தனர்.
Comments