| |
ஒரு சின்ன சூறாவளி சுழன்றடித்தப் பிறகு நான் பேச வந்துள்ளேன். ஒரு இரும்பு கத்தி இரும்பையே அல்வா வெட்டுவது போல வெட்டியது சுதா காந்தியின் உரை. அதாவது ஒருவரை ரொம்ப திட்டனும்னா என்ன திட்டலாம்.
“நிழல் கூட பின் தொடர அவமானப்படும் காங்கிரஸ்காரன்” இதைவிட கடினமான ஒரு வார்த்தையை கண்டு பிடிப்பது கடினம். இதற்கு மேலும் காங்கிரஸ் இருக்கனுமா இப்பவே தூக்குப் போட்டு சாகனும் என்பது போல இருந்தது அந்த வார்த்தை.
கருத்துரிமை என்றால் என்ன? இந்த இந்திய திருநாட்டிலே ஒரு குடிமகனா வாழற எனக்கு என்ன சுதந்திரம் இருக்கு. இந்திய அரசாங்கத்துக்கோ, அல்லது தமிழக அரசாங்கத்துக்கோ எதிரா பேசினார் என சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களை பேசியதற்காக கைது செய்தார்கள் என்றால், அவர்களை வேடிக்கை பார்க்கப் போன என்னையும் கைது செய்தனர். எதற்காக கைது செய்கிறார்கள் என்றே புரியவில்லை. சீமானை நண்பர் என்ற முறையிலே பார்க்கலாம் என சென்றேன். அதற்கும் கைது செய்தார்கள். எதற்கு கைது செய்கிறீர்கள் என்று கேட்டால், இறையாண்மை சட்டம் என்று சொன்னார்கள். இது என்ன இறையாண்மை? கேவலமான சொல்லாக இறையாண்மை என்பது மாறிவிட்டது.
என் நண்பர் சொன்னார், ‘உன்னை கைது செய்ய வந்த காவலரிடம் இறையாண்மை என்றால் என்ன என்று கேள், அதற்கு அவர்கள் சரியாக விளக்கம் சொன்னால் நீ கைதாகி உள்ளே போய்விடு’ என்றார். இங்கிருக்கிற காவலர்கள் யாராவது இறையாண்மை என்றால் இதுதான் என்று சொல்லட்டும், அந்த இறையாண்மையை நான் மீறவில்லை. எனக்கு தெரியவில்லை, நீங்கள் சொன்னால் அதன்படி நான் நடக்கிறேன்.
நாஞ்சில் சம்பத் அவர்கள், “இந்தக் கொடுமை களுக்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், டில்லியில் ஒரு தமிழ்நாடு தூதரகம் இருக்கும்” என்றார். நீங்கள் இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட மாட்டீர்கள் என்றால் எதிர்வினை இருக்கும் என்று சொன்னால் அவரை உடனே கைது செய்து விடுவீர்களா?
சீமான் என்னிடம் சொன்னார், ‘இறை யாண்மையைப் பற்றி பேசினால் அவர்களுக்கு கவலை இல்லை. நான் கேட்ட ஒரே ஒரு கேள்வி, காங்கிரஸ்காரர்களே! நீங்கள் காமராசர் ஆட்சி வரும் வரும் என்று பேசுகின்றீர்களே, உங்களில் யார் காமராசர் என்று சொல்லுங்க” என்றேன். இதுதான் அவர்களுக்கு ரொம்ப வருத்தம். இதைத்தான் அவர்களால் தாங்க முடியவில்லை. உடனே என் மீது கோபப்படுகிறார்கள் என்றார்.
அரசாங்கம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் ‘கஞ்சா’ வைத்தும் கைது செய்வார்கள். ராஜீவ் மரணம், தமிழ்நாட்டில் நடந்தது. நான் மரணத்தைப் பற்றி ஒரு திரைப்படம் எடுத்தேன்; தணிக்கையில் வெட்ட வேண்டியதை எல்லாம் வெட்டட்டும். அதற்குப் பிறகு நான் படத்தை வெளியிடுகிறேன் என்பதற்கே நான் 14 வருடங்கள் போராட வேண்டியிருந்தது. ‘குற்றப் பத்திரிகை’ என்ற அந்த படத்தையே முழுமையாக நிறுத்தி விட்டார்கள். அந்த படத்தை நான் எடுக்கும்போது ஒரு கலைஞனாக நான் சிந்தித்து எடுத்தேன்.
அந்தப் பெண் (தனு) சம்பவம் நடந்த இடத்துக்கு எப்படி வந்தார்? நாம் சட்டத்தை மீறி ஒரு வழிப் பாதையில் வண்டி ஓட்டிப் போனால் எதிரே போலீசை பார்த்தால் நமக்கு ஒரு நடுக்கம் வரும். அதைப் போல ஒரு குற்றம் செய்பவனுக்கு நிச்சயம் ஒரு பயம் வரும். ஆனால், ஒரு பெண் தனியாக உடலில் குண்டுகளோடு வருகிறார் என்றால் பக்கத்தில் போலீஸ் இருக்கிறது. ஆனால் முகத்தில் எந்தவித கலக்கமும், மாற்றமும் இல்லாமல் இந்த பெண் எப்படிப் போக முடிந்தது? இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 20 பேர் ஒரு வீட்டினுள் நுழை கிறார்கள் அந்த வீட்டில் கணவன் மனைவி இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மூதாட்டி உள்ளனர். முதலில் கணவனை ராணுவம் கொல்லுகிறது. ஒரு பெண் தெரியாமல் தப்பித்து வீட்டின் பின்னால் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறார். அந்தப் பெண் பார்வையிலேயே அவருடைய மூதாட்டி, அம்மா,சகோதரி ஆகியோரை பாலியல் வன்முறை செய்து குண்டு வைத்துக் கொன்று விடுகிறார்கள். அந்தப் பெண்ணால் தடுக்கவும் முடியாது; அழவும் முடியாது. ஏன் என்றால் அதனால் அவருக்கும் அதே கதி ஏற்பட்டு விடும். வாய்விட்டு அழவும் முடியாத வேதனையில் தன் கையை எடுத்து கடித்துக் கொண்டு அழுகிறாள். தன் கையே துண்டாகி விடும் சூழ்நிலை.
இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் எல்லா மனிதத் தன்மையுமே, அந்த உணர்ச்சிகளே இல்லாமல் போய்விடுமல்லவா? நெல்சன் மண்டேலா சொன்னார், “ஒரு சாதாரண சட்டத்துக்கு அடி பணிகிற, மதிக்கிற ஒரு குடிமகன் ஒரு கொடும் சட்டத்தின் காரணமாக அந்த சட்டத்தை மீறுவதான சட்டச் சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்குகிறது.” என்றார். அமைதியை காக்கப் போன இந்திய அமைதிப் படையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பழியை தீர்க்கிறார்கள். அது தானே ராஜீவ் காந்தியின் மரணம். ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா, நளினியை பார்த்துவிட்டு சென்ற பிறகுதான் ஈழத் தமிழர்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் அதிகமானது. தமிழர்கள் எப்போதும் உணர்ச்சியை வெளிக்காட்டக் கூடியவர்கள். ஆனால், அய்ரோப்பியன் அப்படி அல்ல. அவர்கள் சாவு வீட்டிற்கே ‘கோட், சூட்’ போட்டுக் கொண்டு அழகாக வருவான். திருமணத்திற்கும் அப்படியே தான் வருவான். அவர்களுடைய முகத்தில் எந்தவித மாற்றமும் கண்டு பிடிக்க முடியாது. அந்த பரம்பரையில் இருந்து வந்தவர்தான் சோனியா காந்தி. அதனாலேதான் ஒரு பெண்ணுக்கு தூக்குதண்டனை வேண்டாம் என்று சொல்லி, அதன் மூலமாக அம்மா என்று அனைவராலும் தன்னை உயர்த்திக் கொண்டு பழிவாங்க தன்னை தயார்படுத்திக் கொண்டு பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றை மட்டும் நான் கேட்க விரும்புகிறேன். காந்தியை கோட்சே கொன்றான். அவனுக்குகூட நான் ஏன் கொன்றேன் என்று சொல்வதற்கு ஒரு உரிமை இருந்தது. இந்திரா காந்தியை சீக்கிய மதத்தைச் சார்ந்த பியாந்த்சிங் சுட்டுக் கொன்றான். அதற்காக அவன் பரம்பரையையே கொல்லவில்லை. அவன் மனைவியே இந்திய பாராளுமன்றத்தில் உறுப் பினராக வந்து அமர முடிந்தது. அவனுக்கு ஒரு பரிகாரம் இருந்தது. அதே போல விடுதலைப் புலிகளே கொன்று இருந்தால்கூட அதற்காக ஒரு தமிழினத்தையே அழித்துவிட வேண்டுமா?
40, 50 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறார்களே, இது நியாயம் தானா? காந்தியையும், இந்திராவையும் சுட்டுக் கொன்றவர் களால் அவர்களின் இனமோ, சமூகமோ பாதிக்கவில்லை. அவர்களுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதியா? எந்த விதத்தில் நியாயம் இது? தன் நாட்டில் வாழக்கூடிய அனைத்து இனங்களையும் பாதுகாக்கின்ற ஒரு அரசுதான் சட்டப்படியான ஒரு அரசு. அப்படி இருந்தால்தான் அந்த நாட்டின் இறையாண்மைப் பற்றி பேச முடியும். இலங்கை அரசே கூட தன் நாட்டில் வாழுகின்ற சிங்கள இனத்தையும், தமிழ் இனத்தையும் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாக இருந்தா தான் அந்த நாட்டிற்கு இறையாண்மைப் பற்றிப் பேச தகுதி இருக்கும். அப்படி இல்லாமல் ஒரு இனப் படுகொலையே நடத்துகிற நாட்டிற்கு இறையாண்மைப் பற்றிப் பேச தகுதி இல்லை. இந்த இறையாண்மை சட்டம் இந்தியாவில் 1991-க்கு முன்பு வந்ததா அல்லது அதற்குப் பின்பு வந்ததா?
அன்றைக்கு ஆயுதம் தாங்கிப் போராடிய போராளி குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்? பயிற்சி கொடுத்தது யார்? இந்தியா தானே! அது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான குற்றமில்லையா? அந்தக் குற்றத்தை இந்திரா காந்தி செய்தாரா, இல்லையா. ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி ஆகியோர் செய்தார்கள் இல்லையா? ஆகவே இறையாண்மை சட்டத்தில் அவர்களை கைது செய்யுங்கள். அதற்குப் பிறகு கொளத்தூர் மணியையும், சீமானையும் கைது செய்யுங்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் பேசியதை உண்மை என்று நம்பித்தான் 1983லேயே நாங்கள் கல்லூரியில் படிக்கும் போதே உணர்வு பெற்றோம். இலங்கை தமிழர்களுக்காக பேசவில்லை என்றால் போராடவில்லை என்றால், நாங்கள் எல்லாம் தமிழர்களே இல்லை என்ற உணர்வை எங்கள் ரத்தத்திலேயே நீங்கள் தான் ஏற்றி விட்டீர்கள். ஆனால், இப்போது உங்களால் மாற முடிகிறது. எங்களால் மாற முடியவில்லை. தூங்கினாலும், சாப்பிட்டாலும், தொலைக்காட்சிப் பார்த்தாலும் ஈழத் தமிழர் படும் துயரங்களை தாங்க முடியவில்லை. எங்களுக்கு கோபம் வருகிறது. இயலாமை வருகிறது. தீக்குளிக்க தோணுது. வெறி வருகிறது. அப்புறம் வன்முறையில் இறங்க வேண்டிய சூழல் வருகிறது. அதனாலே எங்களுடைய உணர்வுகளை, கோபத்தை நீங்கள்தான் புரிந்துக் கொள்ள வேண்டும். நாடுகூட அப்புறம் முதலில் அந்த மக்களை பாதுகாக்க வேண்டும். அதை செய்யாமல் எங்கள் தோழர்களை தண்டிக்க மட்டும் உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
இந்திய விடுதலைக்காக பாடுபட்டது இந்திய தேசிய காங்கிரஸ். தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்தது இந்திரா காங்கிரஸ். தமிழ் இனத்தை அழிக்கப் பார்க்கிறது இத்தாலிய தேசிய காங்கிரஸ். இன்றைக்கு காங்கிரசை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். இந்திய காங்கிரஸ் இந்தியாவின் தேசிய விடுதலைக்காக பாடுபட்டது என்றால் காந்தி காங்கிரசையே கலைத்து விடலாம் என்று சொன்னார். காரணம் - சுதந்திரத்தோடு காங்கிரசின் நோக்கம் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு காங்கிரஸ் பதவிக்காக நீடித்தது. இந்திரா காந்தி ஆட்சியில் இருக்கும்போது, இதே கொடுமை இலங்கையில் நடக்கும் போது முதன்முதலாக இது இனப்படுகொலை என்று சொன்னவர் இந்திரா காந்தி. இவர்களைவிட இந்திராவுக்கு தெரியாதா? இறையாண்மை பற்றி. உண்மையாக இந்தியாவை நேசித்ததால் மக்களை மதித்ததால் இந்திரா காந்தி காலத்தின் காங்கிரஸ் - ஈழத் தமிழரின் சுதந்திரத்தை பாதுகாக்க குரல் கொடுத்தது. இன்றைக்கு இந்த தமிழினத்தை அழிப்பது தான் இந்த இத்தாலிய காங்கிரஸ். போபர்சு வாங்கியதாலே ஒரு முறை ஆட்சி போச்சு, இன்று இங்கு கொடுப்பதாலே இன்னொரு முறை ஆட்சிப் போகப் போகிறது. (கைதட்டல்)
காங்கிரசுகாரர்கள் கேட்கிறார்கள், உங்களை கைது செய்வது, ஆட்சி செய்கிற கலைஞர் அரசு தானே. அவரை திட்டாமல் எங்களை திட்டு கிறீர்களே என்று கேட்கிற அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ‘மனோகரா’ திரைப்படம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதில், கண்ணே, மணியே, கற்கண்டே என்று சொன்ன மனோகரனை கைது செய்த போது, புருசோத்தமன் மேல் யாருக்கும் கோபம் வரவில்லை. வசந்தசேனை மேலே தான் கோபம் வந்தது. இதற்கு காரணம் வசந்தசேனை என்று தெரியுமல்லவா. அதுபோல இன்றைக்கு இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் இந்திய தேசிய காங்கிரசு என்று அழைக்கப்பட்ட இந்த இத்தாலிய தேசிய காங்கிரசுதான். இந்த இத்தாலிய தேசிய காங்கிரசு வசந்தசேனையை தமிழ்நாட்டை விட்டே விரட்டப்பட்டால்தான் இவர்களுக்கெல்லாம் புத்தி வரும். அதனாலே தமிழின மக்களே முதலில் தமிழ்நாட்டில் எங்கெங்கே காங்கிரசு நிற்கிறதோ அங்கெல்லாம் அதற்கு தோல்வியை கொடுக்க வேண்டும். அப்போது தான் இன்ன காரணத்துக்காக தோற்கடிக்கப்பட்டது என்று தெரிந்தால்தான் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் அது பி.ஜே.பி.யாக இருந்தாலும், எவராக இருந்தாலும் தமிழினத்துக்கு விரோதமாக இருந்தால் டெப்பாசிட் போகும் என்ற பயம் அவர்களுக்கு வரும். அதனாலே நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் கையில் வைக்கிற மை கறையை தமிழினத்தின் மேல் உள்ள கறையை கலையப்படுகிற கறையாக பயன்படுத்துங்கள்.
- புரட்சிப் பெரியார் முழக்கம் (26.03.2009)
Comments