தவறான தகவலும், மதிப்பீடும்

சிறிலங்கா இராணுவத்தால் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முடியாமை குறித்துப்பலருக்கு தற்பொழுது ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சிறீலங்காவிலும் வெளியிலும் - குறிப்பாக இந்திய ஆய்வாளரல் பலருக்கும் யுத்தம் இதுவரையில் முடிவுகாணப்பட்டதொன்றாக இருத்தல்வேண்டும். அதாவது அவர்களின் காலநிர்ணயங்களையும் , எதிர்பார்க்கைகளையும் மீறியதாக நீண்டு செல்வதாகவுள்ளதோடு, சிறீலங்கா இராணுவத்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இனப்பிரச்சனை ஒன்றிற்கு இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று வரலாற்று நிருபணம் செய்திருந்தபோதும் அதனைச் சிறீலங்கா ஆட்சியாளர்களும் யுத்தத்தில் சிறீலங்காவிற்கு ஆதரவு அளித்தோரும் - நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் வரலாற்றை தம்மால் மாற்றியமைத்துவிடலாம் என எண்ணினர்.

யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிடலாம் என நம்பினர்.
இதனை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, ஆய்வாளர்கள் பலரும் நம்பினர். ஆனால் போர் இதுவரையில் முடிவிற்கு வரவில்லை என்பது வெளிப்படத் தொடங்கியதும் - தமது அபிப்பிராயங்களை அவர்கள் மாற்றிக் கொண்டார்களோ இல்லையோ, முடிவிற்குவராமை குறித்த காரணங்களை தேடத்தொடங்கினர்.

இந்தவகையில் இந்தியாவின் முன்னாள் இராணுவ அதிகாரியும் அரசியல் - இராணுவ விமர்சகருமான கேணல் ஹரிகரன் அபிப்பிராயப்படி விடுதலைப்புலிகளின் தலைவர் இன்னமும் மனம் தளராது உறுதியுடனேயே இருக்கின்றார் என்பதாகும். அதாவது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மனம் தளராது போராட்டத்தை வழிநடாத்துவதே யுத்தத்தில் இதுவரை வெற்றிபெற முடியாமைக்கு காரணம் என்பதாகும்.

அடுத்ததாக இலங்கை தொடர்பான விடயத்தில் பல கட்டுரைகளை எழுதியுள்ள ஆய்வாளரான சூரிய நாராயணன் என்பவர் ஊடகங்களின் கருத்துப்படி யுத்தத்தை முடிவுக்குகொண்டுவர முடியவில்லை / வெற்றிபெற முடியவில்லை எனத் தெரிவிக்கின்றார். அதாவது ஊடகங்கள் போர் குறித்துத் தவறான தகவல்களை வெளியிட்டிருந்தன என்பதாகவுள்ளது.

ஆனால் இவ்விரண்டு விமர்சகர்களும் சிறீலங்கா அரசாங்கம் கூறிக்கொண்டது போலவும் பேரினவாத ஊடகங்கள் தெரிவித்தமைபோன்றும் யுத்தம் முடிவிற்கு வந்துவிடும், சிறீலங்கா இராணுவம் வெற்றிபெற்றுவிடும் என்று நம்பியவர்களே ஆகும். இவர்கள் இன்று காரணம் தேடுவதென்பது தமது மதிப்பீடுகளையும் , தோல்விகளையும் மறைப்பதற்கான முயற்சியே ஆகும்.

ஏனெனில் இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு ஒன்று சாத்தியமாகமாட்டாது என்ற வரலாற்றுப் பாடத்தைததான் இவர்கள் புறம் தள்ளியாலும் தமிழ் மக்களின் ஃ விடுதலைப்புலிகளின் போராட்ட வiலாற்றை அவர்கள் புறம்தள்ள முற்பட்டமையும் அதில் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ள முற்படாமையும் அவர்களின் தவறான மதிப்பீட்டிற்கு காரணமாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மனவுறுதி எத்தகையதென்பதற்குக் கடந்த முப்பதாண்டுகால வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. குறிப்பாக இந்திய இராணுவத்துடன் போரிடுவதெனத் தீர்மானித்ததும் இந்திய இராணுவத்துடனான போரில் தளராது தாக்குபிடித்தமையும் அவரது மனவறுதிக்கு எடுத்துக்காட்டாகும், அதாவது அச்சுறுத்திப் பணியவைத்துவிடமுடியாது என்பதை எவரும் புரிந்துகொள்ளத் தக்கதான எடுத்துக்காட்டாகும்.

இதனைதவிர யுத்தகளம் முமுஅளவில் தமக்குச் சாதகமானதாக இருந்திருப்பின் மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் மோசமான அடக்குமுறையைக் கைக்கொண்டிருக்க வேண்டியதான தேவை ஏற்பட்டிருக்கமாட்டாது. இந்தகைய நிலையில் ஊடகங்களிடம் இரந்து பெரிதாக எதிர்பார்ப்பதற்கு இல்லை என்பது மட்டுமல்ல, அரசிற்கு ஆதரவான குரல்களாகவே அவை ஒலிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருந்தன. இத்தகைய நிலையில் ஊடகங்களை வைத்து நிலைமையை மதிப்பிடுதல், அதிலும் பேரினவாத ஊடகங்களை வைத்து மதிப்பிடுதல் என்பது தவறான முடிவிற்கே இட்டுச்செல்லத்தக்கதாகும்.

இவற்றை உணர்ந்து கொள்ளாமலும் மதிப்பீடு செய்யாமலும் யுத்தத்தில் சிறீலங்கா இராணுவம் வெற்றிபெற்றுவிடப்போவதாக நம்பிக்கைகொள்வதும் பின்னர் தமது மதிப்பீட்டுத் தவறுக்கு நியாயம் கற்பிக்க முற்படுவதும் அழகானதொன்றல்ல. ஒருவகையில் பார்க்கப்போனால் அவர்களின் அபிலாசைகளும் தோற்றுப்போன நிலையில் அதற்கு நியாயம் தேட முற்படுவதாகவே இதனை கொள்ளமுடியும் .

[ஈழநாதம் -27.03.09]

Comments