ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து நேற்று முன்நாள் தீக்குளித்த இருவரும் மரணம்

ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்தும் அங்கு உடனடியாகப் போரை நிறுத்தக் கோரியும் நேற்று முன்நாள் தீக்குளித்த 2 இளைஞர்களும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

அவர்களின் உடலங்களுக்கு தமிழ் உணர்வாளர்கள் மலர்வணக்கம் செலுத்தினர். இருவரின் உடலங்களும் அவர்களின் ஊரில் நாளை எரியூட்டப்படுகின்றன.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழ்வெளியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டரான இராஜசேகர் (வயது 30) ஈழத்தில் இனப் படுகொலையைக் கண்டித்து நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று முன்நாளே தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரின் உடலில் 90 விழுக்காட்டிற்கும் மேல் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

அவரின் உடலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சியின் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, இராஜசேகரின் உடலம் அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் வணக்கத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூரையடுத்த அன்னவெளியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் ஆனந்தும் நேற்று முன்நாள் தனது வீட்டு வாசலில், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுக் கொண்டார்.

உடனடியாக கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் மேலதிக சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரின் உடலத்துக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், 'புதிய பாதை' ஆசிரியர் ம. நடராசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.

இதன் பின்னர், ஆனந்தின் உடலம் கடலூர் அன்னவெளியில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அரியலூர் இராஜசேகர், கடலூர் ஆனந்த் ஆகியோரின் உடலங்கள் நாளை எரியூட்டப்படுகின்றன. அவர்களின் இறுதி நிகழ்வில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வர்.

ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கொளத்தூர் முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமசேசன், சிவப்பிரகாசம், சிறீதர் என்கிற எழில்வளவன், கடலூர் தமிழ்வேந்தன், சிவகாசி கோகுலரத்னம், வாணியம்பாடி வள்ளப்பட்டு சீனிவாசன் ஆகிய 9 பேர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து கடலூர் ஆனந்தும், தத்தனூர் கீழவெளியைச் சேர்ந்த இராஜசேகரும் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருப்பதையடுத்து, ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கின்றது.

Comments