விலங்கிடுவது கைக்கா? வாய்க்கா?

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதிகள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி, தேர்தல் திருவிழா கனஜோரில் தொடங்கிவிடும்.

தமிழகத்தில் வரும் மே 13ஆம் தேதியன்று, இறுதி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களத்தை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் கோடை வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பரப்பில் இலங்கை தமிழர் பிரசனையை நமது அரசியல் கட்சிகள் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிடும். (அடுத்ததாக தேர்தல் வரும் போதுதானே அவர்களுக்கு இந்த 'ஆயுதம்' தேவைப்படும்.)

உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம், முத்துகுமாரர்களின் மரணம் எல்லாம் தேர்தல் களேபரத்தில் காணாமல் போய்விடும்.

ஆயினும் ஈழத்தின்பால் உண்மையான பற்றுள்ள சில தலைவர்கள், தேர்தல் பிரச்சாரத்தையும் மீறி இலங்கை விவகாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்களோ என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது.

காரணம், இத்தேர்தலில் இலங்கை விவகாரம் நிச்சயம் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆளும் தி.மு.க.வும் காங்கிரஸும் நன்கு உணர்ந்துள்ளன. அதன் எதிரொலியாகத் தான் தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்குக் கூட வலைவீசப் பார்க்கிறது காங்கிரஸ்.

உலகத் தமிழர்களுக்கே தான் மட்டும் தான் நம்பகமான ஒரே தலைவர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க.வோ, ஈழப் பிரச்னையால் கணிசமான வாக்குகளை இழக்க நேரிடலாம் என்ற அச்சத்தில் உள்ளது.

எனவே, இலங்கை விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு போகக் கூடாது என்பதில் அது உறுதியாக உள்ளது. அதற்காக அறிவிக்கப்படாத கைது நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வரும் இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த தமிழக அரசு, அதன் பிறகு வைகோவையும் கைது செய்து உள்ளே தள்ளியது. (அவர் தற்போது பிணைய விடுதலையில் வெளியே வந்துவிட்டார் என்பது வேறு விஷயம்) வைகோ மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயலாம் என்றே கூறப்படுகிறது.

இத்துடன் நிற்கவில்லை. திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில், தே‌சிய ஒருமை‌‌ப்பா‌ட்டு‌க்கு‌ எதிராகப் பே‌சியதாக, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியையும் கைது செய்து 'உள்ளே' வைத்துவிட்டது தமிழக அரசு.

தமிழக காவல்துறையினர் விலங்கிடுவது தலைவர்களின் கைகளுக்கா?

அல்லது அவர்களின் வாய்க்கா?

அடுத்த கைது யார்? பழ. நெடுமாறனா?

அல்லது தொல் திருமாவளவனா?


ஆனால் நமது வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். தங்களின் மவுனப் புரட்சி மூலம் தேர்தலில் எதிர்பாராத அதிசயங்களை நிகழ்த்தியவர்கள்.

அவர்களின் மவுனப் புரட்சி வரும் தேர்தலில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


எல்லா கேள்விகளுக்கும் விடையை மே 16ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) சொல்லும்.

Comments