தோழர்கள் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் இருவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்க!

இந்திய இறையாண் மைக்கு எதிராக ‘தேச விரோதச்’ செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதாக குற்றம் சாட்டப்பட்டு த.பெ.தி.க. தலைவர் கொளத்தூர் மணியும், இயக்குனர் சீமானும் ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் யாருடைய ஆட்சியல், தமிழினத் தலைவர் கருணாநிதியின் ஆட்சியில். கொளத்தூர் மணியும், சீமானும் செய்த குற்றம் என்ன? அவர்கள் சிங்கள இனவெறிப் படுகொலைக்கு ஆளாகி வரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரினார்கள். “இந்திய அரசே, போரை உடனே நிறுத்து” எனக் கோரினார்கள். இனவெறி அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவிகள் செய்யக் கூடாது, படைப் பயிற்சிகள் தரக் கூடாது என்று கோரினார்கள். ஈழத் தமிழர் உரிமை காக்க அம்மக்கள் கோரும் தமிழீழத்துக்காகவும், தமிழீழத்தை அடைவதற்காக நடைபெற்று வரும் போராட்டத்தின் நியாயத்தையும் தமிழக மக்களுக்கு உணர்த்தி அம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தினார்கள். இதுதானே, இதி லென்ன தவறு? இதிலே முதல்வர் கருணாநிதி அரசுக்கு எந்தப் பக்கம் குடைகிறது?

நாட்டில் கருத்துரிமை, பேச் சுரிமை இல்லையா. இந்திய அர சமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப் படை உரிமைகள் இல்லையா. என்ன அவசர நிலைப் பிரகடனம் செய்யப் பட்டு, அனைத்து உரிமைகளும் பறி முதல் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சி நடக்கிறதா. இல்லையே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலை வர் ஆட்சிதானே நடக்கிறது. ஆனால், இந்த ஆட்சியில்தான் இந்தக் கொடுமை, அடக்குமுறை. இத்தனைக்கும் காரணமென்ன? தில்லியில் ஆளும் காங்கிரசுடன் தி.மு.க.வின் கூட்டு. தில்லி அதிகாரக் கூட்டின் மூலம் தி.மு.க.வும் அவர் குடும்பமும் அடைந்துவரும் பலன் களைப் பாதுகாக்கும் தன்னலம். தில்லிக்கு கங்காணி வேலை பார்த்து தமிழினைக் காட்டிக் கொடுத்து, தன் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தி வாலாட்டிக் குழையும் நடவடிக்கை யின் ஒரு அம்சம்தானே இந்தக் கைது நட வடிக்கை. இதனால்தானே இவ் விரு உணர்வாளர்களையும் சிறையில் அடைத்திருக்கிறார் கருணாநிதி. இதைத் தவிர இந்தக் கைதுக்கு வேறு ஏதும் காரணம் சொல்லமுடியுமா?

ஆனால், இன்னமும் பல அசட்டு உணர்வாளர்கள் கருணாநிதி ஆட்சியை ஜெ. ஆட்சியுடன் ஒப்பிட்டு, கருணா நிதியின் ஆட்சிதான் தமிழன் ஆட்சி, அவர் ஆட்சிதான் சனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் ஆட்சி என்பதான மயக்கத்தில் இருக் கிறார்கள். அவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி முதன் முதலாக அமைச்சர் பொறுப்பேற்று ஆட்சி நடத்தியபோது அவருக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கிய போது அதை எதிர்த்த மாணவர் போராட்டத்தில் உதயகுமார் என்கிற மாணவனை அடித்துக் கொன்றது முதல், சிம்சன் போராட்டம், தொழிற் சங்கத் தலைவர்கள் மீது தாக்குதல், வி.பி. சிந்தனுக்கு கத்திக்குத்து, இடது சாரித் தலைவர்கள் கைது, சிறை யிலடைப்பு என எண்ணற்ற சம்பவங்கள் ஊடாக, சமூக விரோத சக்திகளின் வெறியாட்டமோ, காவல் அத்து மீறலோ எல்லாம் அதிகம் நடப்பது ஒப்புநோக்கில் இந்தத் தமிழினத் தலைவர் ஆட்சியில்தான்.

நெல்லை, தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தி 17 பேரைக் கொன்றது, கோவையில் வன்முறை வெறியாட்டம் நடந்தது, குண்டுப்பட்டி மக்கள் மீது காவல் தாக்குதல் நடத்தியது, போராளி ரவீந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது, இப்படி எண்ணற்ற சம்பவங்கள் பல நடந்தது எல்லாமும் தமிழினத் தலைவர் ஆட்சியில்தான். ஆக தமிழக ஆட்சியில் ஜெ. ஆட்சி, கருணாநிதி ஆட்சி என்றெல் லாம் பாகுபாடு பார்த்து மயங்க எதுவு மில்லை. இரண்டும் ஒரே மாதிரி யான கருத் துரிமைப் பறிப்பு, சனநாயக விரோத அடக்குமுறை ஆட்சிதான்.

ஜெ. ஆட்சியில் பழ. நெடுமாற னும், வைகோவும் கைது என்றால், கருணாநிதி ஆட்சியில் கொளத்தூர் மணி, சீமான் கைது. முந்தைய ஆட்சி யில் பொடா என்றால், இந்த ஆட்சியில் என்.எஸ்.ஏ. அதுதானே வித்தியாசம். உண்மையில் இந்திய இறை யாண்மைக்கு எதிராகச் செயல்படு கிறார்கள் என்றால், பிரிவினையைத் தூண்டும் வகையில் நடந்து கொள் கிறார்கள் என்றால் யாரைக் கைது செய்ய வேண்டும்? சிங்கள இனவெறி அரசுக்கு உதவி தமிழர்களின் வயிற் றெரிச்சலையும் வேதனையையும் கொட்டிக் கொள்ளும் மன்மோகன் சிங்கையும், சோனியா காந்தியையும், பிரணாப் முகர்ஜியையும் கைது செய்து உள்ளே போடவேண்டும்.

ஆனால் அவர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களுக்கு படி யாள் சேவகம் புரிய, கணக்குக் காட்ட, சனநாயகத்துக்காகவும், மனிதநேயத்துக்காகவும் போராடுகிற உணர்வாளர் களைக் கைது செய்து சிறையில் அடைத் திருக்கிறார் கருணாநிதி. இந்தக் கைதை மண்மொழி வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் இரு வரையும் உடனே தமிழக அரசு நிபந்த னையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிறது.

இவர்களது விடுதலைக்கு சட்டப் பூர்வ முயற்சிகளுக்கு அப்பால், இவர் களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலுள்ள சனநாயக சக்திகள் போராட வேண்டும். இனியாவது தமிழன் ஆட்சி கலைஞர் ஆட்சி என்கிற மயக்கத்திலிருந்து உணர்வாளர்கள் விடுபட்டு மாற்றுப் பாதை காண முற்படவேண்டும்.

மண்மொழி

Comments